நேற்று சொன்னபடியே நயன்தாராவின் ஆளுமையை முன் கூட்டியே கணித்த சிறுகதை!
வரும் வலைப்பதிவில் தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றப் போகும் அவரைப்
பற்றிய மேலும் பல பதிவுகள் வர இருக்கின்றன.
இப்போது சிறுகதை!
ஒரு கதையின் கதை!
- விகடபாரதி
சரவணன் முத்தையாவுக்கு
எல்லாம் வேடிக்கைதான். முகுந்த் நாகராஜனிடம் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் அடிக்கடி
வைத்துக் கொண்டிருப்பான். "எப்படியாவது பாஸ்! ஒரு புரோடக்சன் கம்பெனி குக்கிங்
ஆர்டரை மட்டும் வாங்கிக் கொடுத்திடுங்க பாஸ்! இது வரைக்கும் யாரும் அப்படி செய்திருக்க
மாட்டாங்க! அப்படி தினம் தினம் குக் பண்ணி அசத்திடுவோம்!"
"டேய்! முத்தையா
சரவணா!"
"இல்லீங்க பாஸ்!
நான் சரவணன் முத்தையா!"
"எதோ இருந்துட்டுப்
போகட்டும்டா! நாங்கல்லாம் பத்து வருசமா குப்பைக் கொட்டிட்டு இருக்கோம்! இன்னும்
படம் டைரக்ட் பண்றதுக்கு சான்ஸ் தேடி அலையோ அலையோன்னு அலைஞ்சுகிட்டு இருக்கோம்.
நேத்தி வந்தப் பயடா நீ, சமைச்சுப் போட்டு சம்பாதிக்கப் பார்க்குறே!"
"பாஸ்! படமோ,
சமையலோ ஒரு டிபரெண்ட இருந்தா பிச்சுகிட்டுப் போகும். அது நம்மகிட்ட இருக்கு பாஸ்!
உங்கள மாதிரி அரைச்ச மாவையே அரைக்கிற சினிமா இல்ல பாஸ் நம்ம சமையல்! ஒரு சான்ஸ் மட்டும்
கொடுத்துப் பாருங்க! சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் சமையல் ஆர்டரைப் பிடிச்சுக் காட்டுறேன்!"
டிராலிகள் நகர, டைரக்டர்
குரல் கொடுத்தார், "எங்கேடா போய்த் தொலைஞ்சே முண்டம் பெத்த தண்டமே!" முகுந்த்
நாகராஜன் விழுந்தடித்து ஓடினான்.
சரவணன் முத்தையா வாயில்
கையைப் பொத்திக் கொண்டு சிரித்தான். ஓடும் அந்த அவசரத்திலும் முகுந்த் நாகராஜன்,
சரவணன் முத்தையா எகத்தாளமாகச் சிரிப்பதைக் கவனிக்கத் தவறவில்லை.
திவ்யாஸ்ரீ கேமரான முன்
நிற்க, கேமராமேன் லென்ஸைப் போகஸ் செய்தார்.
திடீரென்று எரிச்சலுற்றவறாய்,
"லைட்டிங் ஒரு தடவை செக் பண்ணுங்கப்பா!" என்று கேமரா மேல் தேங்காய்ப்பூ டவலைத்
தூக்கிப் போட்டு விட்டு நாற்காலியில் சென்று அமர்ந்தார் கேமராமேன்.
"ச்சே! காலையிலேர்ந்து
இதே வேலையாப் போயிடுச்சு!" திவ்யாஸ்ரீ முகத்தில் எரிச்சல் தாண்டவமாடியது.
"அவர் டைரக்ட்
பண்ண படத்துக்கு நீங்க கால்ஷீட் தராம இழுத்தடிச்சிருக்கக் கூடாது! அதான் மேடம் உங்களை
இப்படி வழி வாங்குறார் அந்த காமிராமேன்!" என்று மேக்கப்பைப் போட்டு விட்டுக்
கொண்டே திவ்யாஸ்ரீயின் காதுகளில் புகைமூட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தார் மேக்கப்மேன்.
