4 Nov 2017

வெள்ள மேலாண்மைக்கான புராதானப் பார்வை

வெள்ள மேலாண்மைக்கான புராதானப் பார்வை
            வெள்ளத்தை வெள்ளமாகப் பார்க்காமல் நீர் சேமிப்பிற்கும், நீர் ஆதாரத்திற்கான மாற்றாகவும் நோக்க வேண்டும். அதற்கான திட்டமிடல்களைத் தொடங்க வேண்டிய நிலையில் நம் முன்னோர்கள் நம்மை நிர்கதியாக விட்டு விடவில்லை. அப்படிப்பட்ட அமைப்புகளுடன்தான் நம் முன்னோர்கள் நம் நில அமைப்பை நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள். அவைகளை மீட்டுருவாக்கம் செய்தாலே போதும். மராமத்துப் பணிகளை மேற்கொண்டாலும் போதும்.
            மழைக் காலத்துக்கு முன்பே வடிகால்களைச் சீர் செய்து வைத்திருப்பதன் மூலம் மழை மூலம் தேங்குகின்ற நீர் ஏரிகள்,குளங்கள் மற்றும் மழை நீர் சேமிப்பு அமைப்புகளில் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்து விட்டால் வறட்சிக் காலத்தை புரட்சிக் காலமாக மாற்றி விடலாம். அப்படித்தான் ஒரு தொப்புள் கொடி உறவை ஆறுகளிலிருந்து வாரிகள், வாரிகளிலிருந்து வாய்க்கால்கள், வாய்க்கால்களிலிருந்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், மிகுநீரை வடியச் செய்யும் வாய்க்கால்கள் என நம் முன்னோர்கள் அமைத்திருந்தனர்.
            காணாமல் போன நம் தன்னுணர்வைப் போல் காணாமல் போய்க் கிடக்கும் நம் ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும் நாம் கண்டுபிடித்து விட்டால் கங்கை வரை வெற்றி கொண்டவன் கங்கை கொண்டான் என்பது போல வெள்ளத்தை வெற்றிக் கொண்ட நாம் வெள்ளம் கொண்டான்களாகி விடுவோம். கங்கை - காவிரி இணைப்பு சாத்தியமாக்காத பல நீர் மேலாண்மை அசாத்தியங்களை இது சாத்தியமாக்கும்.
            நீரின் இயல்பே ஓடிக் கொண்டு இருப்பதுதான். அது தேங்குவதில்லை. அருவியாக, சிற்றோடையாக, ஆறாக ஓடிக் கொண்டு இருப்பதுதான் அதன் இயல்பு. கடலில் கூட அலையாகி அது ஓடவே பார்க்கிறது. ஓட விட்ட கடல் ஒரு தாய் தன் குழந்தையைக் கை பிடித்து இழுத்துக் கொள்வது போல மீண்டும் இழுத்துக் கொள்கிறது.
            தேக்கி வைக்கப்படும் நீரும் கூட உடைத்துக் கொண்டு வெளியேறுவதில்தான் குறியாக இருக்கும். அப்படிப்பட்ட நீர் தேங்குகிறது என்றால்... தேங்குகிறது என்பது தவறு, தேக்க வைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
            நமது குடியிருப்புகள் அப்படி அமைக்கப்படுகின்றன, அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் இரண்டு கூறுகளை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, நீர் தேங்கும் வகையில் நமது ஒட்டுமொத்த குடியிருப்பு அமைப்புகளும் அமைக்கப்படுகின்றன. இரண்டு, நீர் தேங்க வேண்டிய இடத்தில் நமது குடியிருப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
            நமது குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் வடிகால் அமைப்பை ஆக்கிரமித்து தமது குடியிருப்பின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளும் சின்ன சின்ன சின்னத்தனமான ஆசை வெள்ளக் காலத்தைப் பிரமாண்டமாக ஆக்கி விடுகிறது.
            கொஞ்சம் மனசாட்சியோடு குடியிருப்புகள் வடிகாலுக்கான இடத்தைப் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தால் வெள்ளமும் பெருந்தன்மையாக ஓடி விடும். உண்மையில் ஓடப் பார்க்கும் வெள்ளத்தைப் பிடித்து வைக்கும் வகையில் நமது ஆக்கிரமிப்பு ஆசைகள் அமைந்து விட்டன.
            எங்கும் இடம் கிடைக்காத போது வெள்ளம் சாலையில் ஓடுகிறது. அங்கும் அதற்கு இடம் போதாத போது வீடுகளின் வழியே ஓடுகிறது.
            வெள்ளம் ஓடுகிறது. ஓடிக் கொண்டே இருக்கிறது. அது நிற்கிறது என்றால் அது நிற்பதற்கான சிவப்பு விளக்கு நம் ஆசைகளின் மூலம் அதன் கண்களுக்கு போக்குவரத்து அடையாள விளக்கு போல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...