மனசு கிலேசமாக இருக்கு மக்கா!
1) பாக்கியராஜ், டி.ராஜேந்தர் (விஜய டி.ராஜேந்தர்)
இவர்கள் எல்லாம் ஆரம்பித்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், இந்நேரம் தன்னம்பிக்கை
கொடி கட்டிப் பறந்திருக்கும். தன்னம்பிக்கைக்கு நேர்ந்த கொடுமை மற்றும் துரதிர்ஷ்டம்,
அப்படி ஏதும் நடக்கவில்லை. இதனால் சகலமானவர்களுக்கும்... தன்னம்பிக்கையால் மட்டும்
எல்லாவற்றையும் சாதிக்க முடியாது என ருதுவாயிற்று.
2) நடுத்தர வர்க்க வாக்காளனின் பணிவான
விண்ணப்பம் என்னவென்றால்... குக்கர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர் என
எல்லாம் பெற்றுக் கொண்டு விட்டதால் - இவைகளெல்லாம் பழுதாகி வீணாகும் வரை அல்லது கன்டெம்ப்ட்
ஆகும் வரை உடனே இடைத்தேர்தல் வைக்காமல் சற்று தள்ளி வைக்கும் படி சமூகத்தை சாஸ்டாங்கமாக
நமஸ்கரித்து வேண்டிக் கொள்வதென முடிவாகிறது.
3) விரலில் மை இருந்தால்தான் வாக்களித்ததற்கு
நோட்டு தருவதாகப் பரவும் தகவல் மன கிலேசத்தை அதிகரிக்கிறது. மை வைக்க மறந்து ஓட்டுப்
போட்டவர்களும் இருக்கக் கூடும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்
கூடாது அன்றோ! வாக்களிக்காத ஆயிரம் பேர் பணம் பெற்றுக் கொண்டாலும், வாக்களித்த ஒருவன்
பணம் பெறாமல் போய் விடக் கூடாது அல்லவா! ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து வாக்களித்த அனைவர்க்கும்
(மை வைக்க விடுபட்டவர்கள் உட்பட) நோட்டு கிடைக்க ஏற்பாடு செய்து, வாக்களித்தவர்கள்
மத்தியில் நோட்டு கிடைக்காதோ, கிடைக்குமோ என ஏற்பட்டு இருக்கும் அபிப்ராய பேதத்தையும்,
பயப் பதற்றத்தையும் ரொம்ப ஜாக்கிரதையாகத் தணிக்க வேண்டும். உளவியல் ரீதியான இந்த அச்சத்தைக்
களைய வேண்டிய பொறுப்பு உரியவர்களுக்கு இருக்கிறது.
*****
No comments:
Post a Comment