ஜனநாயகம் தப்பித்துக் கொள்வது நல்லது!
கூற்று
1 -
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறைக்குச்
சென்று வந்த உத்தமர்கள் தேர்தலில் நின்ற காலம் உண்டு. இன்றும் அப்படித்தான், ஏதோ ஒரு
காரணத்துக்காக சிறைக்குச் சென்று வந்த உத்தமர்களே(!) தேர்தலில் நிற்கிறார்கள்.
கூற்று 2 -
நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விட்டது
என்று யார் சொன்னது? ஓர் இடைத்தேர்தல் போதும் நாட்டின் பணப்புழக்கத்தை அகில உலகிற்கும்
காட்ட.
கூற்று 3 -
போகப் போக ஒட்டுமொத்த இந்திய தேசத்துக்கு
நடத்தப்படும் தேர்தலை விட இடைத்தேர்தலை நடத்துவது கஷ்டமாகி விடும் போலிருக்கிறது.
மேற்காணும் மூன்று கூற்றுகளோடு சாமானியனின்
நடைமுறையையும், எதார்த்தத்தையும், இயலாமையையும் இணைத்துப் பார்த்தால்.... மண்டை கழன்று
கீழே விழுவது போல இருக்கிறது.
நீங்களே கொஞ்சம் கீழே பாருங்களேன்!
சாமானியன் ஓர் ஐம்பதாயிரம் பணத்தை எடுக்கப்
போட பான் எண், ஆதார் எண் கொடுத்து அல்லல்படும் காலக்கட்டத்தில் இவ்வளவு பணம் எப்படி
வெளிவருகிறது? எவ்வாறு வெளிவருகிறது? அது அது வர வேண்டிய நேரத்தில் எப்படி வர வேண்டுமோ,
எங்கே வர வேண்டுமோ அப்படி வரும் போல! அதாவது சூப்பர் ஸ்டாரைப் போல!
சில வங்கிகள் பான் எண், ஆதார் எண் விசயத்தில்
ஸ்ட்ரிக்டோ ஸ்ட்ரிக்ட். அவற்றின் நகல்களைக் வாங்கி அதன் அடியில் கையெழுத்து வேறு பெற்றுக்
கொள்வது தனிக்கதை. அவ்வளவு சின்சியர் ஆபிசர்கள் நிறைந்த நாடு இது. அவர்களின் கண்ணில்
மண்ணைத் தூவி ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்ட நோட்டுகள் எப்படி இப்படி
கட்டுக் கட்டாக உலாவுகின்றன? சென்னைக்குப் புயல் கால பெருவெள்ளமும், இடைத் தேர்தல்
பணவிநியோகமும் தவிர்க்க முடியாத இரண்டு கண்கள் போலும்.
இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஆர்டர்
கொடுத்து அச்சடித்து வாங்கி வந்து விநியோகிப்பது போல இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு
தொகுதியில் நோட்டு விளையாடுவது வீட்டுக்கு நல்லதாகப் படலாம். நாட்டுக்கு நல்லதல்ல.
டீமானிட்டைஷேசன் விளைவாக இனிவரும் காலங்களில்
ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் என்றார்கள்.
ஆனால் இப்போது இந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம்.... தேர்தல் காலத்துக்கு அது பொருந்தாது
போலும்.
துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பார்களே.
இனிவரும் காலங்களில் இடைத்தேர்தலைக் கண்டால் ஜனநாயகம் ஓடி ஒளிந்து தூர விலகித் தப்பித்துக்
கொள்வதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது.
*****
No comments:
Post a Comment