காந்தியாரைக் கொல்வதற்குத் துப்பாக்கித்
தேவைப்பட்டது!
மெல்லவும் விழுங்கவும் முடியாத வாழ்க்கை
என்கிறார்கள். எத்தனை சாசுவதான உண்மை.
உணவை சரியாக மெல்லவும் முடியாமல், அரை
குறையாக ஏதோ மென்று, ஏதோ தின்று, விழுங்கவும் முடியாமல் ஏதோ அரையும் குறையுமாக லபக்
லபக் என்று விழுங்குவது பாதி விழுங்காதது பாதியாக உண்கிறார்கள் வாழ்க்கையின் அவசரத்தால்
மெல்லப்பட்ட, தின்னப்பட்ட, விழுங்கப்பட்ட நம் தலைமுறை மனிதர்கள்.
முன்னோர்களின் வாழ்க்கை அப்படியில்லை.
அவர்கள் நிதானமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வில் அவசர கதி என்பது துளியும் இல்லை.
மெதுவாக உண்டார்கள். நீண்ட காலம் வாழ்ந்து உயிரையும் மெதுவாகவே விட்டார்கள். நம் தலைமுறை
போல் அவசர அவசரமாக வாழ்ந்து அவசர அவசரமாக உயிரை விடவில்லை.
அருந்தும் தேநீரை மைக்ரோ செகண்டுகளில்
அருந்துபவர்கள் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல சிறு சிறு சிப்பங்களாக ரசித்து ருசித்து
அருந்த வேண்டிய பானம் அல்லவா தேநீர்.
அவசரத்துக்குப் பிறந்த முந்திரிக் கொட்டைகளாக
மாறி விட்ட நம்மிடம் நம் வயிறு படும் பாடு கழுதை படாது.
அரைக்காமல் அரைகுறையாக மென்று விழுங்கும்
உணவுக்கு வயிற்றிலும் பற்கள் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக வயிற்றில் பற்கள் இல்லை. வயிறு
என்ன செய்யும்?
வாய் வயிற்றுக்குத் தோழன். வயிறு செய்யும்
வேலைகளைப் பாதி வாய் செய்து விடும். செரிக்கவும், சிதைக்கவும் செய்ய வயிறு சுரக்கும்
பல சுரப்புகளை, வாயில் சுரக்கும் உமிழ் நீரில் சுரக்கும் சுரப்புகள் செய்யும். உணவைச்
சரியாக மென்று விழுங்கனால் அன்றோ உமிழ்நீருக்கு அது சாத்தியமாகும்.
உமிழ்நீர் கலக்காமல் வயிற்றுக்குள் செல்லும்
உணவுமுறையே நம்முடைய தற்போதைய உணவுமுறையாகி விட்டது. இப்படி வயிற்றுக்குத் தோழனாக
இருக்க வேண்டிய வாய், நம்முடைய அவசர வாழ்க்கையால் வயிற்றுக்குப் பகைவனாகி விட்ட குற்ற
உணர்ச்சியால் கூனிக் குறுகி நிற்கிறது.
காந்தியார் உணவை உண்பதற்கு நீண்ட நேரம்
எடுத்துக் கொள்வார். அதனால்தான் நோய்களால் கொல்ல முடியாத அவரைக் கொல்வதற்கு துப்பாக்கி
தேவைப்பட்டது இந்தத் தேசத்துக்கு.
நமக்கோ நம்மைக் கொல்வதற்கு துப்பாக்கிகளோ,
பீரங்கிகளோ, அணு ஆயுதங்களோ தேவையில்லை. நமது உணவுமுறையே போதும். கொஞ்சம் நாம் அதை
மெதுவாக மாற்றிக் கொள்ளாவிட்டால், அது விரைவாகக் கொன்று விடும். விரைவாகக் கொன்று
கொண்டும் இருக்கிறது. அதன் பேர் மட்டும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை என்பதாக இல்லாமல்
மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு நோய், கொழுப்பு நோய், உடல் உள்ளுறுப்புச் செயலிழப்புகள்
என்பதாக இருக்கிறது.
*****
No comments:
Post a Comment