17 Dec 2017

நதியின் பாவம்

நதியின் பாவம்
நதியாய்ப் பிறப்பதொரு பாவம்
அதன் திசையைத் தீர்மானிக்கிறார்கள்
மணலைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்
கூழாங்கற்களை அள்ளிக் கொள்கிறார்கள்
வீட்டுக்கொரு மகனை
போர்க்களத்துக்கு அனுப்புவது போல
வீட்டுக்கொரு சாக்கடைக் கால்வாயை
கலந்து விடுகிறார்கள்
கருப்பாய் நிறம் மாறி
சாக்கடையாய் ஓடும் நதியைத்
தூய்மைபடுத்துகிறோம் என நிதி ஒதுக்கி
கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்கள்
இடைமறிக்கும் ஆக்கிரமிப்புகளை
எதுவும் சொல்ல முடியாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி
பாலங்கள் மீது ஓடும் வாகனங்களை
பாலத்திற்குக் கீழ் ஓட்டமில்லாத நதி
ஏக்கப் பெருமூச்சை துர்நாற்றமாய்
வீசிய படி வேடிக்கைப் பார்க்கிறது
வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் காலத்தில்
கரையுடைத்து கோபம் காட்டலாம் என்ற
நம்பிக்கையோடு பொறுமையாக
நகர்ந்து கொண்டிருக்கிறது
கசடுகள் பெருத்த அசட்டு நதி
இந்த பாவ நதியில்
ஒரு காலத்தில் செய்த பாவங்கள் தீர
மக்கள் நீராடினர் என்பது வரலாறு.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...