அறிவுப் பகிர்தல் குறித்த பகிர்தல்கள்!
அறிவுப் பகிர்தலுக்கான காலம் இது. அதற்கான
ஊடக வெளிகள் கணக்கற்று விரிந்து கிடக்கின்றன.
அச்சடித்து ஒரு நூலை வெளியிடுவதற்கான பொருளாதாரச்
சுமையை மனதில் சுமந்து கொண்டு முதல் பிரசவத்தைத் தள்ளிப் போடுவதைப் போன்ற வேதனையை
அனுபவிக்க வேண்டியில்லாமல், முகநூலில், வலைப்பூவில், கட்செவியஞ்சலில் பகிர்வதற்கான
வாய்ப்புகள் இன்று யாவர்க்கும் கிடைத்துள்ளன.
எந்த கட்டுக்கோப்பையும் வைத்துக் கொண்டு
ஒரு சுற்றுக்குள் சுற்றுவது போன்ற எழுத்தைத் தர வேண்டிய அவசியமும் இன்றில்லை. ஒரு
பத்திரிகையின் பிரசுரத்திற்காக மெனக்கெடும் போது அத்தகைய நெருக்கடிகள் ஏற்படும். அந்த
நெருக்கடிகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளன.
இணைய ஊடக வெளிகளில் உலவும் எழுத்துகளைக்
கணக்கெடுத்து பிரசுரிக்கும் பணியைப் பத்திரிகைகள் தொடங்கி விட்டன.
சகலவித சாத்தியக்கூறுகளுடன் கூடிய எழுத்துகளை
இணைய வெளிகளில் இன்று காண முடிகிறது.
நிலைமை இப்படியிருக்க தங்களின் அறிவுப்
பகிர்தலை யாரும் இனி ரகசியமாக வைத்திருக்க வேண்டியதில்லை. வாய்ப்புகள் வழங்கப்படவில்லையே
என்று யாரும் முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை.
தன்னிடம் தோன்றும் அறிவைப் பகிராமல் மறைத்து
வைப்பது கூட ஒரு வித சமூகத் துரோகம்தான். இது இப்படியென்றால் தன் அறிவைப் பகிர்வதை
விளம்பரப்படுத்துவது இருக்கிறதே, அது பச்சைத் துரோகம். யாருக்கு என்கிறீர்களா? அந்த
அறிவை யாதிடமிருந்து பெற்றோமோ அதற்கு. எந்த அறிவும் தன்னிடமிருந்து மட்டும் தோன்றுவதில்லை.
அதற்கு சார்புத் தன்மை இருக்கிறது. அது தனித்தன்மை உடையது என்றால் அதற்கான விளம்பரத்தை
அதுவே தேடிக் கொண்டு விடும். நாம் தேடிக் கொடுக்க வேண்டியதில்லை.
ஒருவர் பெற்ற அறிவிற்குப் பின் பலரது அறிவின்
பின்புலங்களும், பின்னணிகளும் இருக்கின்றன.
*****
ஒருவர் பெற்ற அறிவிற்குப் பின் பலரது அறிவின் பின்புலங்களும், பின்னணிகளும் இருக்கின்றன.
ReplyDeleteஅருமை சார்...
இவ்வுண்மையை நேர்மையோடும் மிகுந்த பணிவுடனும் ஒப்புக் கொள்ளும் மனிதர்கள் இந்த புவியில் வெகு சிலரே. அம்மனிதர்களில் தாங்களும் ஒருவர் ஐயா!
Delete