"இன்னும் ஒரு மணி
நேரத்துக்கு கேரவனை விட்டு வெளியே வர மாட்டேன் பாருங்க!" என்றாள் திவ்யாஸ்ரீ.
டைரக்டரின் டென்ஷன்
அதிகமானது.
"என்னடா நடக்குது
இங்கே? நீ என்னான்னா எவனோ ஒருத்தன்கிட்ட போய் அப்பப்போ பேசிகிட்டு இருக்கே! இங்கே
எனனான்னா கேமராமேன் அவன் பாட்டுக்கு சீன் எடுத்துகிட்டு இருக்கான். நான் எதுக்குடா
இங்கே டைரக்டரா இருக்கேன்?" டைரக்டர் பொரிந்து தள்ளினார்.
"ஹலோ! டைரக்டர்
சார்! நீங்க இப்படியெல்லாம் சீன் வெச்சா இன்னும் நூறு படம் எடுத்தாலும், இது மாதிரி
டப்பா படத்துக்காக ஒவ்வொருத்தன்கிட்டேயும் அலைஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்!"
பக்கத்தில் வந்த சரவணன் முத்தையா முகத்துக்கு நேராய் சரவெடியைக் கொளுத்திப் போட்டான்.
"யாருடா இவன்?
என்னைப் பத்தி என்கிட்டேயே!" டைரக்டரின் டென்ஷன் முன்னை விட அதிகமானது.
"டேய்! நீ இன்னும்
கிளம்பலையா? வாயை மூடுடா ஸ்டுப்பிட்!"
"நீங்கல்லாம் பேஸ்புக்,
டிவிட்டர்னு கழுவி கழுவி ஊத்துனா ஒண்ணுமே கண்டுக்க மாட்டீங்க! முகத்துக்கு நேரா ஒண்ணு
சொன்னா உடனே ஆக்ரோஷமா பொரிஞ்சு தள்ளிடுவீங்க!"
"சும்மா நிறுத்துடா!
இங்க வந்து படம் பண்ணிப் பார்த்தா தெரியும்! என்னைக்கோ வந்து ஷூட்டிங்கை வேடிக்கைப்
பார்த்துட்டுப் போறவன் எப்படி வேணாலும் பேசலாம்! இன்னிக்கு எவன்டா இண்டஸ்ட்ரியில என்னை
மாதிரி இத்தனை வருஷம் நிலைச்சு நிற்கிறான்?"
"அதான் பார்க்கிறேனே!
ஒரு கேமராமேன், ஹீரோயினை ஆர்டர் பண்ணி வேலை வாங்கத் தெரியாம ஒரே ஷாட்டை ரெண்டு நாளா
எடுத்துகிட்டு இருக்கீங்களே!"
"யூ ப்ளடி பூல்!
எவன்டா இவனையல்லாம் உள்ளே விட்டது?" டைரக்டர் அலற, முகுந்த் நாகராஜன் சரவணன் முத்தையாவைத்
தள்ளிக்கொண்டு ஓடினான்.
"ஏன்டா இப்படி
ஷூட்டிங்ல வந்து கலாட்டா பண்றே?" முகுந்த் நாகராஜன் கெஞ்சும் குரலுக்கு மாறியிருந்தான்.
"அப்படின்னா குக்கிங்
ஆர்டர் வாங்கிக் கொடுங்க பாஸ்! நான் ஏன் வந்து தொந்தரவு பண்றேன்? நான் பாட்டுக்கு
சமைச்சுகிட்டு இருக்கேன். அதுவும் நம்ம சூப்பர் ஸ்டாருக்கு வரகரசிப் பொங்கலும், தினைப்
பாயாசமும் செஞ்சு அசத்தணும் தெரியுமா? என்னோட டிரீம்ஸ் உனக்கு என்ன பாஸ் தெரியும்?"
சரவணன் முத்தையா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பேசினான்.
