5 Nov 2017

வீக்கம் என்பது வளர்ச்சி ஆகாது!

வீக்கம் என்பது வளர்ச்சி ஆகாது!
            மனிதர்கள் நினைத்தால் மனிதர்களுக்கு இடம் கொடுக்கலாம். அதற்கு அவர்களின் மனம் இடம் கொடுப்பதில்லை. அது ஒரு வகை சுயநலத்தில் உழல்வதையே மகிழ்வாக நினைக்கிறது. அந்தச் சுயநலத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறது.
            தெருவில் இருக்க இடமில்லாமல் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கொண்டிருப்பவனுக்கு எதிரேதானே பத்துக் குடும்பங்கள் குடியிருக்கும் அளவுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு இரண்டு பேர் குடியிருக்கிறார்கள்.
            நகரத்தில் சிலருக்குப் பத்து இடங்களில் வீடுகள், ப்ளாட்டுகள் இருக்கின்றன. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கியது என்கிறார்கள். படுக்கக் கூட இடமில்லாமல் பேருந்து நிலையங்களிலும், மூடியிருக்கும் கடைகளின் முகப்புகளிலும் படுத்துக் கிடப்பவர்கள் அப்படியென்ன குறைவாக ‍உழைத்து விட்டார்கள்?
            ஒரு மனிதன், ஒரு நிறுவனம் எவ்வளவு இடம் வைத்துக் கொள்ளலாம் என்பதை நிர்ணயித்து அதைக் கறாராக நிர்வகிக்க முடியாத நிர்வாக அமைப்பின் கீழ் நாம் இருக்கிறோம். எவ்வளவு வேண்டுமானாலும் இடங்களை வாங்கிக் குவிப்பதோ, பணத்தைச் சேர்ப்பதோ சாத்தியமாக இருக்கிறது. அதற்குச் சாமர்த்தியம் போதுமானதாக இருக்கிறது.
            அவைகள் சாமர்த்தியமாக அடிக்கப்பட்ட கொள்ளைகள் என்பதை மறந்து நாமும் பிழைக்கத் தெரிந்தவர் என்று உச் கொட்டுகிறோம்.
            ஆதார் எண்ணில் கைரேகைகள், கருவிழிப் பார்வைப் பதிவு செய்வதை விட அவரவர் பெயரில் இருக்கும் நிலங்களைப் பதிவு செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக ஒருவர் பெயரில் இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தினால் போதும் நிலங்களின் விலை தானாக குறைந்து விடும்.
            நிலங்களின் விலை குறைந்தால் வாடகைகள் குறையும். வாடகைகள் குறைந்தால் விலைவாசி குறையும். நிலங்களின் விலையாலும், வாடகைகளின் அதிகரிப்பாலும் ஏற்படும் விலைவாசிப் பெருக்கமும், அதனால் புண்ணில் சீழ் வடிவது போன்று நேரும் பணப்பெருக்கமும், அதன் விளைவாக உண்டாகும் பணவீக்கமுமே நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு அறுவைச் சிகிச்சைச் செய்யாமல் இந்த வியாதியைக் குணபடுத்துவது சாத்தியமில்லை.
            இந்த அறுவைச் சிகிச்சைக்கு அரசியல்வாதிகள் தயார் என்றால் அவர்களின் சொத்து மதிப்புதான் முதலில் அடிவாங்கும். ஒரு உண்மையான தேசத்தின் வளர்ச்சி என்பது உண்டாகும்.
            தனிமனிதர்கள், அரசியல் செய்பவர்கள் இவர்களின் சுயநலத்திற்கு ஒரு அளவு நிர்ணயித்து அதற்குக் கடிவாளம் போட்டு நிர்வாகத்தை இயக்குவதை விட வேறு முக்கியமான வேலை ஓர் அரசுக்கு இருக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...