'அறம்' முன்பே கணிக்கப்பட்ட கணிப்பு!
திரும்பிய பக்கம் எல்லாம் 'அறம்' திரைப்படம்
குறித்தப் பேச்சாக இருக்கிறது. திரைத் திறனாய்வுகளை வெளியிடாத தினமணி இதழ் கூட அத்திரைப்படத்திற்கு
திறனாய்வு தீட்டியிருக்கிறது. ஆனந்த விகடன் இதழ் அறுபது மதிப்பெண் கொடுத்துக் கொண்டாடியிருக்கிறது.
பொதுவாக திரைப்படங்கள் குறித்த அதிகமான
எதிர்மறைப் பார்வையை முன் வைக்கும் நமது வலைப்பூவும் அத்திரைப்படத்தைக் கொண்டாட கடமைப்பட்டு
இருக்கிறது.
எளிய மனிதர்களின் வலிகளை, வேதனைகளைப் பேசிய
திரை இலக்கியம் தமிழில் குறைவு. வெறுமனே திரைப்படம் என்று சொல்லாமல் திரை இலக்கியம்
என்று சொல்லியிருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். திரையுலகின், திரை இலக்கியத்தின்
குறையை நிறைவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.
ஒரு திரைப்படம் எப்படிப்பட்டப் பார்வையில்
சொல்லப்பட வேண்டும், எப்படிப்பட்ட மனஉணர்வுகளைப் பார்வையாளனுக்குக் கடத்த வேண்டும்
என்பதைத் தனக்கான தார்மீக கடமையாக்க கொண்டு 'அறம்' ஆற்றியிருக்கிறது 'அறம்'.
இயக்குநர் கோபி நயினார் பாராட்டுக்கு
உரியவர். தயாரிப்பாளர் நயன்தாரா தமிழ் கூறு நல்உலகின் தனித்த நன்றிக்கு உரியவர். தன்
பாத்திரத்தின் மூலமாக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் நியாயம் செய்திருக்கிறார்.
நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க முன்வந்த
வகையில், அப்படி எதுவுமான முயற்சியில் இறங்காத விஜய், அஜித் போன்ற நாயக பிம்பங்களுக்கு,
ஒரு நாயகி பிம்பத்தோடு சவால் விடுப்பதாகவே அவரது இந்த முயற்சியை நான் பார்க்கிறேன்.
வருங்காலத்தில் நயன்தாராவுக்கு என்றே திரைப்படங்கள்
உருவாகும் என்று இதை சில ஆண்டுகளுக்கு முன்னே கணித்தவன் என்பதில் நான் இவ்விடயத்தில்
தனிப்பெருமிதம் கொள்கிறேன்.
இக்கணிப்பை ஒரு சிறுகதை மூலம் பதிவு செய்திருந்தேன்.
அக்கதை 'கல்கி' இதழில் வெளிவந்தது. நயன்தாராவுக்கு வருங்காலத்தில் வரப் போகும் வாய்ப்பைப்
பதிவு செய்திருந்த அச்சிறுகதைக்குப் பிறகு இதழ்கள் எனது சிறுகதைக்கான வாய்ப்புகளை இழுத்து
மூடி விட்டன என்பதுதான் அச்சிறுகதைக்குப் பின் நிகழ்ந்த முரண். அச்சிறுகதையை நாளை வெளியிடுகிறேன்.
வலைப்பூவில் சிறுகதை வெளியிடுகிறேன் என்ற
பலமுறை பம்மாத்துக் காட்டியிருப்பதை இவ்வலைப்பூவின் முந்தையப் பதிவுகளைப் படித்தவர்களுக்குத்
தெரியும். அச்சிறுகதையை நாளை வெளியிடுவதன் மூலம் நீண்ட காலமாக காட்டி வந்த போக்குக்கும்
ஒரு முடிவு வந்ததாக இருக்கட்டும்.
இதழ்களில் பிரசுரம் ஆனால்தான் சிறுகதையா?
வலைப்பூவில் பிரசுரம் ஆனால் சிறுகதை ஆகாதா என்ன? ஒவ்வொன்றாக வலைப்பூவில் பிரசவித்து
பிரசுரம் ஆக்கிடலாம் இனி!
*****
No comments:
Post a Comment