14 Nov 2017

உணவிலிருந்து நேரடி அரசியலுக்கு!

உணவிலிருந்து நேரடி அரசியலுக்கு!
            உண்ட பின் தேநீர் (டீ) அல்லது குளம்பி (காபி) பருகுவது ஏற்புடையதா என்று அடுத்த விசாரிப்பு.
            உண்ட பின் நீர் பருகுவதோ அவசியமற்றது எனும் போது தேநீரோ, குளம்பியோ பருகுவது அநாவசியமானது. தவிர இரண்டு பானங்களும் முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியது.
            தேநீர், குளம்பி - தவிர்க்க இயலாது என்றால் குளம்பிக்கு தேநீர் பரவாயில்லை. தேநீரில் வெள்ளைச் சீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரைச் சேர்ப்பது நல்லது. அது இயலாத பட்சத்தில் அச்சு வெல்லம் பரவாயில்லை.
            பால் கலக்காமல் தேநீர் பருகுவது நல்லது. பால் கலந்த தேநீர்தான் வேண்டும் என்றால் கறந்த பசும்பால் சேர்ப்பது நலம். அப்படியானால் பொட்டலப் பால் (பாக்கெட் பால்) கூடவே கூடாது என்பது பொருள்.
            இப்படியெல்லாம் கணக்குப் பார்த்துப் பருகுவதற்குப் பதில் பருகாமலே இருந்து விடலாம் என்கிறீர்களா? அதனால்தான் இரண்டு பானங்களும் தவிர்க்கப்பட வேண்டியது என்று முன்னரே குறிப்பிட்டேன்.
            தவிர, இதில் தேநீர்க் கடைகளுக்கோ, குளம்பிக் கடைகளுக்கோ எதிரான அரசியல் எதுவுமில்லை. இவ்வளவு காலமும் தேநீர்க் கடைகளும், குளம்பிக் கடைகளும் வைத்துப் பிழைத்தவர்கள் எப்படிப் பிழைப்பார்கள் என்ற எதிர் கேள்வி எழுப்பினாலும் நலமே.
            அவர்கள் சிறுதானியக் கஞ்சி, தேங்காய்ப் பால், ஊட்டச்சத்து மாவுக் கஞ்சி, தானியக் கூழ் என்று ஆரோக்கியப் பானங்களை விற்கும் கடையாக தங்கள் கடையை மாற்றலாம். 
            அதனால் மக்களின் உடல்நலமும் மேம்படும். தேநீர்க் கடைகளுக்கு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் ஒன்றாவது குறையும்.
            இதனால் மருந்துக் கடைகள் பாதிக்கப்படும் என்றால், அவர்கள் இஞ்சி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை என்று நாட்டு வகை மருந்துகள் மற்றும் நாட்டு வகை சரக்கு வகையறாக்களை விற்பனை செய்யலாம். பக்க விளைவுகள் இல்லாத பொருட்களை விற்பதாக அவர்களுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள் குவியும் அல்லோ!

*****

2 comments:

  1. யாருக்கும் பாதிப்பில்லாத அறிவுரை! சிறப்பு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இயல்பான இயற்கையான வாழ்வு என்பது யாருக்கும் பாதிப்பில்லாத வாழ்வே!

      Delete

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...