18 Nov 2017

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் அனுபவம்தான் ஆசான்!

வாழ்க்கை எனும் பள்ளிக்கூடத்தில் அனுபவம்தான் ஆசான்!
            உணர்த்துவதால் உணர்ந்து விடக் கூடியதா வாழ்க்கை?
            நீங்கள் காரில் போய்க் கொண்டு இருக்கலாம். நீங்கள் கால் கடுக்க நடந்து சென்ற வாழ்க்கையை வெறும் வார்த்தைகளால் உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்தி விட முடியாது. அதற்கு நீங்கள் உங்கள் குழந்தைகளோடு இறங்கி நடந்து செல்ல வேண்டும்.
            நீங்களே காரில் செல்லும் குழந்தையாக உருமாற்றம் அடைந்து அந்த அனுபவத்தைக் காதால் கேட்டாலும், அனுபவம் இல்லையென்றால் அதை உங்களால் உணர முடியாது. பாவம் குழந்தைகளால் நிச்சயம் முடியாது.
            அவரவர் வலியை அவரவர் உணர்வதைப் போல மற்றவர்களால் உணர முடியாது. அவரவர் வறுமையை அவரவர் உணர்வதைப் போல பிறரால் உணர முடியாது.
            நானெல்லாம் அந்தக் காலத்தில்... என்று ஆரம்பித்து இயல்பாகக் கோபப்படும் இடம் அதுவாக இருக்கலாம். அப்படியானால் நீங்கள் எல்லாம் இந்தக் காலத்தில் குழந்தைகளாக இருந்து எதிர்கொண்டால்தான் அவர்களின் வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.
            வாழ்வின் சில உன்னதங்களை எவ்வளவு முயன்றாலும் அனுபவத்தின் மூலம்தான் அறிய முடியும். அதற்கான அனுபவத்தை நோக்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
            அவர்களுக்கு எல்லாவிதமான சொகுசான வசதிகளையும் ஏற்படுத்தி விட்டு அதை, இதை என்று எதையும் உணர வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால், சத்தியமாக நாம் தவறு செய்கிறோம் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
            நமது இயல்பான சூழ்நிலை எதுவோ அதைக் காட்டி அவர்களை வாழச் செய்ய வேண்டும். அவர்களை உயர்த்திப் பிடிப்பது போல பிடித்து, ஒரு குற்ற உணர்வோடேயே வாழப் பழக்கச் செய்யக் கூடாது. பல பெற்றோர்களின் கனவாக அது இருக்கிறது.
            என் அப்பாவும், அம்மாவும் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், நான் சொகுசாக இருக்கிறேன் என்ற ஒரு விதமான குற்றவுணர்ச்சியோடேயே குழந்தைகளை வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது போல நம் குழந்தை வளர்ப்பு முறைகள் மாறிக் கொண்டு இருக்கின்றன.
            வறுமை என்பதைக் குழந்தைகள் காணக் கூடாது என்பது போல, அதைக் கேள்விப்படாதவர்கள் என்பது போல நம் குழந்தை வளர்ப்பை மேம்படுத்த நினைக்கிறோம். உண்மையில் சூழ்நிலை அதுதானென்றால் அதை உணர குழந்தைகளைத் தடைபடுத்தக் கூடாது.
            ஏனென்றால் வறுமையைப் போல சிறந்த பள்ளிக்கூடம் வேறு எதுவும் இல்லை. பல தலைவர்கள் அதில் பாடம் பயின்று இருக்கிறார்கள். அதைத் தாழ்வாக நினைப்பதற்கு அதில் எதுவுமில்லை.
            வறுமையை மறைத்து ஒரு போலி கெளரவத்தனமான வாழ்வைப் பழக்கி அதே நேரத்தில் குழந்தைகள் வறுமையை உணர வேண்டும் என்று நினைப்பது ஒரு வகைப் போலித்தனமன்றி வேறில்லை.
            வறுமையைப் புரிந்து கொள்ளவும் வேண்டும் அதே நேரத்தில் வறுமை குறித்த ஓர் அச்சவுணர்வும் மனதில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் உருவாக்கப் போவது குழந்தை புத்திசாலிகளையல்ல, குழந்தைக் குற்றவாளிகளைத்தான்.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...