"அதுக்கு நான்
படம் டைரக்ட் பண்ணாத்தான் முடியும். அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். இப்பத்தான் அஸிஸ்டென்ட்
டைரக்டரா இருந்து அசோசியேட் டைரக்டரா ஆகியிருக்கேன். இந்தப் படத்துக்கு அடுத்தாப்ல
ஐயா படம்தான். யார்கிட்டேயும் ஒர்க் பண்றாப்ல இல்ல. ஆனா, அதுக்கு இந்த டைரக்டர் மனசு
வெச்சு யாராவது புரோடியூசர்கிட்ட அப்ரோச் பண்ணி விட்டாத்தான்டா உண்டு. அதைக் கெடுத்துடாதடா!
இப்ப தயவுசெஞ்சு கிளம்பு!"
"அப்படின்னா நாளைக்கு
புரடியூசரைப் பார்க்கப் போறப்ப என்னையும் அழைச்சுகிட்டு போங்க பாஸ்!"
"நீ எதுக்கு?"
"நீங்க பாட்டுக்கு
குக்கிங் ஆர்டரை யாருக்காவது வாங்கிக் கொடுத்திட்டின்னா?"
"ஐயோ சாமி! கிளம்புடா!
கண்டிப்பா உன்னை அழைச்சுகிட்டுப் போறேன்!" முகுந்த் நாகராஜன் கைகூப்பிக் கொண்டிருந்த
போது, ஷூட்டிங் ஸ்பாட் அல்லோகலப்பட்டது.
"ஏய்! யார் மேல
கை வெச்சிருக்கே தெரியுமா? உன் மேல யார் யாரெல்லாம் கை வெச்சாங்றதைப் புட்டு புட்டு
வைக்கிறேனா இல்லியா பாரு!" கேமிராமேனின் சத்தம் டால்பி எபெக்டில் கேட்டது.
முகுந்த் நாகராஜனும்,
சரவணன் முத்தையாவும் ஓடிப் போய் பார்த்த போது கேமராமேனை அறைந்து விட்டு, திவ்யாஸ்ரீ
காரில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள்.
"பளார்!"
மறுபடியும் அறையும் சத்தம் கேட்டது.
முகுந்த் நாகராஜன் கன்னத்தைப்
பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். டைரக்டர் அவனை அறைந்து விட்டு அவரும் அவர் போக்குக்கு
காரில் சென்றார்.
சரவணன் முத்தையா அங்கு
சமைத்து வைக்கப்பட்டிருந்த டீ, காபி, சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் என்று எல்லாவற்றிலும்
ருசி பார்த்து விட்டு, "காபியில் சர்க்கரை பத்தல. சாம்பாரில் உப்பு பத்தாது. வத்தல்
குழம்புல கார வாடை. ரசம் கசம் மாதிரி இருக்கு!" என்று கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.
முகுந்த் நாகராஜனுக்கு
எரிச்சலாக வந்தது. சரவணன் முத்தையாவைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று தோன்றியது.
டைரக்டர் அறைந்தது அவனது பூச்சிப்பல் இருந்த கன்னத்துப் பக்கத்தில். கைவிரல்கள் பதிய
விழுந்ததில் வலியை அவனால் தாங்க முடியாமல் தவித்தான்.
"இப்படி ஒரு மானங்கெட்ட
பொழப்பை வாழ்றதுக்கு, நாளைக்கே நீங்க படத்தை டைரக்ட் பண்ணி சொந்த கால்ல நிற்கலாம்
பாஸ்!" சரவணன் முத்தையா சளியைத் துப்புவது போல காரி ஒரு ஓரமாகத் துப்பினான்.
முகுந்த் நாகராஜனுக்கு கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு அவமானத்தில் உடல் பிசுபிசுப்பது
போலிருந்தது.
அன்று, இரவெல்லாம் தூங்க
முடியாமல் தவித்தான் முகுந்த் நாகராஜன்.
"என்ன அசோசியேட்
டைரக்டருக்குத் தூக்கம் பிடிக்கலையோ? அப்ப நாளைக்கே புது புரடியூசரைப் பார்க்கப் போறோம்!"
