புதிய கொசுக்கள்
நல்லதைக் கொண்டாடிய காலம் ஒன்று உண்டு.
நல்லதை அளவோடு ஏற்றுக் கொண்டு கெட்டதை அளவோடு கொஞ்சம் சேர்த்துக் கொண்ட காலமும்
உண்டு. நல்லதை புறக்கணிக்கும் ஒரு காலமும் உண்டு.
இப்போது நாம் மூன்றாவது கால கட்டத்தில்
இருக்கிறோம். நல்லதைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டோம். நல்லது என்று சொல்லப்படுபவைகள்
நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதாகத் தோன்றவில்லை நமக்கு.
வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்பது
எவ்வளவு நல்லது. தனிப்பட்ட லாபம் என்று வரும் போது வாங்காமல் இருப்பது எவ்வளவு கெட்டதாகி
விடுகிறது? இப்படித்தான் நல்லது என்று சொல்லப்படுபவைகள் நமது தனிப்பட்ட வாழ்வுக்குக்
கெடுதலாகி, கெடுதல்கள் நல்லதாகி அதை கடைபிடிப்பவர்களாக நாம் மாறிக் கொண்டு இருக்கிறோம்.
இப்படி இருக்கின்ற காலத்தில் கொஞ்சூண்டு
(கொஞ்சம்) நல்லவனாக இருந்தாலே அவரைக் கொண்டாடும் மனநிலைக்கு நாம் வந்து விட்டோம்.
செய்கின்ற அனைத்துத் தவறுகளையும் செய்து விட்டு அந்த கொஞ்சூண்டு (கொஞ்சம்) நல்லவனாக
இருந்து விட்டால் போதும் மக்கள் போற்றும் தலைவனாகி விடலாம்.
அடிக்கின்ற கொள்ளையில் ஒரு எலும்புத்
துண்டை எடுத்து வீசுபவன் வள்ளல் என்ற பெயரோடு வலம் வர ஆரம்பித்து விட்டான்.
தேர்தலில் நல்லவன் யார் நிற்கிறார்? என்று
வெளிப்படையாகக் கேள்விக் கேட்பவர், நல்லவர் யார் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்? என்ற
கேள்வியை மனதுக்குள் கேட்டுக் கொள்கிறார்.
வாக்குக்குப் பணம் கொடுப்பவர்களில், குறைவான
தவறு செய்யும் ஒருவராகப் பார்த்து தேர்வு செய்து எம்.எல்.ஏ., எம்.பி.யாக ஆக்கும் புதிய
ஜனநாயகக் கொள்கைக்கு நாம் வந்து விட்டோம்.
இனி நாம் எப்படி ஊழலை ஒழிப்பது? கருப்புப்
பணத்தை ஒழிப்பது? ஒரு வகையில் அந்தத் தவறுகளுக்கு நாமும் உடந்தை என்பதால் அவ்வபோது
கொசு மருந்து அடிப்பது போல அடித்து ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்துக்கும்
எதிராகவும் நம் அக்கறையைக் காட்டிக் கொண்டு கொசுக்களின் பிறப்பிடத்தைத் தூய்மை செய்யாமல்
இருந்து விடுகிறோம்.
கொசுக்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன,
ஊழல் கொசுக்களாகவும், கருப்புப் பண கொசுக்களாகவும்.
அதிலும் டெங்குக் கொசுக்கள் ரொம்ப மோசம்.
உள்ளாட்சித் தேர்தலில் தேர்வாகாமல், கட்டப் பஞ்சாயத்து செய்யாமல் ஆளையே கொன்று விடுகின்றன.
*****
No comments:
Post a Comment