புரிந்து கொள்ளப்படாத அன்பு
இந்த உலகில் அதிகம் புரிந்து கொள்ளப்படாமல்
போனது அன்புதான். எல்லாருக்கும் தம் மீது எல்லாரும் அன்பு செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
இருக்கும். தாம் யார் மீதும் அன்பு செலுத்த ஆர்வம் இல்லாமல் போனாலும் அப்படி ஓர் எதிர்பார்ப்பு
எல்லாரிடமும் இருக்கும்.
எல்லாருக்கும் அன்பு தேவையாக இருக்கிறது.
அன்பின் தேவை உலகில் அதிகம்.
தம் மீது அன்பு செலுத்தும் மனிதர்களைத்தான்
இந்த மனிதர்கள் அதிகம் சோதிக்கின்றனர். அன்பை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அன்பு
செலுத்துபவர்களை சுரண்டுவது அன்பின் பெயரால் இந்த உலகில் நீண்ட காலம் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்காகவெல்லாம் இந்த உலகில் அன்பு வற்றி விட வில்லை. நிரம்பி வழியவுமில்லை. பொங்கிப்
பிரவாகிக்காமல் போனாலும் அன்பு இருந்து கொண்டே இருக்கிறது.
எந்த அன்பை இந்த மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லையோ,
அந்த அன்பை இழந்த பின்பு அதிகம் வருந்துகிறார்கள். இருக்கும் போது அன்பு ஒரு விலைமதிப்பில்லாத
பொருளாக இருந்து, இழந்த பின்பு விலைமதிப்பற்றதாக மாறுகிறது.
அன்பைக் கொண்டு இந்த உலகில் சாதிக்கப்பட்ட
சாதனைகள்தான் நிலையானது என்று தெரிந்தும் அன்பை நாம் தள்ளி வைக்கிறோம். அன்பு மூலமாக
சாதிக்கும் காரியத்திற்கு நீண்ட காலம் ஆகிறது என்ற காரணம் அதற்காக முன் வைக்கப்படுகிறது.
இந்த உலகில் எல்லாம் அவசரமாகி விட்டது. அவசரமாக சாதிக்க வேண்டும் என்று அலங்கோலமாக
சாதித்துக் கொண்டு இருக்கிறது உலகம்.
அன்பு காலம் தாழ்த்தித்தான் சாதிக்கிறது.
அது அலங்கோலம் செய்து விடுவதில்லை. பின்விளைவுகள் இல்லாத சாதனைதானே உண்மையான சாதனை.
அதை அன்பு சாத்தியப்படுத்துகிறது. அதை நாம் சத்தியப்படுத்த வேண்டும்.
*****
No comments:
Post a Comment