மர மண்டை அரசியல்
நாடு எப்படி இருக்கு? என்று யோசித்தான்
எஸ்.கே.
அவனுக்கு முதலில் மூளையில் எட்டியது இதுதான்
- ஓரு வீடியோவை வெளியிடாமல் களேபரம் செய்ய முடியும். வெளியிட்டும் களேபரம் செய்ய முடியும்.
அடுத்ததாக, நீயெல்லாம் ஏன்டா எழுத்தாளன்னு
சொல்லிகிட்டு அலையுறே? என்று கேள்வி கேட்ட மனசாட்சியை இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை
எஸ்.கே.வுக்கு.
சரியாகப் பேசினால் எல்லாவற்றையும் சரி
செய்ய முடியும். அதற்கு நிறைய சிந்திக்க வேண்டும். அதுதான் கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால்
தீமைகள் என்று சொல்லப்படுபவைகள் அதை விட வேகமாக சிந்தித்துக் கொண்டுப் போய்க் கொண்டு
இருக்கின்றன. எவ்வளவு சொத்து சேர்க்க வேண்டும், எவ்வளவு பணம் வைத்துக் கொள்ள வேண்டும்,
எவ்வளவு நகைகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் இந்த நாட்டில் சட்டம்
இருக்கிறது. ஆனால் அதை விட அதிகமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கும் இந்த நாட்டில்
இடம் இருக்கிறது. இப்படியெல்லாம் பணத்தை உலவ விட்டு விட்டு சாமன்யன் ஐம்பதாயிரம் பணத்தை
பரிமாற்றம் செய்வதற்கு பான் எண் கேட்கப்படும். மூன்று லட்சத்துக்கு மேல் பணமாக கையாளாதீர்கள்
எனக் கட்டுபாடு விதிக்கப்படும்.
ஒரு நாளில் சர்வ சாதாரணமாக நூறு கோடிக்கும்
மேல் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். அதற்குத் தேவையெல்லாம் சாமர்த்தியம்தான்
என்று ஆகி விட்ட பின் அது இல்லாதவர்கள் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு
இருக்க வேண்டியதுதான். சாமர்த்தியம் இருப்பவனிடம் சட்டம் தயங்கித் தயங்கிச் செல்வதும்,
அது இல்லாதவனிடம் சட்டம் நேரடியாக்ப பாய்வதும் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
இப்படியெல்லாம் அரசியல் குறித்து யோசிப்பது
சரியாகப்படவில்லை அவனுக்கு. சிந்தனையை மாற்றுவது என முடிவெடுத்தான். மரம் வளர்ப்பது
குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். அதுவும் அரசியலில் வந்துதான் முடியப் போகிறது என்பது
துவக்கத்தில் தெரியவில்லை அவனுக்கு.
ஏன் இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டித்
தள்ளி விட்டு மரம் வளர்க்க வேண்டும் என்கிறார்கள் என்று பெருங் குழப்பமாக இருந்தது
அவனுக்கு.
இவர்கள் எல்லாம் மரம் வளர்க்க வேண்டும்
என்று கோஷமிடுவதிலிருந்தே தெரியவில்லையா, இவர்கள் மரத்தை கணக்கு வழக்கு இல்லாமல் வெட்டுகிறார்கள்
என்பது.
மரத்தை வெட்டத் தெரியும் இவர்களுக்கு மரத்தை
நடத் தெரியாது. அதனால்தான் அதை இன்னொருவனை விட்டுச் செய்யச் சொல்கிறார்கள்.
மாபெரும், பிரமாண்டமான கட்டிடங்களைக் கட்டும்
இவர்களுக்கு மரம் வளர்க்கத் தெரியவில்லை என்பது கேவலமாக இருக்கும்.
இவர்கள் பூங்காக்கள் அமைத்திருக்க வேண்டியதில்லை.
நிழற்குடை அமைத்திருக்க வேண்டியதில்லை. இருந்த மரங்களை வெட்டாமல் இருந்திருந்தாலே போதுமானது.
இதற்கு மேல் யோசித்தால் மரங்களை வெட்டுவதற்குப்
பதில் எஸ்.கே.வையே வெட்டி விடும் அபாயம் இருக்கிறது என்பதால் இத்துடன் தன்னுடைய சிந்தனையை
நிறுத்திக் கொள்வதே நல்லது என்ற முடிவோடு எஸ்.கே. நிறுத்திக் கொண்டாலும் நீங்கள்
நிறுத்தாதீர்கள். தொடருங்கள்.
எஸ்.கே. கூறிய இரண்டு சங்கதிகளுக்கும்
தொடர்பு இல்லை என்று நினைத்து விடாதீர்கள். மரங்களைத் தழைக்கச் செய்யுங்கள் என்பதும்
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்யுங்கள் என்பதும் ஒரு புள்ளியில் தொடர்பு கொள்ளும். அது
எந்தப் புள்ளி என்பதை நீங்களே கண்டடையுங்கள்.
*****
No comments:
Post a Comment