சின்ன சின்ன ஆசை! சின்ன வெங்காயம் தின்ன
ஆசை!
சின்ன வெங்காயம் விலையேறும் போது பல்லாரி
வெங்காயம் வாங்குவதும், பல்லாரி வெங்காயம் விலையேறும் போது சின்ன வெங்காயம் வாங்குவதும்
சமீப காலத்திய நம் பாரம்பரிய வழக்கம்.
தமிழகத்து மக்களாகிய நாம் சின்ன வெங்காயம்
வாங்கி பல மாதங்கள் இருக்கும். சின்ன வெங்காயத்தின் விலை ஏறி பல மாதங்களாகி விட்டன.
இறங்கி வர அதற்கு மனம் வரவில்லை என்பதால் வாங்கிப் போட மாத பட்ஜெட்டும் நமக்கு இடம்
தரவில்லை.
சின்ன வெங்காயம் தரும் நோய் எதிர்ப்பாற்றலை
பல்லாரி வெங்காயம் தராது. பல்லாரி வெங்காயத்துக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்
தன்மை இருப்பதாக கூட நண்பர்கள் சிலர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்கு
என்று ஆடுவது போல டெங்கு தலைவிரித்து ஆடும் இந்த நாட்களில் சின்னவெங்காயத்தோடு வெல்லத்தைச்
சேர்த்து சாப்பிட்டால் டெங்கு ஜூரத்திலிருந்து விடுபடலாம் என்று மார்க்கம் சொல்கிறார்கள்
இணையவாசிகளும், வாட்ஸ்அப்காரர்களும்.
படுமோசமான அழுகல் நிறைந்த சின்ன வெங்காயம்
கிலோ எழுபது ரூபாய்க்கும், சற்று அழுகல் கலந்த சுமாரான சின்ன வெங்காயம் எண்பது ரூபாய்க்கும்,
தரமான அழுகல் இல்லாத நல்ல நிலையில் இருக்கும் சின்ன வெங்காயம் தொண்ணூறிலிருந்து நூறு
ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
நான் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சிடுகிறேனா என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
விலைக்காக யோசித்து யோசித்து சின்ன வெங்காயம் சாப்பிட்ட தமிழர்கள் நிச்சயம் ஆறெழு
மாதங்களுக்காக முற்பட்டவர்களாக இருப்பார்கள்.
இப்படிச் சின்ன வெங்காயத்தை விலையேற்றி
விட்டு டெங்குவுக்குப் பலியாக்குவது கூட ஒரு தந்திரமான நடவடிக்கையாக ஏன் இருக்கக் கூடாது?
சின்ன வெங்காயத்தின் விலை குறைந்தால் கூட
டெங்கு மரணங்கள் குறைய நேரிடலாம். மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் கட்டுபடியாகக்
கூடிய வாங்கும் விலையில் கிடைத்தால் நித்தம் நித்தம் நிகழும் மரணங்கள் நிகழாது.
விலைவாசியை ஏற்றி விட்டு நிகழ்த்தும் மரணங்களை
டெங்கு மரணங்கள் என்றும் சொல்லலாம். அலட்சியத்தால் நிகழும் மரணங்கள் என்றும் சொல்லலாம்.
அதே போல் மிளகின் விலையும். மிளகு தரும்
நோய் எதிர்ப்பாற்றலுக்கு அளவில்லை என்கிறார்கள். அது ஏறியிருக்கும் விலையின் அளவுக்கும்
அளவில்லை. அவ்வளவு ஏறியிருக்கிறது!
*****
No comments:
Post a Comment