6 Nov 2017

ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் - ஊடாட்டம் ஆடும் புத்தன்!

ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் - ஊடாட்டம் ஆடும் புத்தன்!
            ஹெர்மன் ஹெஸ்‍ஸேயின் 'சித்தார்த்தன்' நாவல் ஆன்மிக வாழ்வை அதன் எதிர்நிலையில் நின்று பார்க்கும் ஓர் அற்புதமான நாவல்.
            கெளதம புத்தர் தான் வாழ்ந்த வாழ்வுக்கு முற்றிலும் எதிரான வாழ்வு வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருப்பார்? அவர் சித்தார்த்தனாகவே இருந்திருப்பார். அந்த சித்தார்த்தன் எப்படி இருந்திருப்பான்? இந்தக் கேள்வி ‍ஹெஸ்ஸேயின் மனதில் ஒரு நாவலாக விரிகிறது.
            தன் கதையின் நாயகனைச் சித்தார்த்தன் என்ற பெயரில் அமைக்கிறார் ஹெஸ்ஸே.
            கெளதம புத்தர் சுக போக வாழ்வெல்லாம் வாழ்ந்து புலனடக்கத்துக் சென்று ஞானம் அடைந்து சித்தார்த்தனிலிருந்து கெளதம புத்தராக தோற்றம் கொள்கிறார். சித்தார்த்தன் இதில் மாறுபடுகிறான். அவன் புலனடக்க வாழ்வில் தொடங்கி சுகபோக வாழ்வுக்குச் செல்கிறான். இகவாழ்வின் அனைத்துப் பற்றுகளுக்கும் ஆளாகிறான். இறுதியில் கெளதம புத்தராகத் தோற்றம் கொள்கிறான்.
            உலகில் அனைவரும் புத்தரே. ஒருவர் எப்படித் தொடங்கி எப்படி புத்தர் ஆகிறார் என்பதே அவர் வாழ்க்கை.
            இதைப் புரிந்து கொள்ள நாம் சித்தார்த்தனின் வாழ்வுக்குள் நுழைய வேண்டியதாக இருக்கிறது. அவன் வாழ்வைச் சொல்வதற்கான ஒரு எளிய கதை சொல்லலாகவே நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தாண்டி உங்கள் மனம் அளாவுமானால் நீங்கள் சித்தார்த்தன் நாவலைத்தான் படிக்க வேண்டும்.
            சித்தார்த்தனின் வாழ்வு ஒரு ஆசாரப் பிராமணக் குழந்தையாகத் தொடங்குகிறது. வேத அறிவிலும், அதைப் புரிந்து கொள்வதிலும் இணையற்றவனாக அதில் விவாதம் செய்வதில் எல்லையற்றவனாக இருக்கிறான். அவனது நண்பன் கோவிந்தன் அவனைப் பின்தொடரும் நிழலாக அமைகிறான்.
            காட்டில் சென்று கடுமையாகத் தவமியற்றி வாழும் பைராகிகளைப் பார்க்கும் சித்தார்த்தனுக்கு தானும் பைராகி விட வேண்டும் என்ற எண்ணம் எழ, தந்தையின் அனுமதியைக் கோரி நிற்கிறான். நிற்கிறான் என்றால் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து அவன் எப்படிப்பட்ட நிலையில் நின்று தந்தையிடம் அனுமதிக் கேட்டானோ அப்படியே நிற்கிறான். அவன் கண்களில் உறக்கமில்லை. நிற்கும் நிலையில் மாற்றமில்லை. அவ்வபோது வந்து பார்த்துச் செல்கிறார் தந்தை. வைகறை விடியலைத் தூக்கி வரும் பொழுதில் அதே நிலையில் நிற்கும் மகனின் முடிவுக்கு இசைகிறார்.
