3 Nov 2017

கருத்தாக்கத்தில் கொஞ்சம் கவனம் வையுங்கள்!

கருத்தாக்கத்தில் கொஞ்சம் கவனம் வையுங்கள்!
            யாரிடமும் எதிர்மறையாகப் பேசாதீர்கள். எல்லாரிடமும் நேர்மறையாகப் பேசுங்கள். மிக மோசமான கெட்டவர்கள் எனும் கருதப்படுபவர்களிடமும் ஏதேனும் ஒரு நல்ல பண்பு இருக்கும். அதைப் பாராட்டிப் பேசுங்கள். எதிர்மறையாகப் பேசி அவர்களைக் கோபப்படுத்துவதை விட, நேர்மறையாகப் பேசி எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவது ஒரு நல்ல நடத்தை மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
            யாரும் தன்னிடம் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. எல்லாரும் தான் புகழப்பட வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். அப்படியானால் அதை அவர்களுக்குக் கொடுப்பதில் பிழையென்ன நேர்ந்து விடப் போகிறது? அவர்களை ஆத்திரப்படுத்தி என்ன ஆகப் போகிறது? அவர்களும் பதிலுக்கு நம்மை ஆத்திரப்படுத்துவார்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ அதையே அவர்களும் நமக்கும் திருப்பிக் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு அறிவுரையைக் கொடுத்தால் அவரும் பதிலுக்கு நமக்கு அறிவுரையையே திருப்பிக் கொடுக்க நினைக்கிறார், அதாவது எள்ளை விதை்து விட்டு கொள்ளை எதிர்பார்க்க முடியாது என்பது போல!
            எல்லாரிடமும் சின்ன சின்ன நல்ல அம்சங்கள் இருக்கும். அதை மட்டும் பேசுங்கள். அவர் படிப்படியாக பல நல்ல அம்சங்களை நோக்கி வந்து விடுவார். ஒருவரிடம் ஒரே ஒரு சின்ன கெட்ட அம்சம் இருக்கும். அதை மட்டும் சுட்டிக்காட்டிப் பேசினால் படிப்படியாக அவர் எல்லா கெட்ட அம்சங்களை நோக்கி வந்து விடுவார்.
            சில மாணவர்களைக் கையாளும் போது, ஒரு ஆசிரியருக்கு மோசமான மாணவராகத் தெரியும் ஒரு மாணவர், இன்னொரு ஆசிரியருக்கு கையாள எளிய மாணவராகத் தெரிவார். ஓர் ஆசிரியர் அம்மாணவனின் சின்ன சின்ன கெட்ட விசயங்களைப் பெரிதுபடுத்துபவராக இருப்பார். அவருக்கு அம்மாணவன் மோசமானவனாகத் தோற்றம் தருவான். அதுவே இன்னொரு ஆசிரியருக்கு அம்மாணவனின் சின்ன சின்ன நல்ல விசயங்களும் பெரியதாகத் தெரியும். அவ்வாசிரியருக்கு அம்மாணவன் நல்ல மாணவனாகத் தோற்றம் தருவான். ஆகவே நாம் பார்க்கின்ற பார்வை முக்கியமானது. ஒரு மாணவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுவதில் அந்த ஆசிரியரின் பார்வை முக்கிய பங்கை வகிக்கிறது. அது போலவே ஒவ்வொரு மனிதருக்கும் மற்ற மனிதர்கள் குறித்த பார்வை முக்கியமானது. அதுதான் மனிதருக்கு மனிதர் நல்லவனாகவும், கெட்டவனாகவும் தோற்றம் தரும் ஒரு கருத்தாக்கத்தைத் தருகிறது. இந்தக் கருத்தாக்கமே ஒரு மனிதனின் அணுகுமுறை, செயல்களைத் தீர்மானிக்கிறது. ஒருவரை நல்லவர் என்று கருதுகிற கருத்தாக்கம் நல்ல முறையில் அணுகச் செய்யும். கெட்டவர் என்று கருதுகிற கருத்தாக்கம் மிக மோசமாக அணுகச் செய்யும்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...