விரல் நுனியிலிருந்து விரிவுரைக்கு...
பாடங்களைப் பயில்வதில் எவ்வளவோ எளிமையான
உத்திகள் உள்ளன. அத்தனை உத்திகளும் புறந்தள்ளப்பட்டு பயிலும் முறைகளில் ஒரு கடினத்தன்மை
திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.
அந்தக் கடினத் தன்மை இருந்தால்தானே கல்வியை
வணிகமயமாக்க முடியும். கல்விக்குக் கேட்ட விலையும் கிடைக்கும்.
பாடங்களை எளிமையாக அணுகும் முறைகளில் ஒன்று
- விரல் நுனியிலிருந்து விரிவுரையை நோக்குதல் - விரிவுரையிலிருந்து விரல் நுனியை நோக்குதல்.
பாடங்களை விரல் நுனியில் வைத்தல் என்பது
அதன் வடிவமைப்பை, கட்டமைப்பை (அவுட்லைன் & ஸ்ட்ரக்சர்) மனதுக்குள் கொண்டு வருதல்.
விரிவுரை என்பது வடிவமைப்பை, கட்டமைப்பை
சொற்கள், வாக்கியங்கள், விதிகள், பத்திகள் கொண்டு விரிவாக்குதல்.
இன்னும் சற்று எளிமையாகப் புரிந்து கொள்ள
வேண்டுமானால் குறிப்புகளிலிருந்து பத்திகளை உருவாக்குதல் மற்றும் பத்திகளிலிருந்து
குறிப்புகளை உருவாக்குதல் என்கிற உத்தியே இது. நோட் மேக்கிங்லிருந்து டெவலப்பிங் ஹிண்ட்ஸை
நோக்கிச் செல்லுதலும் அதே போலும் டெவலப்பிங் ஹிண்ட்ஸ்லிருந்து நோட் மேக்கிங்கை நோக்கிச்
செல்லுதலுமான உத்தியே இது.
இதில் முழுமையிலிருந்து பகுதியை நோக்கலும்,
பகுதியிலிருந்து முழுமையை நோக்கலும் மாறி மாறி இயல்பாக நடைபெறும். ஆகவே தனித்த ஒன்றாக
எதுவும் தோற்றம் தராது. அதாவது தனித்துத் தனித்துப் பலவாகத் தோற்றம் உருவாகி இவ்வளவா
என்ற மலைப்பு ஒரு போதும் ஏற்படாது.
ஐயாயிரம் பக்கப் பாடங்களை ஐந்து பக்கங்களாகச்
சுருக்கிக் கொள்ளவும், ஐந்துப் பக்கங்களை ஐயாயிரம் பக்கங்களாக விரித்துக் கொள்ளும்
சாத்தியம் இதில் நிகழும். ஐயாயிரம் பக்கங்கள் ஐந்து பக்கங்களாகச் சுருங்க முடியுமானால்
ஐயாயிரம் என்ற எண்ணிக்கை எப்போதும் மலைப்பை ஏற்படுத்தாது.
இப்படிக் கல்வியை உள்வாங்கிக் கொள்பவர்கள்தான்
மலைத்து நின்று விடாமல் தொடர்ந்து பயின்று கொண்டிருக்கிறார்கள்.
கல்வியை எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம்
என்பதைப் பொருத்துதான் அது எளிமையாகவும் இனிமையாகவும் தோற்றம் தருகிறது. மாறாக எல்லாவற்றையும்
பகுதி பகுதியாகப் பிரித்து முழுமைக்கும் அதற்கும் எந்த விதத் தொடர்பு இல்லாதது போல
பிரமாண்டப்படுத்திக் காட்டுவது விளம்பரத்துக்கும், வியாபாரத்துக்கும் வேண்டுமானால்
உதவலாம். உண்மையான கல்விக்கு ஒரு போதும் உதவாது. தாய்க்கும் கருவுக்குமான தொப்புள்
கொடியை அறுப்பது போன்றதுதான் முழுமைக்கும், பகுதிக்குமான தொடர்பை அறுத்து அதைப்
பிரமாண்டப்படுத்துவது. தற்போது தொப்புள் கொடியை அறுத்துக் கொள்வோம், பிறகு கருவைப்
போஷாக்குக் கொடுத்து மேம்படுத்திக் கொள்வோம் என்பது கருவை வளர்ப்பதற்குக் காசு
பிடுங்கும் மற்றொரு உத்தியாக உருவெடுக்கும். அந்தத் தொப்புள் கொடி அறுபடாமல் இருந்தாலே
போதும் கருவுக்கு எந்த போஷாக்கும் தேவையில்லை. தேவையான போஷாக்கை அந்த உறவுக் கொடியே
வழங்கி விடும்.
இனிமேலாவது பகுதிகளைப் பிரமாண்டப்படுத்திக்
கற்பிப்பதை நிறுத்தி விட்டு முழுமைக்கும் அதற்குமான தொடர்பை விளக்கி, விரல் நுனியிலிருந்து
விரிவுரையை நோக்கும் மற்றும் விரிவுரையிலிருந்து விரல் நுனியை நோக்கும் முறைக்கு
முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பரிசீலித்துப் பார்க்கலாம்.
*****
No comments:
Post a Comment