13 Dec 2017

நுகர்வுக் கலாச்சாரத்தின் முந்திரிக் கொட்டைகள்!

நுகர்வுக் கலாச்சாரத்தின் முந்திரிக் கொட்டைகள்!
            தேர்தல் சின்னங்களாக எதை ஒதுக்கினாலும் அதை வாரி வழங்கும் கலியுக வள்ளல்களாக இருக்கிறார்கள் வேட்பாளர்கள். எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் முன்னோடிகளாக இருக்கிறார்கள் வாக்காளர்கள்.
            தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா என்பது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. அதுவும் தற்போதைய இடைத்தேர்தல் என்பது திருவிழாவையெல்லாம் தாண்டிய பெருவிழா.
            வாழைப் பழத்தில் ரூபாயை மறைத்து வைத்துக் கொடுக்கும் காணொளிகளைக் காணும் போது இது வாழையடி வாழையாக நம் மண்ணில் வேரூன்றி விட்ட இடைத்தேர்தல் கலாச்சாரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
            தேர்தலில் நின்று வெற்றி பெற்று தொகுதி மக்களுக்காக எவ்வளவோ செய்யலாம் இந்த வேட்பாளர்கள். வெற்றி பெற்ற பின்பு தொகுதி பெயரை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதே சிரமம் என்பதாலோ, வெற்றிக்கு முன்னரே இப்படியெல்லாம் செய்து புண்ணியம் தேடிக் கொள்கின்றனரோ என்னவோ!
            தேர்தலுக்குப் பின்பு தொகுதி மேம்பாடு அடைகிறதோ இல்லையோ, இடைத்தேர்தலுக்கு முன் தொகுதி மேம்பாடு அடைகிறது. ஆர்.கே. நகரைப் பொறுத்த வரையில் இவ்விசயத்தில் இரட்டை மேம்பாடு. ஒருமுறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மறுபடியும் மீண்டும் இப்போது நடப்பதால் இரட்டை அறுவடை என்பது ஆர்.கே. நகரின் ஜாக்பாட் ஸ்பெஷல்.
            வேட்பாளர்களாய்ப் பார்த்து, வாக்காளர்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ஓட்டுக்கு நோட்டு என்பதை திருத்த முடியாது. அதுவரை ஓட்டுக்கு நோட்டை வாங்காதீர் என்று பேசலாம், எழுதலாம், அறிவுரைப் பகரலாம்.
            அதே நேரத்தில், ஓட்டுக்கு நோட்டை வாங்க வாய்ப்பிருந்தும், அதற்கான கட்டாயம் இருந்தும் வாங்காமல் ஓட்டளிப்பதில் உறுதியோடு ஒரு சிலராவது இருக்கிறார்களே, அவர்களால்தான் இன்னும் ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகத்தின் விருப்பம் ஒரு சிலராக இருக்கும் அந்த எண்ணிக்கை பல நூறாக, பல லட்சமாக, பல கோடியாக பல்கிப் பெருக வேண்டும் என்பதுதான். பல்கிப் பெருகுவதாக அந்த எண்ணிக்கை! ஒரு நியாயமான ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைப்பதில் என்ன பேராசை இருக்க முடியும்?!

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...