இப்பிறவியின் இயந்திரமாய்... மறுபிறவியின்
ரோபோட்டாய்...
வேகம் நமது மிகப் பெரிய பிரச்சனை என்று
தெரிந்தும் வேகத்தைக் குறைக்க முடியாதது நம் வாழ்வின் மிகப் பெரிய பரிதாபம்.
இந்த வேகம் நம் வாழ்வில் எதைச் சாதித்தது?
எதைச் சாதிக்கப் போகிறது? வியாதிகளை வேகமாகக் கொண்டு வருகிறது, மரணத்தையும் வேகமாகக்
கொண்டு வந்து சேர்க்கிறது என்பதைத் தவிர வேகம் சாதித்தது என்ன?
நிதானமாகச் செயல்படுவது என்ற பழக்கத்தை
வேரடி மண்ணோடு அழிப்பதாக நம் வாழ்வின் வேகம் மாறிக் கொண்டு இருக்கிறது.
வாழ்வியல் பழக்கமாக மாறும் வேகம் மெல்ல
மெல்ல உடலியல் வழக்கமாகவும் மாறும். உண்ணுவதில் ஒரு வேகம் ஏற்படும். சுவாசிப்பதில்
ஒரு வேகம் தன்னையுமறியாமல் ஏற்படும்.
சுவாசத்தின் வேகம் கோபத்தையும், எரிச்சலையும்
அதிகப்படுத்தக் கூடியவை. ஆயுளை அலேக்காமாக விழுங்கிக் குறைக்கக் கூடியவை.
படபடவெனப் பேசுவதில் தொடங்கி, சற்று நேரம்
அமைதியாக இருக்க முடியாமல் எதையாவது செய்து கொண்டிருப்பதில் ஒரு பரபரப்பாகத் தொடர்ந்து
வேகம் கொண்டு தறி கெட்டு ஓடும் வண்டியைப் போல வாழ்வு மாறும்.
வேகமாகச் செயல்படுவதற்கு முன் வேகமாக நாம்
செய்ய வேண்டியது, நாம் வேகமாகச் செயல்பட வேண்டியது அவசியந்தானா என்பதைச் சிந்திப்பதுதான்.
அதைச் சிந்திப்பதற்குதான் அந்த வேகம் விட
மாட்டேன்கிறது என்றால், இந்த பிறவியில் இயந்திரமாய் இருந்து, அடுத்தப் பிறவியில் ரோபோட்டோய்ப்
பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை.
*****
No comments:
Post a Comment