புழுக்களாக்கப்பட்ட நாம்
பணம் புரிந்தவர்கள்தான்
இந்த நாட்டை
ஆள முடியும் என்கிறார்கள்
அதை உண்மை
என மெய்ப்பிப்பது போல
ஒரு வாக்குக்குத்
தரும் பணமே
ஜனநாயகத்தைத்
தீர்மானிக்கிறது
நல்லவர்களை,
வல்லவர்களை, நாடு காப்பவர்களை
பணத்தின் தலைமையயை
ஏற்றுக் கொண்டு
நேர்மையைத்
தியாகம் செய்ய வலியுறுத்துகிறார்கள்
பணத்திற்கு
எதிரான ஒரு கேள்வியை
குற்றவாளியாக்கி
தண்டிக்க முற்படுகிறார்கள்
மிரட்டல்களும்,
தண்டங்களும் விளைவிக்கும்
அச்சங்களை
எதிர்த்துக் கேட்கப்படும் கேள்விகளை
தீவிரவாதிகளாக்கிச்
சுட்டுக் கொல்கிறார்கள்
பணம் நமக்கான
தூண்டிலாகி விட்டது
அச்சம் நமக்கான
சுவாசமாகி விட்டது
பிழைத்திருக்க
வேண்டுமெனில்
சொல்வதைத்
திருப்பிச் சொல்லுங்கள்
செய்யச் சொல்வதை
மீண்டும் மீண்டும் செய்யுங்கள்
மீறினால் சிலுவையில்
ஏற்ற
நீங்கள் ஏசுக்களும்
அல்ல
சுட்டுக் கொல்வதற்கு
மகாத்மாக்களும் அல்ல
பொரித்து
எடுப்பதற்கான புழுக்கள்தான்
நாம் அவர்களுக்கு
என்பதை உணருங்கள்
*****
No comments:
Post a Comment