7 Nov 2017

பேபி ஹால்தார் - பெண் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம்!

பேபி ஹால்தார் - பெண் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம்!
            வாழ்க்கையிலிருந்து எழுதப்படுவதே இலக்கியம். இலக்கியம் சில புனைவுகளைப் பூண்டு நகாசுகளைச் செய்து கொள்கிறது.
            புனைவுகளை நகாசுகளாகப் பூசிக் கொண்ட இலக்கியம் போல் ஒருவரின் உண்மை வாழ்வு அமைந்து, அது அப்படியே சுயசரிதை நாவலாக வடிவம் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பேபி ஹால்தாரின் வாழ்க்கை.
            பேபி ஹால்தார் எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு நாவல் போல் விரிகின்றன. ஒரு புனைவு நாவலைத் தோற்கடித்து விடக் கூடியவை அவருடைய வாழ்வு.
            பேபி ஹால்தாரின் வாழ்வு 'ஆலோ அந்தாரி' என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்ப்பாகி, 'எ லைப் லெஸ் ஆர்டினரி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி அது மீண்டும் 'விடியலை நோக்கி...' என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. இத்தனை மொழி மாற்றங்களையும் கடந்தும் நாவலின் உயிர்ப்பு அப்படியே இருக்கிறது. வாழ்க்கையின் வலிகளை மொழி சிதைத்து விடுவதில்லை.
            புனைவகளற்ற ஒரு எழுத்து ஒரு புனைவு இலக்கியத்தைப் போல் தோற்றம் கொள்வதுதான் மனித வாழ்வு அண்மைக் காலங்களில் அடைந்த மிகப் பெரிய மாற்றம். பேபியின் எழுத்திலும் அவரது வாழ்க்கைக் களமான அவரது சுயசரிதை நாவலிலும் அதுவே நேர்ந்திருக்கிறது.
            பேபியின் அப்பாவின் பொறுப்பற்றத் தனத்தால் மனம் நொந்த பேபியின் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் வெளியேறுகிறாள். பேபியின் துயர வாழ்வு ஆரம்பமாகிறது. அப்பா மறுமணம் செய்து கொள்கிறார். அவளின் துயர வாழ்வு மேலும் துயரமாகிறது.
            நன்றாகப் படிக்கும் பேபிக்கு அந்த வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு அவள் வாழ்வில் கொஞ்சமேனும் தொக்கி நிற்கும் இன்ப வாழ்வு முற்றிலும் அழித்தொழிக்கப்படுகிறது.
            பேபி மிக இள வயதிலேயே சங்கருக்கு மணம் முடிக்கப்படுகிறாள். திருமண வாழ்வு மூலமும் மற்றொரு துயர வாழ்வின் அத்தியாயம் தொடங்குகிறது. அந்த மிக இள வயதிலேயே தானே சென்று ஒரு மருத்துவமனையில் சென்று சேர்ந்து துயரமான முதல் பிரசவத்தை எதிர்கொள்கிறாள்.
            கணவனிடம் அடிவாங்கி ஒரு கருச்சிதைவை எதிர்கொள்கிறாள். வயிற்றில் வலியோடு சிதைந்த கருவை வெளியேற்ற அவள் அலையும் அலைச்சலைத் தாண்டியும் அவள் ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைக்குத் தாயாகிறாள்.
            கணவனோடு தொடரும் பிணக்கு, அவனால் காட்டமின்றி அவளுக்கு நேரும் அடிகள், உதைகள், இழிமொழிகள் எல்லாம் சேர்ந்து அவளை தன் மூன்று பிள்ளைகளோடு டில்லி நோக்கி ரயிலேற வைக்கிறது.
            வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரியாக மெகாசீரியல் போல் தொடரும் அவளது துயர வாழ்வு பிரமோத் குமாரின் வீட்டில் வேலைக்குச் சேரும் வரை நீடிக்கிறது.
            பிரபோத் குமார் பிரபல வாங்காள எழுத்தாளர் பிரேம்சந்தின் பேரன். அவரது வீட்டில்தான் பேபி தன் வாழ்வை மீட்டு எடுக்கிறாள். பிரபோத் குமார் பேபியை வேலைக்காரியாகப் பார்க்காமல் மகளாகப் பார்க்கிறார். பேபியும் பிரபோத் குமாரை தாதுஷாக (தந்தையாக) பார்க்கிறாள். தன்னை தாதுஷ் (தந்தை) என்றுதான் கூப்பிட வேண்டும் பேபிக்கு பிரபோத் குமார் அன்பு கட்டளையிடுகிறார்.
            ஒரு நாள் பிரபோத் குமாரின் புத்தக அலமாரியைத் துடைத்து வைக்கும் பேபி அங்கிருக்கும் நூல்களை ஆவலாகப் பார்க்கிறாள். பிரபோத் குமார் அதனை கவனிக்கிறார். பேபியை வாசிக்கத் தூண்டுகிறார். பேபியின் வாசிப்புத் தொடக்கம் தஸ்லீமா நஸ்ரினீல் தொடங்குகிறது.
            பிரமோத் பேபியை எழுதத் தூண்டுகிறார். பேபி தன் வாழ்வை எழுதத் தொடங்குகிறாள். பேபி வங்காளியில் எழுதியதை பிரமோத் இந்தியில் 'ஆலோ அந்தாரி' ஆக்குகிறார். ஆலோ அந்தாரி ஆங்கிலத்தில் 'எ லைப் லெஸ் ஆர்டினரி' ஆகிறது.
            பேபியின் வாழ்வு இந்தியப் பெண்களின் வாழ்க்கையை நகலில்லாமல் படம் பிடிக்கிறது. ஆண்களால் பெண்கள் எப்படி நிராதவராக்கப்படுகிறார்கள் என்பதைத் தோலுரிக்கிறது.
            பெண்களை விட ஆண்கள் அதிகம் படிக்க வேண்டிய சுயசரிதை நாவல் இது. அவர்களின் உளவியல் எப்படி இயங்குகிறது என்று தெரியாமல் அவர்கள் இயங்குகிறார்களோ? என்ற கேள்விக்கு இந்த சுயசரிதை நாவல்தான் சரியான பதில். பதிலைத் தேட நினைக்கும் அனைவரும் குறிப்பாக ஆண்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்தான் பேபி ஹால்தாரின் 'விடியலை நோக்கி...'
            காலச்சுவடு பதிப்பக வெளியீடாக தமிழில் எம்.எஸ். ஸின் மொழி பெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது இந்நூல்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...