கயவர்கள் அல்லாதவர்களே தயவுசெய்து புரிந்து
கொள்வீர்களாக!
ஈரா ன், ஈராக்,
ஆப்கானிஸ்தான் என
அமெரிக்கா
தொடங்கி,
நாகை, இராமேஸ்வரம்,
கன்னியாகுமரி மீனவர்கள் என
இலங்கை கடற்படை
வரை
எல்லோர் மீதும்
வன்முறையைப்
பிரயோகித்தாகி
விட்டது.
இளம்பெண்டிர்
என்றால் ஆசிட் வீசி
காதல் பெண்டிர்
என்றால் ஆணவக் கொலை புரிந்து
மணமான பெண்டிர்
என்றால்
மண்ணெண்ணெய்
அல்லது எரிவாயுவில் எரித்து
நடுத்தர பெண்டிர்
என்றால் சங்கிலி பறித்து
முதிய பெண்டிர்
என்றால் கழுத்தறுத்து கொள்ளையடித்து
அத்தனை அரங்கேற்றங்களையும்
பார்த்தாகி விட்டது
படிக்காத தலித்
என்றால் வெட்டிப் புதைத்து
படித்த தலித்
என்றால் தூக்கில் தொங்க விட்டு
எதிர்க்கும்
தலித் என்றால் என்கெளண்டரில் போட்டுத் தள்ளி
கேள்வி கேட்கும்
தலித் என்றால் மலத்தையள்ளி வாயில் திணித்து
சகலத்தையும்
சந்தித்தாகி விட்டது
மிச்சமிருப்பது
களங்கமற்ற குழந்தைகள் மட்டுமே
அவர்களையும்
விட்டு வைப்பானேன் என
ஏவப்படும்
வன்முறைகள்
யார் என்ன
செய்து விட முடியும் என்ற
ஆதிக்கத் திமிரில்
செய்யப்படுபவை
என்ன செய்தாலும்
எப்படியும் வெளிவந்திட முடியும் என்ற
ஆணவ அதிகாரத்தில்
நிகழ்த்தப்படுபவை
தெய்வம் நின்றுதான்
கொல்லும் என்று
அலட்சியத்தில்
விதிமீறப்படுபவை
என்றாலும்,
காலதாமதம்
செய்யும் சட்டத்தின் பிடிக்குள்ளும்
விதியின் விளையாட்டு
இருப்பதைக்
கயவர்கள் புரிந்து
கொள்ளாமல் இருக்கலாம்
கயவர்களாய்
மாறாதிருக்க
குழந்தைமையைப்
பாலியல் வக்கிர வடிகாலாக்காதிருக்க
தயவுசெய்து
நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
*****
No comments:
Post a Comment