சரவணன் முத்தையா இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்துக்கு
எல்லாம் அவனுடைய குறட்டை ஒலி முகுந்த் நாகராஜனின் டைரக்டர் திட்டுவதைப் போல் விஸ்வரூபம்
எடுக்கத் தொடங்கியது. அவனும் தூங்க ஆரம்பித்த போது மணி இரண்டைக் கடந்திருந்தது.
காலையில் எழுந்து முகுந்த்
நாகராஜன் கிளம்புவதற்குள் சரவணன் முத்தையா தயாராக இருந்தான்.
"என்ன பாஸ்! செல்
அத்தனை தடவை அடிக்குது! கண்டுக்காத மாதிரி தூங்கிட்டு இருக்கீங்க! உங்களோட மூஞ்சூரு
மண்டை டைரக்டரு இதோட பதினேழு முறை கால் பண்ணிட்டான். எடுத்து அட்டெண்ட் பண்ணலாம்னுதான்
பார்த்தேன். அவனை நினைச்சாலே அவன் எடுத்த டப்பா படம்தான் ஞாபகத்துக்கு வருது. நான்
வேற எடுத்து எதாவது சொல்லி அது உங்களோட சினிமா வாழ்க்கைக்கு தடையா அமைஞ்சிடக் கூடாதுல்ல.
அதான், எடுத்துப் பேசல. சரி பாஸ்! ஷூட்டிங் கிளம்பலாமா?"
"இல்லடா! இனி எவனோட
ஷூட்டிங்குக்கும் போகறதா இல்ல! இனி என்னோட படத்தோட ஷூட்டிங்குக்கு மட்டும்தான்!"
"அப்படிப் போடுங்க
பாஸ்! அப்ப கிளம்புங்க! புரடியூசரைப் பார்த்திடுவோம்!"
"நான் மட்டும்
போய் பார்த்துட்டு வந்திடறேன். கண்டிப்பா குக்கிங் கான்ட்ராக்ட் உனக்குத்தான்டா!"
"நான் ஒண்ணும்
உங்களை மாதிரி ஏமாளி இல்ல. என்னை அழைச்சுகிட்டுப் போங்க பாஸ். இல்லேன்னா இதுவரைக்கும்
கடனா வாங்கி வெச்சுருக்கிற நாற்பத்தைஞ்சாயிரத்தை எடுத்து வெச்சுட்டுப் போங்க பாஸ்!"
முகுந்த நாகராஜனுக்கு
என்ன சொல்வதென்றே புரியவில்லை. குழறியபடியே பேசினான், "வந்து தொலை! ஆனா புரடியூசர்
முன்னாடி எதையாவது பேசுனே, மவனே சங்குதான்டி உனக்கு!"
பிலிம் கேப்பிட்டல்
பிரைவேட் லிட் என்ற வரவேற்புப் பதாகைக்குப் பின்னால் பிரமாண்ட கட்டிடம் நின்றிருந்தது.
"இந்தக் கம்பெனிக்குத்தான்
பாஸ் நீங்க படம் பண்ணப் போறீங்களா?" சரவணன் முத்தையா எழுந்து வந்த சிரிப்பை அடக்கிக்
கொண்டே கேட்டான்.
"வாயைப் பொத்திகிட்டு
வா! இல்லேன்னா ரூம்மேட்னு கூட பார்க்க மாட்டேன். இங்கேயே கொன்னுப் போட்டுடுவேன்!"
"படத்தோட டைரக்டர்
மாதிரி பொறுப்பா பேசுங்க பாஸ். படத்தோட வில்லன் மாதிரி பேசுறீங்க. ஒருவேளை படத்துக்கு
டைரக்டரும், வில்லனும் நீங்கதானா?"
முகுந்த் நாகராஜன் அவனை
எரித்து விடுவது போல முறைத்தான்.
"ரொம்ப கஷ்டப்பட்டு
அப்பாய்ன்மென்ட் வாங்கியிருக்கேன். எனக்கு சான்ஸ் கிடைக்கலேன்னா இந்தக் கட்டடத்தோட
மாடியிலிருந்து விழுந்து கூட சூசைட் பண்ணிக்குவேன்!"
"அப்படில்லாம்
பண்ணிடாதீங்க பாஸ்! அப்புறம் என்னோட குக்கிங் கான்ட்ராக்ட் டிரீம்ஸ் எல்லாம் புஸ்வாணம்
ஆயிடும்!"
"பேசாம வாடா!"
முகுந்த் நாகராஜன் சொல்ல, அவனைப் பின் தொடர்ந்தான் சரவணன் முத்தையா.
ஒரு பெரிய அறைக்குள்
சென்று உட்கார்ந்த போது, சோபா அரை அடிக்கும் அதிகமாக இறங்கியது.
"எப்பா! எம்மாம்
பெரிய குஷன்! பாஸ் நீங்க படம் பண்ணாட்டாலும் பரவாயில்ல. இந்த மாதிரி சோபாவுல உட்கார்ந்துட்டுப்
போறதே ஜென்ம சாபல்யம்" என்றான் சரவணன் முத்தையா. பிலிம் கேப்பிடல் கிரியேட்டிவ்
டீமை சந்திப்பதற்காக இருவரும் ஏ.சி. குளிரில் அந்தக் கான்பரன்ஸ் ஹாலில் காத்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்
அந்த கான்பரென்ஸ் ஹால், கிரியேட்டிவ் டீம் உறுப்பினர்களால் நிரம்பியது.
"சொல்லுங்க மிஸ்டர்
முகுந்த் நாகராஜன்! பர்ஸ்ட் ஒன் லைன். அப்புறம் ப்ரீப் ஸ்டோரி. அது எங்களுக்குப் பிடிச்சிருந்தா
நீங்க சீன் பை சீனா சொல்லலாம்!" கிரியேட்டிவ் டீமில் கோர்ட் சூட், கூலிங் க்ளாஸோடு
அமர்ந்திருந்த ஒரு உறுப்பினர் சொன்னார்.
முகுந்த் நாகராஜன் குலசாமியை
ஒருமுறை மனத்தில் நினைத்துக் கொண்டான். ஒன்லைனைச் சொல்லி விட்டு, ப்ரீப் ஸ்டோரியைச்
சொல்ல ஆரம்பித்தான். அங்கே அமர்ந்திருந்தவர்கள் முகத்தில் எந்த வித ரியாக்சனும் இல்லை.
"சீன் பை சீன்
சொல்லாலாமா?" என்று அவன் கேட்பதற்குள், "நோ மிஸ்டர் முகுந்த்! பெட்டர்
லக் நெக்ஸ்ட் டைம்!" என்றார் வழுக்கைத் தலையும், சபாரியுமாக அமர்ந்திருந்த கிரியேட்டிவ்
டீமின் உறுப்பினர் ஒருவர்.
"சார்! இது பிடிக்கலேன்னா
இன்னொரு ஒன் லைன் வெச்சிருக்கேன். கேட்கிறீங்களா?"
"ம்!" என்ற
அலட்சிய தொனியோடு "ஓ.கே! ப்ரசீட்" என்றார் வேட்டி, சட்டையில் அமர்ந்திருந்த
மற்றுமொரு கிரியேட்டிவ் டீமின் உறுப்பினர்.
முகுந்த் சொல்ல ஆரம்பித்தான்.
அவர்கள் பேருக்குக் கேட்பது போல இருந்தது.
திடீரென்று சரவணன் முத்தையா
எழுந்தான். "இந்த மாதிரி கதையை எடுத்தீங்கன்னா உங்க ஆபிஸைக் காயிலான் கடைக்குத்தான்
போடணும். கதைன்னா எனர்ஜி வேணாமா? இது வரைக்கும் என்னா படம் எடுத்திருக்கீங்க நீங்க?
இதுக்கு பன்னிரெண்டுப் பேரைக் கிரியேட்டிவ் டீமுன்னுப் போட்டு வேஸ்ட் ஆப் டைம்! வேஸ்ட்
ஆப் மணி!"
"அப்படின்னா நீங்கதான்
ஒரு ஸ்டோரியைச் சொல்லுங்களேன்! நல்லா இருந்தா உங்களை வெச்சே எடுக்குறோம்!"
கோர்ட், சூட் பார்ட்டி நக்கலாகச் சொன்னார்.