            சித்தார்த்தன் பைராகிகளுடன் இணைகிறான். அவனைப் பின்தொடரும் நிழல் கோவிந்தனும் வந்து சேர்கிறான். கடுமையான வனவாழ்க்கைத் தொடங்குகிறது சித்தார்த்தனுக்கு. அவன் தன் மனதில் நிகழ்த்தும் தேடல் அவ‍னுக்கு வனவாழ்வைச் சாதாரணமாக்கி விடுகிறது. அவன் பைராகிகளுடனே இருந்தால் அவன் தலைமை பைராகியாவான்.
            கெளதம புத்தரின் வருகை அவன் பாதையைத் திசை மாற்றுகிறது. பைராகிகளை விடுத்து கெளதமரைச் சந்திக்கப் புறப்படுகிறான். கோவிந்தனும்தான்.
            சித்தார்த்தனுக்கும், கெளதம புத்தருக்குமான சந்திப்பு நிகழ்கிறது. அவன் மனதை ஊடறுத்துச் செல்லும் அதிகப்படியான கேள்விகள் அவனைக் கெளதம புத்தரோடு ஒன்றச் செய்யவில்லை. அதை புத்தர் சாந்தமாக அவனுக்குச் சுட்டிக் காட்டுகிறார்.
            தன் தேடலை நோக்கிச் செல்ல விரும்புவதாக சொல்லும் சித்தார்த்தனை புத்தர் ஆசிர்வதிக்கிறார். சித்தார்த்தான் அங்கிருந்து செல்கிறான். கோவிந்தன் இந்த இடத்தில் மாறுபடுகிறான். அவன் புத்தரின் சீடராக தங்குகிறான்.
            சித்தார்த்தனின் தேடல் ஒரு நதியைக் கடந்து ஒரு நகரை நோக்கிச் செல்கிறது. அந்த நதி அவன் வாழ்வை இரண்டு கோடாகப் பிரிக்கிறது. நதியின் இந்தப் பக்கம் ஞானத்தை நோக்கிய வாழ்வாகவும், நதியின் அந்தப் பக்கம் அவன் அதுவரை கைக்கொண்ட வாழ்வுக்கு எதிர்வாழ்வாகவும் ஆகிறது.
            சித்தார்த்தன் பற்றுக்கோடான சகல சுகங்களையும் அனுபவிக்கத் துடிக்கும், வாழ்வின் வீரியத்தை ஒரு மூச்சில் விழுங்கத் துடிக்கும் கட்டற்ற காளையாகப் புறப்படுகிறான். சகல ஆடம்பரங்களோடு வரும் தாசி கமலாவின் கண்கள் அவனை இழுக்கிறது.
            அவன் பைராகிகளோடு வாழ்ந்த வாழ்வில் பெற்ற மனோவசியத்தோடு கமலாவின் கண்களோடும், சொற்களோடும் ஊடாடுகிறான். கமலாவும் தனக்கேயுரிய கவர்ச்சியோடும், காதலுக்கே உரிய காந்தத் தன்மையுடனும் சித்தார்த்தனை ஊடாடுகிறாள்.
            சித்தார்த்தன் வசதியானவனாக வந்தால் ஏற்பதாகச் சொல்கிறாள் கமலா. பைராகியான சித்தார்த்தன் வசதியானவனாக மாறுவதாக முடிவு செய்கிறான். நகரின் பெரும் வணிகன் காமசாமியோடு ஒரு தொடர்பை கமலாவே சித்தார்த்தனுக்கு எற்படுத்தித் தருகிறாள்.
            பைராகியான சித்தார்த்தன் வியாபாரியாகிறான். கமலாவிடம் அவன் காமுகனாக, கமலா அவனிடம் காமுகியாக காலம் கடந்து செல்கிறது. சூதாடுகிறான். இழக்கிறான். மீண்டும் வியாபாரம் செய்து செல்வம் சேர்க்கிறான்.
            மீண்டும் சூது, இழப்பு. அவன் வாழ்வில் ஒரு வட்டம் வந்து வந்து விளையாடுகிறது.
