விதிகளுக்காக விதியே என்று செத்துப்
போ!
மனிதர்களுக்காக விதிகள் உருவாக்கப்பட்ட
நிலை மாறி, விதிகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த விதிகள் அனைத்தும்
நிறுவனங்களுக்குக் கட்டுபடச் செய்து பணங்காய்ச்சி மரங்களுக்கு நீர் பாய்ச்சும் அடிமை
விலங்குகளை நம் கையில் பூட்டுகின்றன.
ஒரு கல்வி நிறுவனத்தை அணுகுங்கள். ஆயிரத்தெட்டு
விதிகளைச் சொல்வார்கள். அங்கிருக்கும் கழிவறையில் நீங்கள் மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல்
சிறுநீர் கழிக்க முடியாது.
நாம் படிக்காமல் இருக்க முடியாது என்ற
நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். நல்ல முயற்சிதான். நல்ல எண்ணம்தான். அதற்காக எல்லாம்
அவர்கள் நம்மைப் படிக்க வைக்க நினைக்கவில்லை. நாம் படிக்காவிட்டால் அவர்கள் பணம் பண்ண
முடியாது.
மனிதன் எதையெல்லாம் இன்றியமையாகத அடிப்படைக்
கூறுகள் என்று சொல்கிறானோ அதில் எல்லாம் பணம் பண்ணுவது என்ற மகத்தான் கோட்பாட்டுக்கு
நிறுவனங்கள் வந்து விட்டன.
குறிப்பாக குடிக்கின்ற குடிநீரை எடுத்துக்
கொள்ளுங்கள். மனிதனின் அடிப்படையான உயிரியல் உரிமை அது. காசு கொடுத்து பாட்டிலில்
வாங்கித்தான் குடிக்க முடியும் என்ற நிலையை எவ்வளவு சாதாரணமாக உருவாக்கி விட்டார்கள்!
இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம்
என வாங்க வைப்பார்கள். வாங்கா விட்டால் விளம்பரங்களில் கேலி பேசுவார்கள். வாங்கி விட்டீர்களானால்
வரியைக் கட்ட வைத்து, பெருநிறுவனங்களுக்கு லாபப் பங்கீடு செய்த திருப்தியோடு டோல்கேட்
கட்டணங்களைப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
இதற்கெல்லாம் மேலாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் அங்கு படிக்க முடியாது. அவ்வளவு விதிகளைச் சுருக்குக்
கயிறுகளாகத் தொங்க விட்டிருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment