3 Oct 2017

அபத்தத்தின் உரையாடல்

அபத்தத்தின் உரையாடல்
            எதை வேண்டுமானால் சொல்ல முடிகிறது. நல்லதைச் சொல்வது கடினமாக இருக்கிறது. சொல்லப்படுகின்ற நல்லது கெடுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
            சொல்லப்படுகின்ற நல்லது யாருக்கு சொல்லப்படுகிறதோ அவர்களின் குணாதிசயத்திற்கு ஏற்றாற் போல்தான் அது நல்லதாகவும், கெடுதலாகவும் மாறுகிறது. இந்த அடிப்படையை நல்லது சொல்வதற்கு முன் கணிக்காமல் போவதன் மூலம் ஒரு நல்லது கெடுதலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
            ஒருவருக்கு எதைப் பிடிக்குமோ அதைச் சொன்னால் அது அவருக்கு நல்லதாகப் படுகிறது.   எது பிடிக்காதோ அதைச் சொன்னால் அது கெடுதலாகப் படுகிறது. சொல்லப்படுகின்ற நல்லதும், கெட்டதும் சொல்லப்படுவதன் நன்மையிலோ, தன்மையிலோ இல்லாமல் யாருக்குச் சொல்லப்படுகிறதோ அவரின் பிடித்தத்தின் பொருத்து மாறுபடுகிறது.
            இந்த உலகம் வேடிக்கையானது. எதையும் சொல்லாதவர்கள் நல்ல பெயரை வாங்கிக் கொள்வார்கள். நல்லது சொல்ல வேண்டும் என்று நினைத்துச் சொல்பவர்கள் கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள்.
            யார் யார்க்கு எது நல்லது என்பது அவரவர்கள் மட்டும் அறிந்த ரகசியம். அதை கணித்துச் சரியாக சொல்லி விட முடியும் என்று நினைப்பது அறியாமை. எப்போதாவது ஒருவர் மனதைச் சரியாக கணித்து விட முடிகிறது என்பதற்காக எப்போதும் கணித்து விட முடியும் என்று நம்பிச் செயல்படுவதைப் போல அபத்தம் எதுவும் உண்டா?
            அந்த அபத்தத்தின் ஊடே பயணிப்பதாகவே இருக்கிறது பெரும்பான்மையானோர்களின் உரையாடல்கள்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...