பேச்சின் மூலம் எழுத்துக்கு...
யாரும் யாருடைய சொல்லையும் அவ்வளவு எளிதில்
கேட்டு விட மாட்டார்கள். அவர்கள் மனம் என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பார்கள். அதற்காக
அவர்களை குறை சொல்ல முடியாது. அது மனதின் இயல்பு. ஒவ்வொரு மனிதனும் அப்படித்தான்
செயல்பட முடியும். அதிலிருந்து விடுபடுபவர்கள்தான் எது சரியானதோ அதை செய்கிறார்கள்.
மற்றவர்கள் செய்வதெல்லாம் பெரும்பாலும் மனம் போன போக்கில் செய்யப்படுபவைகள்தான்.
நாம் அனைவரும் அண்மை காலமாக அதிகமாகப்
பேசுகிறோம். பேசுவதன் மூலம் ஒரு விடுபடல் கிடைக்கும் என்று நினைக்கிறோம். அது யாரிடம்
பேசுகிறோமோ அவர்களைப் பொருத்தது. ஆனால் சிலரிடம் பேசி எந்த விடுபடல்களும் கிடைக்காது.
மேலும் மேலும் பிரச்சனை சிக்கலாகத்தான் ஆகும். அவர்களிடம் பேச்சைக் குறைப்பது நல்லது.
பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட சூழல்களில் எதாவது பேச வேண்டும் என்று
தோன்றினால் எழுதிப் பேசிக் கொள்ளலாம். தனக்குத் தானே பேசிக் கொள்வது போன்றது இது.
தன்னோடு தான் பேசுவது. சுருக்கமாகச் சொன்னால் நாட்குறிப்பு எழுதுவதுதான் இது.
மேலும் நாம் பேசுவதெல்லாம் அந்த நேரத்து
உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடுபடுதலுக்கான ஒரு வடிகால் மட்டுமே. அதனால் அதை மற்றவர்களிடம்
பேசித்தான் வடிகால்களை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி எழுதியும் வடிகால்களை
உருவாக்கிக் கொள்ளலாம். அது பாதுகாப்பானதும் கூட.
ஒருவரிடம் பிரதி வினையாற்றும் போது அவர்
தனக்கு பிடித்த விதத்தில் பிரதிவினை ஆற்ற வேண்டும் எதிர்பார்ப்பார். அப்படி எல்லா நேரத்திலும்
பிரதிவினையாற்றி விட முடியாது. சில நேரங்களில் எதிர்ப்பாகவும் ஆற்ற நேரிடும். அதை அவர்
மனதில் வைத்து ஏடாகூடாமாகவும் செயல்பட நினைப்பார். ஆகவேத்தான் மற்றவர்களிடம் பிரதி
வினையாற்றவதில் ஏற்படும் சிக்கல் தனக்குத் தானே எழுதிப் பார்ப்பதில் இல்லை என்பதால்
இம்முறை அனைவருக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
நமக்கு எழுத வரவில்லை என்று நினைக்க வேண்டாம்.
நாம் நினைக்கின்ற வடிவில் வர மாட்டேன்கிறதே தவிர, அது ஏதோ ஒரு வடிவத்தில் வந்து கொண்டுதான்
இருக்கும். ஆக தோன்றுகின்ற எல்லாவற்றையும் எழுதிக் கொள்ள வேண்டியதுதான். நன்றாக உள்ளதாக
நீங்கள் நினைப்பதில் ஒரு படைப்பின் தன்மையை உணர்வீர்கள். பாக்கி விசயங்களை அப்படியே
மனதை வெளிப்படுத்திய வடிகால்களாக நினைத்து விட்டு விடலாம். அல்லது மீண்டும் ஒருமுறை
எழுதிப் பார்க்கலாம்.
திட்டமிட்டு சிந்தனைகளை, கற்பனைகளை உருவாக்கி
விட முடியும் என்று நான் நினைக்கவில்லை. எழுத எழுத அது உருவாகிறது. எழுத எழுத எழுதும்
போதுதான் அது உருவாகிறது. சிந்தனையும் கற்பனையும் தோன்றட்டும் எழுதுவோம் என்று காத்திருக்க
முடியாது. எழுத ஆரம்பித்து விட வேண்டும். சிந்தனையும் கற்பனையும் அதன் பின் தோன்றட்டும்.
நாம் நிலையாக இருப்பதை மட்டுமே கணிக்கிறோம்
மற்றும் கவனிக்கிறோம். இயங்கும் போது நடப்பதைப் பெரும்பாலும் கணிப்பதோ, கவனிப்பதோ
இல்லை. அவ்வாறு இருக்கக் கூடாது. இயங்கும் போது நிகழ்பவைகளையும் கருத்தில் கொள்ள
வேண்டும். அப்படி கருத்தில் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆம் எது நடந்ததோ
அது நன்றாகத்தான் நடக்க நமக்கு இன்னும் தெளிவு தேவை என்பது புலனாகும். அத்தகைய அவதானிப்பு
எழுத்தில் சாத்தியம். எழுதும் போது அது கிடைக்கும்.
*****
No comments:
Post a Comment