            வசதியான வாழ்வுக்குரிய சோம்பலையும், விரக்தியையும் எதிர்கொள்ள நேரிடும் போது, கமலாவோடு ‍கடைசியாக ஒரு இணைவோடு அவன் நகரை விட்டுப் பிரிகிறான். அவன் தன் வாழ்வை இரண்டு கோடுகளாகப் பிரித்த நதியின் கரையை அடைகிறான். இதுவரை வாழ்ந்த வாழ்வை அவன் எண்ணிப் பார்க்கிறான். இந்த நதியில் விழுந்து இறந்து விடலாமா என்று நினைக்கிறான். நதியின் சுழல், உள்ளே இழுத்துச் செல்லும் அதன் வேகம் அவனைத் தூண்டுகிறது.
            இன்னும் சிறிது நேரத்தில் சித்தார்த்தன் இறக்கப் போகிறான் எனும் இடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.
            நதியின் ஓங்கார ஒலியில் அவன் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறான்.
            அந்த உறக்கத்தில் நதியின் கரையில் உலவும் கொடிய மிருகங்களால் அவன் கொல்லப்பட்டிருக்கலாம். அவனைக் காப்பதற்கெனவே ஒரு புத்த பிட்சு அங்கு வந்து சேர்கிறார். சித்தார்த்தன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான். புத்த பிட்சு அவனுக்காக இரவு முழுவதும் விழித்து இருக்கிறார்.
            சித்தார்த்தன் உறக்கத்திலிருந்து விழிக்கிறான். அவனைக் காத்து நிற்கும் புத்தபிட்சு அவனது பால்ய நண்பன் கோவிந்தன். அது சித்தார்த்தனுக்குத் தெரிகிறது. கோவிந்தனுக்குத் தெரியவில்லை. சித்தார்த்தன் தெளிய வைக்கிறான். அந்தச் சந்திப்புக்கு மனமார நன்றி கூறி விட்டு இருவரும் தங்கள் வழி நோக்கிச் செல்கிறார்கள்.
            கோவிந்தன் புத்தப் பிட்சுகளை நோக்கி நடக்கிறான்.
            சித்தார்த்தன் நதியின் அந்தப் பக்கத்திலிருந்து மீண்டும் இந்தப் பக்கத்தைக் கடக்கிறான்.
            சித்தார்ததனது ஞானத்தை நோக்கிய வாழ்வுத் தொடங்குகிறது. முன்பு எந்த நதியைக் கடக்க படகோட்டி உதவினானே அதே படகோட்டியோடு நதியின் இந்தப் பக்கத்தில் தங்குகிறான். நதி அவனுக்கு ஞானவானாக மாறுகிறது. அவனும் படகோட்டியும் நதியிடம் ஞானத்தின் குரலைக் கேட்கிறார்கள்.
            சித்தார்த்தன் கேட்ட ஞானத்தின் குரலைச் சோதிப்பதற்கென நதியின் அந்தப் பக்கத்திலிருந்து கமலா தன் மகனோடு வருகிறாள். அந்த மகன் சித்தார்த்தனின் மகனும் கூட. அவர்களின் கடைசி இணைவில் பிறந்த பாலசித்தார்த்தனின் தொடக்கம்.
            அவள் காண வருவது சித்தார்த்தனை அல்ல. சித்தார்த்தனிலிருந்து மேம்பட்ட கெளதம புத்தரைக் காண.
            கெளதம புத்தர் தன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்திக்க புத்த பிட்சுகளின் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. கமலாவும் அப்படித்தான் செல்கிறாள். புத்தரை கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டால் தான் மோட்சம் அடைய முடியும் நம்புகிறாள்.
            அவளது மோட்சம் கெளதம புத்தரைச் சந்திப்பதற்கு முன் ஒரு கருநாகம் தீண்டி சித்தார்த்தனைச் சந்திப்பதோடு முடிகிறது. சித்தார்த்தனின் எச்சம் சித்தார்த்தனோடு சேர்கிறது. மகன் தந்தையோடு இணைகிறான்.
