நிலவேம்பைக் கடிக்கும் வதந்தி கொசுக்கள்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில்
கொசு கடித்து உருவாகும் டெங்குக்கு மருந்தான நிலவேம்பு கசாயத்தையும் கடிக்க ஆரம்பித்து
விட்டன வதந்தி கொசுக்கள்.
சரியான ஆய்வு முடிவுகள் வரும் வரை நிலவேம்பு
கசாயம் கொடுக்க வேண்டாம் என்று உலக நாயகர் கமல் தனது நற்பணி மன்றத்தினருக்கு வேண்டுகோளும்
விடுத்து விட்டார்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கான ஒரு முடிவு வந்து
விட்டது! இனி நிலவேம்பு கசாயத்திற்கு சரியான ஆய்வு முடிவும் விரைவில் வந்து விடும்!
ஆளாளுக்குக் கொடுக்கும் அளவுக்கு எளிமையான
மருந்தாக நிலவேம்பு கசாயம் ஆனதில் பொறுக்க முடியாத மருந்து அரசியல்வாதிகள் கட்டக்
கடைசியாக செய்யும் வதந்தி வெடிகுண்டை வெடிக்க செய்து விட்டார்கள்.
ஆண்மைக் குறைவு ஏற்படும் என்று கடைசி அஸ்திரம்
வரை நிலவேம்பு கசாயம் மேல் பிரயோகிக்கப்படுகிறது.
நிலவேம்புக் கசாயத்தில் இவ்வளவு ஆராய்ச்சி
செய்பவர்கள் சுற்றுப்புறம் தூய்மையில்லாமல் இருப்பதில் ஏன் எந்த வித ஆராய்ச்சியும்
செய்ய யோசிக்கிறார்கள்? டெங்கு கொசுக்கள் பரவும் வகையில் நிலைமை சீர்கெட்டுக் கிடப்பதை
ஏன் உணர மறுக்கிறார்கள்? உள்ளாட்சி அமைப்புகளால் மட்டுமே மிக எளிமையாக சீர் செய்யக்
கூடிய இத்தகைய சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத நிலையை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்?
ஆண்மைக் குறைவு, பெண் மலட்டுத் தன்மை இவைகளுக்கு
பாலிதீன் பைகளும், அவைகளில் வாங்கிச் செல்லும் சூடான மற்றும் குளிர்ந்த உணவுப் பொருள்களும்
முக்கியக் காரணம் என்று தெரிந்தும் அது குறித்தும் அது தடை செய்யப்படுவது குறித்தும்
ஏன் பேச மறுக்கிறார்கள்?
"காய்ச்சலுக்கு என்று ஆயிரமாயிரம்
மருந்துகளையும் மாத்திரைகளையும் நாங்கள் தயாரித்து வைத்திருப்போம்! நீ நிலவேம்பு என்ற
ஒற்றை மருந்தில் எல்லாவற்றையும் இலவசமாகக் குணப்படுத்திப் போய்க் கொண்டிருப்பாய்!
தயாரித்த மாத்திரைகளைத் தமிழன் வாய்களில் கொட்டிக் காசு பார்க்காமல் தடுப்பாய்! எல்லாவற்றையும்
பொறுத்துக் கொண்டு பார்த்திருப்போமா?" என்ற வணிக ரீதியிலான மருந்து அரசியல்
செய்யும் சதிதான் இது என்பதைப் புரிந்து கொள்ள வதந்திகள் என்ற பெயரில் முன் வைக்கப்பட்டுள்ள
அறமற்ற அர்த்தமற்ற அந்த வாதங்களே போதுமானது.
எவ்வளவு விரைவாக நிலவேம்புக் கசாயம் குறித்த
ஒரு மோசமான வதந்தியைப் பரப்பி விட்டார்கள்! தினம் டெங்குவால் பத்து பேர் சாவது சாதாரண
செய்தியாகக் கூட பரவ மாட்டேன்கிறதே!
"சாகுபவர்கள் சாவட்டும்! நிலவேம்புக்
கசாயம் குடித்து மட்டும் பிழைத்துக் கொள்ளாதே! ஆண்மைக் குறைவோ, பெண் மலட்டுத் தன்மையோ
ஏற்பட்டு அவதிப்படாதே!" என்ற ரீதியிலான பிரச்சாரங்கள் மூலிகை மருத்துவ முறையையே
கொல்வது போல இருக்கிறது.
அனுபவத்தின் அடிப்படையிலும், உள்ளுணர்வின்
அடிப்படையிலும் வளர்க்கப்பட்ட நமது கைவைத்திய முறை உள்ளுணர்வு அற்றவர்களாலும், அனுபவம்
அற்றவர்களாலும் பரப்பப்படும் வதந்திகளால் குற்றுயிரும் கொலையுயிரமாக நம் கண் முன்னே
அகதி போல போராடிக் கொண்டிருக்கிறது.
நமது கிராமங்களில் பெண் மலட்டுத் தன்மைகக்கான
மருந்தாக மலைவேம்பு இலைச்சாறு இன்றும் கொடுக்கப்படுகிறது. பலருக்கு குழந்தையும் பிறக்கிறது
பைசா காசில்லாமல்.
இருந்த மலைவேம்பு, மர வேம்பு, நிலவேம்பு
என எல்லாவற்றையும் வெட்டிச் சாய்த்து விட்டு அந்த இடங்களில் எல்லாம் லட்சங்களில் பணம்
கட்டிக் குழந்தையைப் உருவாக்கித் தரும் குழந்தைபேறு மருத்துவமனைகளைக் கட்டி விட்டு
நிலவேம்பு கசாயம் கொடுக்க ஆரம்பித்தப் பிறகுதான் இது போன்ற மருத்துவமனைகள் பெருகி
விட்டதாக வதந்தி பரப்பும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
பொய் எது, மெய் எது என்று தெரியாமல் இது
போன்ற குழப்ப நிலையில் வைத்து காசு பண்ணுவதே சர்வதேச வணிக அரசியல் என்பதைப் புரிந்து
கொண்டால் நிலவேம்பின் மீது வைக்கப்பட்டுள்ள வதந்திக் குற்றச்சாட்டுகளை நாம் மிக எளிதாகப்
புரிந்து கொள்ளலாம்.
*****
No comments:
Post a Comment