யார் குற்றவாளி?
காவல் நிலையத்தில் இருக்கும் காவலாளிகள்,
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் தவிர நாட்டில் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படும்
அபாயம் இருந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக பொதுமக்கள், அதிலும் குறிப்பாக
அப்பாவிகள். அப்பாவிகள் எப்போது வேண்டுமானாலும் குற்றவாளியாக்கப்படும் அபாயக் கட்டத்தில்
இருக்கிறார்கள்.
கஞ்சா வைத்திருத்தல், பொது சொத்துக்குச்
சேதம் விளைவித்தல், விபச்சாரம் செய்தல், தேச சின்னங்களை அவமதித்தல், பணி செய்ய விடாமல்
தடுத்தல், இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டல் என்று எத்தனையோ காரணங்கள் அதற்காக உருவாக்கப்படலாம்.
சமநிலையை உருவாக்க உருவாக்கப்பட்ட சட்டம்
இன்று அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஊட்டுவதாக மாறிக் கொண்டு இருக்கிறது. சட்டத்தை
உருவாக்கியவர்கள் மேல் குறை சொல்வதாக இது பொருளாகாது. சட்டத்தைப் பிரயோகம் செய்பவர்கள்
நம்பகத்திற்கு உரியவர்களாக இல்லை. அவர்கள் அச்சுறுத்துபவர்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.
சுட்டு விட்டு துப்பாக்கியை யாரிடம் வேண்டுமானாலும் தூக்கிப் போட்டு விட முடியும்
என்பது அவர்களுக்குத் தெரியும். சாட்சியத்திற்கு துப்பாக்கி வைத்திருப்பவரைத்தான் தெரியுமே
தவிர பின்னால் நிகழ்ந்த சூழ்ச்சிகள் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
நம்மைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட
சட்டங்கள் மூலம் நம்மை பாதுகாப்பற்ற நிலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பது கேட்பதற்கு
அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. குண்டர் தடுப்புச் சட்டத்தில் குண்டர்களும்
கைது செய்யப்படலாம். அமைதியானவர்களும் கைது செய்யப்படலாம்.
சட்டத்தின் மேல் அதிகாரம் ஒரு நிழலைப்
போல துஷ்பிரயோகமாகப் படிவதை விழிப்போடு நாம்தான் கண்காணிக்க வேண்டும். அதற்காக ஒட்டு
மொத்தமாக நம் குரல்கள் ஓங்கி ஒலிக்குமானால்
துஷ்பிரயோகங்கள் ஒருபோதும் பிரயோகமாகாது. அப்படி குரல்கள் ஒன்றிணைந்து ஓங்கி ஒலிக்காது
என்பதுதான் துஷ்பிரயோகங்களுக்கு பெரும் யோகமாக இருக்கிறது.
நாம் பிரிந்து கிடப்பவர்கள், எப்போதும்
பிரிவினைக்குத் தயாராக இருப்பவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தனித்தனியாக ஒலிக்கும்
குரல்கள் கூச்சலாகி விடும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஒன்றிணையும் குரல்
முழக்கமாகிறது. முழக்கமாகும் முன் குரல்கள் முடக்கப்படுவதுதான் வரலாற்றில் சட்டத்தைக்
கையிலெடுத்து சட்டாம்பிள்ளையாக நடப்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
*****
No comments:
Post a Comment