பாட்டரங்கின் தோட்டா சத்தங்கள்!
இசை நிகழ்ச்சிகளில் நடைபெறும் துப்பாக்கித்
தாக்குதல்கள் உலகை ஒப்பாரியில் ஆழ்த்துகிறது. இனிவரும் காலத்தில் நாம் வாழ்வது எளிதாக
இருக்கப் போவதில்லை. துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாவது சாதாரண நிகழ்வுகளாகப்
போகின்றன.
துப்பாக்கி விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்காக
மனித உயிர்களைப் பலி கொடுப்பது பாதுகாப்புப் பற்றி பேசும் அரக்க முகத்தின் மறுபக்கக்
குரல். நல்லதோ, கெட்டதோ எந்த வகையில் பார்த்தாலும் ஒரு துப்பாக்கியின் தோட்டாவில்
ஓர் உயிரின் அழிவு பூடமாக ஒளிந்து இருக்கிறது.
தனிநபர் பாதுகாப்புக்காக துப்பாக்கியை
அனுமதிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அதுவே பலரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்
அமைகிறது. இனி இது நீண்ட நாள்களுக்குத் தொடர முடியாது. தொடரும் பட்சத்தில் தோட்டாக்களைத்
தெறிக்க விடும் பயங்கார வாதக் குழுக்களுக்கு அமெரிக்கா ஒரு விளையாட்டு மைதானமாகப் போவதைத்
தடுக்க இயலாது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும்,
பொருளாதாரக் கொள்கைகளும், பிற நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கு அமெரிக்கா
கொடுக்கும் அழுத்தங்களும் அந்நாட்டிற்கு எதிராக மாறிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்கா
தனக்குத் தானே தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது.
ஒரு பக்கம் உலக அமைதி பற்றி கவலைப்படுவது
போல பேசுவதும், மறுபக்கம் ஆயுத வியாபாரத்தைத் தடையின்றி நிகழ்த்துவதும், தன் நாட்டின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று உலக நாடுகள் மீது போர் தொடுப்பதும் ஆகிய அதன்
எதிரெதிர் நிலைப்பாடுகளை உலகம் கவனித்துத் தவறினாலும், அதனால் நிகழப் போகும் பின்விளைவுகள்
அமெரிக்காவை மிக மோசமாகக் கவனிக்கச் செய்யும்.
பயங்கரவாதம் குறித்த பிரச்சனையில் அமெரிக்கா
இரட்டை வேடமில்லாத ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவே
ஒரு முடிவுக்கு வந்து விடும்.
அமெரிக்காவால் அழிந்த நாடுகளின் பட்டியல்
உலக வரலாற்றிடம் இருக்கிறது. அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இருந்து விடக் கூடாது
என்பது, அந்நாடு இனி எடுக்கப் போகும் முடிவுகளில்தான் இருக்கிறது. தன்னுடைய அழிவைத்
தானே விதைத்துக் கொள்வது மிக மோசமான துயரம். அந்த துயரத்திலிருந்து அமெரிக்கா மீண்டு
வர வேண்டும்.
*****
No comments:
Post a Comment