அதி தீவிரப் புத்தகக் காதலர்களுக்கு...!
எஸ்.கே. அவன் போக்கிற்கு எழுதுகின்ற ஆள்.
யாருக்கும் கட்டுப்பட்டு அவனால் எழுத இயலாது. குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு
எழுதுவதெல்லாம் அவனது அகராதியில் கிடையவே கிடையாது.
அவன் அதிகமாக எழுதித் தள்ளுவது போல அவ்வபோது
அவன் எழுதுவதே இல்லை. அப்போது அவன் அதிகமாக வாசித்துக் கொண்டிருப்பான்.
நன்றாக இனிப்பைச் சாப்பிட்டு விட்டு, திகட்டலைப்
போக்க கொஞ்சம் காரம் சாப்பிடுவது போல, நாவலைப் படித்து விட்டு கொஞ்சம் கவிதைப்
படிப்பான். அப்படியே கிறுகிறுக்க கொஞ்சம் சிறுகதையும் உண்டு. துணுக்குகள் படிப்பதில்
அலாதிப் பிரியம். ஆனாலும் அவன் துணுக்குகள் எழுதுவதில்லை.
இந்தப் பீடிகையெல்லாம் எதற்கு என்றால்...
தீவிர நூல் சேகரிப்பாளர்களை எஸ்.கே.வுக்குப்
பிடிக்காது. அவர்கள் ஏன் இவ்வளவு அதிதீவிரமாக கிட்டதட்ட மனநோயாளிகள் போல் நூல்கள்
விசயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்று அவன் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறான்.
சாதாரணமாக அவர்கள் புத்தகங்களைப் பாதுகாக்க
வேண்டும் என்று நோக்கில் வாசகர்களைச் சிதைக்கிறார்கள். தொட்டுப் பார்த்தாலே புத்தகங்களின்
கற்பு சிதைந்த விடும் என்று நினைக்கிறார்கள். கஞ்சனின் கையில் இருக்கும் செல்லாக் காசும்,
அவர்களின் கையில் இருக்கும் உயர்ந்த புத்தகமும் ஒன்றெனக் கருதுகிறான் எஸ்.கே. இதற்காக
அதாவது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பதற்காக எஸ்.கே.வை நீங்கள் திட்டலாம்.
புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் கூட பரவாயில்லை.
பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. எழுத்தாளனின் ஆன்மா அங்கே இறந்து
கிடப்பதை அதி தீவிரப் புத்தகக் காவலர்கள் அறிய மாட்டார்கள்.
உங்கள் புத்தகங்களைப் படிக்கக் கொடுங்கள்.
குறிப்பாக எஸ்.கே. கேட்கும் பட்சத்தில் தயவுசெய்து கொடுத்து விடுங்கள். அவன் விரும்பிக்
கேட்கும் புத்தகம் சத்தியமாக உங்களுக்குப் பயன்படாது. அப்படிப்பட்ட புத்தகங்களைத்தான்
அவன் கேட்பான் மற்றும் படிப்பான். படிக்க முடியாத புத்தகங்களை எஸ்.கே.விடம் தள்ளி விடுவது
ஒரு நல்ல உத்தி. எஸ்.கே. அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான்.
இதிலிருந்து சொல்லப்படும் செய்தி என்னவென்றால்,
நீண்ட காலத்துக்கு முன் வாங்கி இன்னும் படிக்கப்படாமல் இருக்கும் புத்தகம் உங்கள் கைகளை
விட்டு பறக்க வேண்டிய பறவை. இதில் எஸ்.கே.வின் அன்பான வேண்டுகொள் என்னவென்றால், சிறைக்கதவுகளைத்
திறந்து விடுங்கள்!
*****
No comments:
Post a Comment