வரலாற்றுக்கும் உண்மைக்கும் நிலவும்
நெடுந்தூரம்
இந்த அபவாதங்கள்
இத்துடன் முற்று பெறாது
புறநானூற்றில்
சிதைந்த வரிகளுக்காக
சண்டையிட நேரிடலாம்
அகநானூற்றின்
தொலைந்த வரிகளுக்காக
ஊடல் கொள்ளலாம்
பரிபாடலில்
காணாமல் போனப் பாடல்களுக்காக
வரிந்து கட்டிக்
கொண்டு வரலாம்
அவற்றின் இடைச்செருகலாக
தடியடியில்
முடிந்த மெரினா புரட்சியை
இரவில் ஒளிர்ந்த
செல்பேசி வெளிச்சக் கீற்றுகளைக் கொண்டு
இந்திர விழா
என திரித்து விடலாம்
நெடுவாசல்
போராட்டமென ஒன்று
நிகழ்த்தப்படாமலே
எதிர்ப்பின்றி
ஹைட்ரோ கார்பன்
திட்டம்
நிறைவேற்றப்பட்டதாக
பதியப்படலாம்
தில்லியில்
நிகழும் உழவர் போராட்டம்
மாநகர் மக்களை
மகிழ்விக்க நடந்த
வேடிக்கைக்
கூத்தென விளம்பப் படலாம்
அறிந்தோ அறியாமலோ
வரலாறு என்பது
நாம் எழுத
கை வைக்க முடியாத
நெடுந்தூரத்தில் இருக்கிறது
அவர்கள் கை
வைத்து
பொய் வைத்து
பூச்சுடும் அருகாமையில் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment