பொருண்மைகள் மாறாது பொருளாசைப் பிடித்தவர்களே!
இன்னும் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வரலாம்,
அசரடிக்கலாம். விவசாயத்தை விட முடியாது.
உலகத்தில் அனைவரையும் டெக் மனிதர்களாக
மாற்றி விட்டாலும் விவசாயம் செய்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். விவசாயம்
செய்பவர்கள் டெக் மனிதர்களல்ல என்ற கண்ணோட்டமும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
பொருளாதாரக் கொள்கைகள் எப்போதும் முதலில்
கிராமங்களையே குறி வைத்துத் தாக்கும். நகரமயமாக்கலில் இருந்து கிராமங்கள் தப்பிப் பிழைப்பது
அபூர்வம்தான்.
கிராமங்கள் மேல் நேரடியாகக் கத்தி வீசப்படுகின்றன
என்பது உண்மைதான். கிராமங்கள் அருகிக் கொண்டே உருவாகிக் கொண்டே இருக்கும். கருப்பண்ணசாமிகளும்,
கன்னிமார்களும் அவதரிப்பதை எந்தக் குடும்பக் கட்டுபாடு திட்டங்களும் கட்டுக்குள் கொண்டு
வந்து விட முடியாது.
நம் அவசரங்களும், பரபரப்புகளும் நம்மை
எதற்கும் பொறுப்பேற்கச் செய்யாது. ஆனாலும் பாருங்கள், பொறுப்பானவர்கள் அதிலும் தோன்றிக்
கொண்டுதான் இருப்பார்கள்.
பணத்தைச் சம்பாதித்து விட்டால், அதிகாரத்தைக்
கைப்பற்றி விட்டால் எல்லாவற்றிலிருந்து தப்பித்து விடலாம் என்று நினைப்பவர்கள் பெருகிக்
கொண்டுதான் இருப்பார்கள். குற்ற உணர்விலிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பித்து
விட முடியாது.
சபித்தால் பலிக்காது என்று ஒரு போதும்
நினைத்து விடாதீர்கள். எப்போது பலிக்கும் என்ற கால நேரம் துல்லியமாகத் தெரியாததால்
பலிக்காதது போலத் தோன்றலாம். எந்த அதிநவீன யுகத்திலும் சாபங்கள் பலிப்பதை நிறுத்த
முடியாது.
நிறைவாக அமைதியைத் தராத ஒரு வாழ்வைப் பதற்றத்தோடு
வாழ்வதை விட, அமைதியோடு நிறைவைத் தரும் ஒரு வாழ்வை கொஞ்சம் வறுமையோடு வாழலாம். தப்பே
இல்லை!
*****
No comments:
Post a Comment