தூக்கத்தை விற்று மெத்தையை வாங்குவதா?
இரவு நேரம் உறங்குவதற்கானது. அப்படித்தான்
நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இரவுத் தொழிலாளிகளுக்கு...?
நாட்டில் தொழில்வளம் பெருகி வளர்ந்து
விட்டதாக நினைக்கிறோம். அது எத்தனைப் பேரின் இரவுத் தூக்கத்தை உண்டு செரித்துக் கொண்டபடி
வளர்ந்து கொண்டிருக்கிறது.
தொழில் என்பது நாட்டின் வளத்துக்குத்தானா?
ஆரோக்கியமான மனித வளத்துக்குக் கிடையாதா? இரவு நேர உறக்கம் தொலைக்க வைக்கும் தொழில்
ஆரோக்கியமான மனிதவளத்தை அழிக்கத்தானே செய்கிறது.
அவர்களின் இரவு நேர அந்த உழைப்பு இந்த
நாட்டுக்குப் பயன்பட்டால் கூட பரவாயில்லை. அது கூட, எங்கேயோ இருக்கின்ற அமெரிக்கக்காரனுக்கும், பிரிட்டீஷ்காரனுக்கும்தானா?
பகல் நேரப் பணி எட்டு மணி நேரம் என்றால்
இரவு நேரப் பணி நான்கு மணி நேரமாகத்தான் இருக்க வேண்டும். இரவு நேரப் பணிகள் அப்படியா
இருக்கின்றன? பத்து மணி நேரம் பனிரெண்டு மணி நேரங்கள் வரை நீள்கின்றன.
உறக்கத்தைத் தந்தால் ஊதியத்தைத் தருவேன்
என்பதான தொழில் வளர்ச்சி எந்த நாட்டுக்கும் நல்லதல்ல. ஒரு நாடு அப்படிப்பட்டதான தொழில்
வளர்ச்சியை ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அந்நிய முதலீடு வருகிறது என்பதற்காக உறக்கத்தை
அடமானம் வைப்பதா? மனித குலத்தின் மிகப் பெரிய முதலீடே உறக்கம்தான். அந்த முதலீட்டுக்கு
எந்த முதலீடும் ஈடாகா முடியாது.
தூக்கத்தை விற்று வாங்கப்பட்ட ஒரு அழகிய
மெத்தையாக நம் நாடு இருப்பதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?
*****
தூக்கம்....
ReplyDeleteமனித குலத்தின் மிகப்பெரிய முதலீடு..
மிகச் சிறப்பான வரிகள்.. உறக்கம் தொலைக்கத் தொலைக்கத்தான் மனிதனுக்கு நோய்கள் பெருகியதோ!
தூக்கத்தைத் தொலைக்கத் தொலைக்கத்தான் மனிதனுக்கு நோய்கள் பெருகியதோ?! என்ற தங்கள் ஐயம் கலந்து வியப்புக்கு,
Deleteதூக்க மாத்திரைகளின் விற்பனையே சரியான சான்று ஐயா!