8 Dec 2017

ஒழுங்கிற்காக ஒழுக்கக் கேட்டில் நிற்காமலிருப்பதே அறம்!

ஒழுங்கிற்காக ஒழுக்கக் கேட்டில் நிற்காமலிருப்பதே அறம்!
            சீரியஸாக வேலை செய்வதில் ஆரம்பிக்கிறது அது. பிறகு அது ஓர் ஒழுங்கில் சென்று முடிகிறது. அந்த ஒழுங்கை மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. மனம் எதிர்பார்க்கத் தொடங்கும்.
            மனம் தான்  எப்படி ஓர் ஒழுங்கில் இருக்கிறதோ, அப்படி ஓர் ஒழுங்கை எல்லாரிடமும் எதிர்பார்க்கும். அப்படி இருக்குமா என்ன? நிச்சயம் இருக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது மனதுக்குப் பிடிக்காது.
            தான் எதிர்பார்க்கும் ஒழுங்கு இல்லையென்றும், அதுவே உயர்ந்த ஒழுங்கு என்றும், அஃது இல்லாதவர்களைக் குறை சொல்ல ஆரம்பிக்கும் மனம்.
            குறை சொல்லுதல் அன்றோ கொஞ்சம் கொஞ்சமாக மனதின் நிறைவின்மையாக வெளிப்பட ஆரம்பிக்கும். மன நிறைவின்மையோடு எத்தனை நாள் வாழ்வது? அதை நிவர்த்திச் செய்ய மற்றவர்களை சரிபடுத்த நினைக்கும் மனசு.
            சரிபடுத்திக் கொள்ள வேண்டியது தன்னைத்தானே. அதை உணருமா மனசு? பாவம் மனசு! அதனால் தன்னையும் சரி செய்து கொள்ள முடியாமல், மற்றவர்களையும் சரிபடுத்த முடியாமல் நிராதவராக நிற்கும். இந்த இடத்துக்கு மனஉளைச்சல் என்றும் பெயர் சொல்லலாம், மன அழுத்தம் என்றும் பெயர் கொடுக்கலாம். அவரவரின் மன நெருக்கடியைப் பொருத்தது அது.
            ஓர் ஒழுங்கு என்பது உங்களுக்குத்தான். அதை மற்றவர்கள் உணரும் வரை பொறுமையோடு இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மன ஒழுங்கு. மற்றவையெல்லாம் ஒழுங்கு என்ற பெயரில் போடப்படும் வேஷங்களே.
            இதில் அறம் என்பது நீங்கள் நினைக்கும் ஒழுங்கைக் காட்டி மற்றவர்களுக்கு தீமை செய்யாதிருப்பதே!
            இதில் அரசியல் பிரதிபலிப்பதாகத் தெரிந்தால் - அப்படி ஏதேனும் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் - ஒருவேளை உண்மையும் அப்படியே இருந்தால் -காலந்தோறும் அப்படி ஒலித்துக் கொண்டிருக்கும் அறத்தின் குரல்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...