18 Dec 2017

மகாபாரதம் - முடிவில்லாத விவாதம்

மகாபாரதம் - முடிவில்லாத விவாதம்
            மனவெளியில் தொடர்ந்து விவாதங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பதுதான் தர்க்கம். எதற்காக விவாதத்தைத் தொடங்கினோமோ அது முடிந்த பிறகும் விவாதம் தொடரும். தர்க்கத்திற்கு முடிவில்லை. அது முடிவான உண்மையை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கும்.
            மகாபாரதத்தில் போர் முடிந்த பிறகும் விவாதம் தொடரும். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதற்கேற்ப இறுதியாக அது வீடுபேற்றைத் தேடுகிறது என்று சொல்லலாம். என்றாலும் அதன் விவாதம் கதைகளாக, வழக்கியல்களாக, தொன்மவியலாக இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
            மகாபாரதத்தை எதிர்நிலையில் பார்த்து பதிவு செய்த எழுத்துகளும் சிறப்போடு இன்று விவாதிக்கப்படுகிறது.
            பிரமாண்டமாகப் பார்த்து வியக்கும் அதன் நாயக பிம்பத்தை கடைசியில் உடைத்துச் சாமான்யமாக மாற்றும் நிலையாமையையும் அது பேசுகிறது. சமாளிக்க முடியாத நிகழ்வுகள் கடவுளுக்கும் உண்டு என்பதை அது மறுக்காமல் சொல்கிறது. பலமாக திகழ்ந்த அத்தனை ஆளுமைகளின் பலகீனங்களையும், பலகீனமாகத் திகழ்ந்த அத்தனை ஆளுமைகளின் பலங்களையும் கூட அது இறுதியில் பட்டியல் போடுகிறது.
            மகாபாரதத்தைப் பொருத்த வரையில் அது நிகழ்வுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற சாராம்சத்தின் உள்ளடக்கமாக தொடர்ந்து அது விவாதத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கிறது. அதற்கான கண்டனங்களையும் எதிர்கொள்கிறது.
            ஏகப்பட்ட முரண்பாடுகளை அது கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அம்முரண்பாடுகள் சம்பவங்கள் ஆனால் விளைவுகள் எப்படி இருக்கலாம் என்று மனவெளியில் விவாதித்துப் பார்க்கிறது. வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் சொல்லி விட வேண்டும் வேட்கை அதில் தொனிக்கிறது.
            ஏற்கப்பட்ட மனிதர்களைப் போல ஏற்கப்படாத மனிதர்களையும் அது கவனத்தில் கொள்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களைப் போல அங்கீகரிக்கப்படாத மனிதர்களும் அதன் பாத்திரங்களாக உலாவுகிறார்கள்.
            அரச குடும்பங்களின் குடும்பச் சிக்கலாகவும், குடும்பச் சிக்கல்களின் அரசியல் வடிவாகவும் அது எப்படி வேண்டுமானாலும் தோற்றம் கொள்ளும். அது முடிவில் அப்பாவிகளை அழிக்கும் போராக உருப்பெறக் கூடும் என்பதற்கு முதல் அறிகுறி காட்டிய கதை அதுதான்.
            எதிர்நிலையில் நின்று பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பையும் அது வழங்குகிறது. விருப்பப்படுபவர்கள் கர்ணனை உயர்வான ஒரு பாத்திரமாக எடுத்து விரித்துக் கொள்ளலாம். எல்லா பாத்திரங்களுக்கும் அது நாயக பிம்பத்தை வழங்குகிறது. இறுதியில் அடித்தும் நொறுக்குகிறது. அர்ச்சுனன் இறுதியில் வலிமையிழந்து சாகிறான். துரியோதனன் நேருக்கு நேர் போரிட்டு வீரனாகச் சாகிறான்.
            கர்ணனுக்குக் கிடைக்கும் வீரமரணம் கிருஷ்ணனுக்குக் கிடைக்கவில்லை. கிருஷ்ணன் தவக்கோலத்தில் இருக்கும் போது வேடனால் அம்பெய்து வீழ்த்தப்படுகிறான்.
            அத்தனை விதமான அட்டூழியங்களையும், அழிச்சாட்டியங்களையும் அது தன்னுள் முயன்று பார்க்கிறது. உண்மையில் அத்தனை சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காலம் காலமாக மனிதர்களின் மனதில் தொடர்ந்த கதையில் புதுப்புது சம்பவங்கள், குழப்பங்கள், சிக்கல்கள் பிறப்பெடுத்து காவியத்தோடு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
            உண்மையாக நிகழ்ந்த கதை இருபது சதவீதம் என்றால் புனைவியலாக உருக்கொண்ட எண்பது சதவீதம் அக்கதையை உள்வாங்கிய மற்ற பல்வேறு மனிதர்களின் மனதில் உருக்கொண்டதாக, அவர்களின் வாழ்வில் நடந்ததாகக் கூட இருக்கலாம்.
            மனவிவாதம் அதற்கு முக்கியம். எழுத்தின் ஆதார சுருதியும் அதுதான்.   

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...