14 Oct 2017

புல்லட்டுகளோடு கொஞ்சம் வழிப்போக்கர்களையும் கவனியுங்கள்!

புல்லட்டுகளோடு கொஞ்சம் வழிப்போக்கர்களையும் கவனியுங்கள்!
            புல்லட் ரயில் விடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கும் நாட்டில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்களால் மக்கள் சாகிறார்கள்.
            மேற்காணும் வாக்கியம் கற்பனையாக முரணாக எழுதும் வாக்கியம் போல் தோன்றினாலும் மெய்யாக அப்படியே நடக்கிறது.
            சாலை விபத்துகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் ரயில் விபத்துகளும் நடக்கின்றன. சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாமல் ரயில் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.
            இந்தியாவில் மிக ஆபத்து நிறைந்த ஒன்றாக பொதுப் போக்குவரத்து மாறிக் கொண்டு வருகிறது. பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பு அம்சங்களுக்காகச் செய்யப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகளை தண்டச் செலவினமாகவே இன்று வரை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கருதிக் கொண்டு வருகின்றன.
            பொதுப் போக்குவரத்தைப் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவுபடுத்தாமல் சுருக்கியே வைத்திருப்பதன் மூலம் நெரிசலை உண்டு பண்ணுவதும், அதன் மூலம் பலர் இறக்கக் காரணமாக இருப்பதும் ஆகிய அலட்சியத்தைப் பன்னெடுங் காலமாக பொதுப் போக்குவரத்தை நிர்வகிக்கும் அமைப்புகள் ஒரு கொள்கையைப் போலக் கையாண்டு வருகின்றன.
            பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் சாமான்ய மக்களாகவும், நடுத்தர வர்க்கமாகவும், விளம்பு நிலை மக்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே ஓட்டுரிமையைச் சரியாகப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுகளால் அதிகாரத்திற்கு வந்து விட்டு அவர்களுக்காக அடிப்படையான இந்த எளிய பொதுப் போக்குவரத்து வசதியைக் கூட செய்து கொடுக்க முடியவில்லை என்றால் வருங்காலத்தில் அவர்கள் அதிகாரத்திற்கு எதிரான மனிதர்களாக மாறுவதைத் தடுக்க முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இது குறித்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment