13 Nov 2017

வேகம் 30 நிமிடம்! Speed 30 min!

வேகம் 30 நிமிடம்! Speed 30 min!
            மெதுவாக உண்பது வாழ்நாளை நீட்டிக்கும் என்று நேற்று எழுதிய பிறகு, மெதுவாக உண்கிறாமோ, வேகமாக உண்கிறோமா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று ஏகப்பட்ட விசாரிப்புகள்.
            உண்ணும் போது நீங்கள் நீர் அருந்துகிறீர்களா? இல்லையா? என்பதைப் பொருத்து அதை ஒருவாறாக மதிப்பிடலாம். அதிக காரம் இல்லாத, மசாலா கலப்புகள் பெருமளவில் இல்லாத உணவை உண்ணும் போது நீர் பருகினால் நீங்கள் வேகமாக உண்பதாகத்தான் பொருள்.
            நீங்கள் உண்ணும் வேகத்தைக் குறைக்க வேண்டும். நன்றாக மென்று உமிழ்நீரோடு கலக்கச் செய்து கூழ்மமாக்கி உணவை உள்ளே அனுப்ப வேண்டும். உணவு உண்ணும் போது உங்கள் தாகத்துக்குத் தேவையான நீர் உமிழ்நீர் வடிவிலேயே சுரந்து விடும். அநாவசியமாக நீர் பருக வேண்டியதில்லை. இதைக் கடந்து நீங்கள் பருகுகிறீர்கள் என்றால் உணவை உமிழ்நீரோடு கலக்காமல் விழுங்குகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அப்போது கட்டாயம் உண்ணும் போது உங்களுக்கு நீர்த் தேவைப்படும். விக்கல் தோன்றியாவது உங்களை நீரை உட்கொள்ளச் செய்து விடும்.
            ஆக, உணவிற்கு முன்னோ, உணவை உண்ணும் போதோ, உணவு உண்ட பின்னோ கட்டாயம் உங்களுக்குத் தாகம் ஏற்படக் கூடாது. தாகம் ஏற்பட்டு நீர் அருந்த அவசியம் இல்லாத அளவுக்கு உணவை மெதுவாக மென்று உமிழ்நீரோடு நன்கு கலக்கும் படி சாப்பிடுங்கள். உமிழ்நீரிலே தாக சாந்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
            மற்றொரு செய்தி என்னவென்றால் உண்ட உடனே வாய்க் கொப்புளிப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். வேகமாக உண்பதை மெதுவாக உண்பதாக மாற்றிக் கொள்வது போல, இதுவும் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு பழக்கமே.
            உணவை உண்ட உடன் வாயைக் கொப்புளித்தால்தானே வாய்த் தூய்மையாக இருக்கும் என்ற நீங்கள் நினைக்கலாம். உணவை உண்டு முடித்த பின்னும் உணவைச் செரிப்பதற்கான உமிழ்நீர்ச் சுரப்புகள் வாயில் சுரந்து கொண்டுதான் இருக்கும். அதாவது மின்விசிறியின் இயக்கத்தை நிறுத்திய பிறகும் அது சிறிது நேரம் இயங்குவது போல. உண்ட பின் சுருக்கும் சுரப்புகள் வயிற்றுக்குள் செல்ல வேண்டும். மாறாக நீங்கள் வாயைக் கொப்புளித்து விட்டால் வாய் தான் சுரக்க வேண்டிய சுரப்புகளை நிறுத்திக் கொள்ளும்.
            அப்புறம் எப்போது வாயைக் கொப்புளிப்பது? வாயைக் கொப்புளிப்பதே தவறா? என்றால் உண்டபின் வாயில் பிசுபிசுப்புத் தோன்றும் நேரமே வாய்க் கொப்புளிக்க ஏற்ற நேரம். அல்லது உண்ட பின் சுமாராக இருபது நிமிடங்கள் கழித்து வாய்க் கொப்புளிக்கலாம்.
            உணவு குறித்த இந்த சிறிய பழக்கங்களை நீங்கள் மாற்றியமைப்பதன் மூலம் ஏப்பம், நெஞ்சு கரிப்பு, பின் வழியாக வெளியேறும் காற்று வெளியேற்றம் உட்பட பல செரிமான இடர்பாடுகள் நீங்குவதை நீங்கள் உணரலாம்.
            ‍மிக முக்கியமாக மெதுவாகச் சாப்பிடுவதன் வேகமாக வியாதிகளை விரட்டியடித்து விடலாம். உண்பது குறித்த நேரம் கன கச்சிதமாக வேண்டும் என்பவர்களுக்கு சுமாராக, பேருண்டியை உண்பதற்கு 30 நிமிடத்துக்கு மேலும், சிற்றுண்டியை உண்பதற்கு 15 நிமிடங்களுக்கு மேலும் காலம் எடுத்துக் கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...