            சித்தார்த்தனின் வாழ்வு தந்தை மகன் என்ற பாசச் சங்கிலியோடு தொடர ஆரம்பிக்கிறது.
            அமைதியையும், பொறுமையையும் போதிக்கும் சித்தார்த்தனின் அன்பும், பாசமும் வசதியான வாழ்வு வாழ்ந்த மகனுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தருகிறது. இதற்காகவே அவன் ஒரு திருடனாகவோ அல்லது கொள்ளைக்காரனாகவோ மாறி தன் தந்தையான சித்தார்த்தனைப் பழி வாங்கப் போவதாகக் கூறுகிறான்.
            பொறுமையான தன் அன்பு தன் மகனை மாற்றும் என்று சித்தார்த்தன் நம்புகிறான். அவனோ தன் தந்தையிடமிருந்து தப்பிச் செல்கிறான். மகனைத் தேடி மீண்டும் நதியைக் கடந்த அக்கரைக்குச் செல்கிறான். தந்தையைப் பிடிக்காமல் நகரில் ஒளிந்துள்ள மகனை நகரெங்கும் தேடிப் பார்க்க விழைகிறது சித்தார்த்தனின் நெஞ்சம்.
            படகோட்டி சித்தார்த்தனை மீட்டு நதியின் இக்கரைக்குக் கொண்டு வருகிறான். நதி அவனிடம் பாடம் சொல்கிறது. நீயும் ஒரு காலத்தில் உன் தந்தை சொல் கேட்காமல் பைராகிகளோடு சென்றவன்தானே என்று. சித்தார்த்தன் தெளிவு கொள்கிறான்.
            கெளதம புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழும் படகோட்டியும் ஒரு கெளதம புத்தராகிறான். அவன் தன் கடமைகள் முடிந்தது என்று சித்தார்த்தனிடமிருந்து விடை பெற்று காட்டை நோக்கிச் செல்கிறான். இப்போது சித்தார்த்தனே அந்த நதிக்கரையின் முழுமுதற் படகோட்டியாக ஆகிறான்.
            ஆற்றைக் கடக்கவரும் தன் பால்ய நண்பன் கோவிந்தனுக்கும் அவனே படகோட்டியாக ஆகிறான். அவனை நதியின் அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வருகிறான்.
            உங்களுக்கு புரிந்திருக்குமே! நதியின் அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வருவது வெறுமனே அக்கரையிலிருந்து இக்கரையை நோக்கிய ஒரு பயணம் மட்டும் அல்லவே என்று.
            சித்தார்த்தன் கோவிந்தனை இக்கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறான்.
            அதிகமாகத் தேடும் ஒருவர் அதைப் பார்ப்பதில்லை. ஞானத்தை யாருக்கும் யாரும் விநியோகம் செய்து விட முடியாது. சித்தார்த்தன் ஒரு அனுப வெடிப்பாக கோவிந்தன் முன் தெறிக்கிறான்.
            ஹெஸ்ஸே ‍ஜெயித்து விடுகிறார். ஒரு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், அந்த நோபல் பரிசையே துச்சமென நினைத்த ஹெஸ்ஸே இதைச் சாதித்தது பெரிய விசயமில்லைதான்.
            பரஸ்பரம் நேசிப்பதும், மரியாதை கொள்வதும், எல்லாரிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்வதும்தான் நாம் முக்கியமாகக் கைகொள்ள வேண்டியவை என்பதாக தன் நாவலை முடிக்கிறார் ஹெஸ்ஸே. வாழ்க்கையின் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சும் அதுதான். அதற்கு எதிராக அன்றோ முடிச்சுகளோடு மூடிக் கிடக்கிறது மனித மனம்!
            (சேது அலமி பிரசுர வெளியீடாக தமிழில் சிவன் அவர்களின் மொழி பெயர்ப்பில் 'சித்தார்த்தன்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது இந்நூல்)

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...