"சார்! நான் கிளம்புறேன்!"
முகுந்த் நாகராஜன் ஆவேசத்தோடு அங்கிருந்து வெளியேறினான்.
யாரும் அவனை ஆறுதலுக்காகவாவது
கொஞ்சம் இருங்க என்று தடுப்பதாகத் தெரியவில்லை. முகுந்த் அந்த ஹாலை விட்டு வெளியே
வந்தான். டீக்கடையில் ஒரு சமோசாவையும், டீயையும் வாங்கிக் கொண்டான். சமோசாவில் பழைய
எண்ணெய்யின் வாடை அடித்தது. கசந்த எண்ணெயோடு அதைப் பிய்த்துப் பிய்த்துத் தின்றான்.
இடையிடையே டீயைப் பருகிக் கொண்டான். பின் சரவணன் முத்தையாவுக்காகக் காத்திருக்க மனமில்லாதவனாய்
ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சுட்டெரிக்கும் வெயிலில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தை
நடந்தே கடந்தான்.
ரூமுக்குச் சென்று படுத்தவன்
சரவணன் முத்தையா வந்து எழுப்பிய போதுதான் எழுந்தான்.
"என்ன துரை! குக்கிங்
ஆர்டரை வாங்கிட்டீங்களா?" என்றான் நக்கலாக.
"குக்கிங் ஆர்டரா?
என்னோட அடுத்தப் படத்துக்கு நீங்கதான் பாஸ் அசோசியேட் டைரக்டர்!"
"என்னாச்சு உனக்கு
மரை கழண்டுச்சாடா? சமைக்கிற நீயெல்லாம்..." என்றான் முகுந்த் நாகராஜன் பி.எஸ்.
வீரப்பா ரேஞ்சுக்குச் சிரித்தபடியே.
"குக்கிங்கோ,
சினிமா மேக்கிங்கோ, ரெண்டுக்கும் டேஸ்ட்தான் மெயின்!" என்று சொல்லியடியே இரண்டு
சட்டை பட்டனைக் கழற்றி விட்டு, சட்டைக்குள் போட்டிருந்த பனியனுக்குள் இருந்த ஐந்து
ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்து வைத்தான் சரவணன் முத்தையா.
கண்கள் விரிய ஆச்சரியமாய்ப்
பார்த்தான் முகுந்த் நாகராஜன்.
"ஒன் லைன், ஸ்டோரி
எல்லாம் ஓ.கே! அதான் அட்வான்ஸ் பண்ணி புக்கிங் பண்ணிட்டாங்க. இன்னும் ரெண்டே நாள்ல
எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணிடலாம்!"
ஒன்றும் புரியாமல் விழித்தான்
முகுந்த் நாகராஜன். "அப்படி என்ன கதைச் சொன்னே?" அவனுடைய 'டா' போட்ட பேச்சு
மாறியிருந்தது.
"ரஜினி டோன்ல,
ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்ல நயன்தாரா நடிக்குற கதை."
"படத்தோட ஒன்லைன்?"
முகுந்த் நாகராஜன் நம்ப முடியாமல் கேட்டான்.
"ஹஸ்பெண்டே வில்லனா
இருந்து, ஒரு ஹீரோயின் ஹீரோ போல நடிச்சா எப்படி இருக்கும்?"
"அப்ப ஸ்டோரி
சொல்லிட்டீயாப்பா!" மரியாதையான தொனிக்கு மாறியிருந்தான் முகுந்த் நாகராஜன்.
"ஸ்டோரி, சீன்
பை சீன் எல்லாம் முடிஞ்சிடுச்சு!" சரவணன் முத்தையா சொல்ல, முகுந்த் நாகராஜன்
விரக்தியோடு பார்த்தான், அங்கே ஃபேன் காற்றில் அவன் பத்தாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும்
ஸ்கிரிப்ட் படபடத்தது!
-
விகடபாரதி
நன்றி - கல்கி - 4 ஜனவரி
2015 இதழ் - பக்கம் 56 முதல் 60 வரை
*****
No comments:
Post a Comment