21 Dec 2017

சாதியச் சேற்றின் வன்மம் பேசும் சி.எம். முத்துவின் 'கறிச்சோறு'

சாதியச் சேற்றின் வன்மம் பேசும் சி.எம். முத்துவின் 'கறிச்சோறு'
            எழுதுவது எல்லாருக்கும் இயலும். உண்மையாய் எழுதுவது அசாத்தியம். புனைவை உண்மைக்கு வெகு அருகில் வைத்து உண்மைக்கு உண்மையாய் இருந்து உண்மையாய் எழுதுவது வெகு அசாத்தியம்.
            சி.எம். முத்துவின் 'கறிச்சோறு' நாவல் படித்த போது அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத எழுத்து. உண்மையை இவ்வளவு அசால்ட்டாக கலைத்துப் போட முடியுமா ஓர் எழுத்து? அதுவும் எந்த வித அலங்காரமும் இல்லாமல், எந்த விதமான உணர்ச்சித் தூண்டுதலும் சிறிதேனும் இல்லாமல்?
            அது அப்படித்தான் நிகழ்கிறது என்பதைப் புனைவின் கற்பனையைக் கொண்டு கிஞ்சித்தும் மாற்ற விரும்பவில்லை சி.எம். முத்து. உள்ளதை உள்ளபடி எது நிசமோ அதை அப்படியே பதிவு செய்து இருக்கிறார் அந்த வெள்ளந்தி எழுத்தாள மனிதர்.
            சாதிக்குள் நிகழும் உட்சாதிப் பிரச்சனையை, அதன் மூலம் நிகழும் கெளரவக் கொலையைச் சாட்சியப்படுத்துகிறார் முத்து. சாதிப் பிரச்சனை தமிழகம் அறிந்தது. சாதிக்குள் நிகழும் உட்சாதிப் பிரச்சனை பெருவாரியாக அறியப்படாதது. அதை அவ்வளவு நுட்பமாக அதற்கான உளவியில் சிடுக்கள் உட்பட ஒருசார்பற்றுப் பேசுகிறார்.
            சி.எம். முத்துவின் நாவலில் எந்த விதமான நீதி சொல்லலும் இல்லை. மனித நேசத்தை மட்டும் தட்டுப்படுகிற இடங்களில் எல்லாம் எழுதிச் செல்கிறார்.
            விசம் உடனே கொன்னுடும், மருந்து மெதுவாகத்தான் குணப்படுத்தும் என்று நாவலின் ஓரிடத்தில் சி.எம். முத்து சொல்கிறார். உண்மைதானே. சாதி எனும் விசம் உடனே பாய்ந்து விடுகிறது. மனித நேசத்தைத்தான் மருந்தைப் போல மீண்டும் மீண்டும் கொடுத்து மெது மெதுவாகத்தான் குணப்படுத்த முடிகிறது.
            சாதி இல்லாமல் கிராமங்களில் வாழ முடியாது என்பது சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை. இப்போதும் பெரிதாக நிலைமை மாறி விடவில்லை என்பதை சங்கருக்கு நேர்ந்த படுகொலை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            சாதி வெறியர்கள் வெகு சமர்த்தர்களாகச் செயல்படுகிறார்கள். சாதியைத் தூக்கிப் பிடிக்காதது போன்ற தோற்றத்தைத் தந்து சாதியை மறைமுகமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கெளரவக் கொலைகள் மூலம் சாதியக் கட்டுமானத்தை உடைப்பவர்களுக்கு எதிராக ஓர் உளவியல் அச்சத்தை விதைக்கிறார்கள்.
            கிராமம், நகரம் என்ற பேதமில்லாமல் இன்று சாதி எனும் விசக் காற்று பரவுகிறது. சாதித் தூய்மை என்பதில் வன்மமான ஓர் அரசியல் இருக்கிறது. சாதி எனும் பெயரில் தன்னைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும் தனிமனித ஒழுக்கத்தில் தாழ்ந்து நிற்பதையும் சி.எம். முத்து நாவலில் காட்சிப்படுத்துகிறார், ஆவணப்படுத்துகிறார் என்று சொன்னாலும் பிழையில்லை.
            தனது வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ள, தனது அக்கிரம அராஜகங்களை மறைத்துக் கொள்ள ஒரு சமூகப் பாதுகாப்பைத் தேடும் ஒரு மனிதன்தான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறான். சாதி அவனது தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் ஒரு கேடயமாக இருக்கிறது. தனது கேடயத்தையே அவன் ஆயுதமாகப் பிரயோகிக்கும் அயோக்கியத்தனத்துக்கும் சாதியே அவனுக்கு போதையூட்டுகிறது.
            சாதி இருந்தால்தான் சமூக ஒழுங்கு இருக்கும் என்று சொல்லும் உன்னிடம் ஏன் தனிமனித ஒழுங்கு இல்லை? பொண்டாட்டி மட்டும் உன் சாதியில் வேண்டும், வைப்பாட்டி மட்டும் கீழ்ச் சாதியில் வேண்டும் என்றால் உன் சாதியின் லட்சணம் எதற்கு என்று தெரியாதா என்ன? - நாவலைப் படித்து முடிப்பவர்கள் மேற்காணும் இரண்டு கேள்விகளை நோக்கி தானாகவே வந்து விடுவார்கள்.
            பெரிய மனுசன் என்ற பெயரில் அயோக்கியத்தனங்களை மறைக்க வாய்ப்பாகவும், வசதியாகவும் இருப்பதாலே எந்தப் பெரிய மனுசனும்(!) சாதியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.
            மனித நேயத்தைத் தூக்கி எறிவதற்குப் பெயர்தான் சாதி என்றால், அந்தச் சாதியைத் தூக்கி எறிவதுதான் மனிதத் தன்மை.
            உயர்ந்த மனிதர்கள் ஒருபோதும் சாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை. சாதியைத் தூக்கிப் பிடிக்கும் மனிதர்கள் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை, நரபலி கேட்கும் மிருகங்களே என்பதை தன் நாவல் மூலம் நிறுவி விடும் சி.எம். முத்து ஒரு எழுத்துப் போராளி.
            சி.எம். முத்து போல எழுதுவதற்கு சி.எம். முத்துவால் மட்டுமே முடியும். எழுத்தாளர்களில் துணிச்சலானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். நிஜமான துணிச்சல்காரர்கள் ரொம்பவே கம்மி. சி.எம். முத்து அவர்களில் ஒருவர்.

*****

3 comments:

  1. அருமையான பதிவு ஐயா!
    சில மாதங்களுக்கு முன் தடம் இதழில் சி.எம்.முத்து அவர்களின் பேட்டி படித்தேன். அசலானது. அதே போன்று அவரின் எழுத்தும் இருப்பதை உங்கள் பதிவு மூலம் அறிகிறேன். விரைவில் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் பதிவு.. நன்றி.

    ReplyDelete
  2. அவசியம் வாசியுங்கள் ஐயா! எளிமையான மனிதரின் வலிமையான வார்த்தைகளை தரிசிப்பீர்கள்!

    ReplyDelete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...