மெர்சலான விவாதங்களும் எதிர் விவாதங்களும்
மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக கேள்வி
எழுப்புகிறார்கள். மெர்சல் திரைப்படமும் அதைத்தானே செய்கிறது. அதற்காக மெர்சல் திரைப்படத்துக்கு
எதிராக எழுப்பப்படும் கேள்விகளையும், விமர்சனங்களையும் தடை செய்ய வேண்டும் என்று கோர
முடியுமா?
அதே நேரத்தில் மெர்சல் திரைப்படம் எழுப்பிய
கேள்விகளையும், விமர்சனங்களையும் தடை செய்ய வேண்டும் என்று ஆணையிடுவது போல எதிர்வினையாற்றுவது
எவ்விதத்தில் நியாயம்?
அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால்
மெர்சல் திரைப்படம் விஜய்யின் ஒரு தோல்விப் படமாகவோ அல்லது அவரது சராசரியாக ஓடியப்
படங்களில் ஒன்றாக அது ஓடி முடிந்திருக்கும்.
தடை செய்ய வேண்டும், கத்திரி போட வேண்டும்
என்ற வாதங்கள் படத்திற்கான விளம்பரத்தை எகிறச் செய்து அதை வெற்றிப் படமாக மாற்றிக்
கொண்டிருக்கிறது.
மெர்சல் திரைப்படம் பேசும் விசயங்களும்,
எழுப்பும் கேள்விகளும் வழமையான குடிமைச் சமூகம் எதிர்பார்க்கும் மற்றும் விரும்பும்
விடயங்கள்தான்.
ஒரு மக்கள் நல அரசாங்கத்தின் முக்கிய கடமையே
கல்வி, மருத்துவம், சுகாதாரம் இவைகளை விலையில்லாமல் வழங்க வேண்டும். அதை தனக்கேயுரிய
மசாலாத்தனமான வாதங்களால் மெர்சல் திரைப்படம் முன் வைக்கிறது. அதில் தவறொன்றும் இருப்பதாகத்
தெரியவில்லை.
வரி என்பது ஆறில் ஒரு பங்குக்கு மேல் மிகக்
கூடாது என்று அரசியல் நீதி, அரசியல் தந்திரம் சொல்லும், தாங்கள் விரும்பும் மொழியென்று
பறைசாற்றில் கொள்ளும் அவர்களின் மொழியில் அமைந்த சாத்திர நூல்களே சொல்லும் போது
நான்கில் ஒரு பங்குக்கு மேல் வரி மிகுவதை எப்படி ஏற்க முடியும்?
அப்படிப் பார்த்தால் ஆளில் ஒரு பங்குக்கு
மேல் வரி மிகக் கூடாது என்று இருபத்து எட்டு சதவீதத்திற்கு எதிராகப் பேசும் அத்தகு
சாத்திர நூல்தான் முதலில் தடைசெய்யப்பட வேண்டிய நூலாக அமையும்.
வரி வசூல் செய்வதே மக்கள் நலத் திட்டங்களை
நிறைவேற்றவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்தானே. வசூலிக்கப்பட்ட வரியில் அப்படி
எதுவும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்படி ஏதேனும் தெரிந்திருந்தால்...
உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் குழந்தைகள்
ஏன் இறக்கிறார்கள்? மக்கள் நலம் அப்பட்டமாக மீறப்பட்டதற்கான சாட்சியம்தானே அது.
மும்பையில் தொடர்வண்டி நிலைய நெரிசலில்
சிக்கி மக்கள் ஏன் இறக்கிறார்கள்? அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தவில்லை என்பதற்கான
சாட்சியம்தானே அது.
ஆனால், அரசியல்வாதிகள் சிலரின் வாரிசுகளின்
சொத்துகள் எட்டு மடங்கும், பதினெட்டு மடங்கு என்ற வீதத்தில் பெருகுகிறது!
எளிய மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு பின்னுக்குத்
தள்ளப்படுகிறது. விலைவாசி மட்டும் பலமடங்கு முன்னுக்குத் தள்ளப்படுகிறது.
தனக்குரிய அடிப்படையான மருத்துவ வசதியை
ஒரு மனிதன் போராடித்தான் பெற வேண்டும் என்றால் அந்த நாட்டில் அவனுக்கு இறப்பதற்கான
சர்வ சகலமான வசதிகள் தவிர வேறு எந்த வசதிகளும் செய்யப்படவில்லை என்றுதான் பொருள்.
மெர்சல் போன்ற மசாலாத்தனமானப் படங்கள்
முன் வைக்கும் கேள்விகளையே தாங்க முடியவில்லை என்றால்... அதைச் சகிக்க முடியாத அரசியல்வாதிகள்
என்போர்கள் சகிப்புத்தன்மை என்பதை என்ன என்று அண்ணாவிடமும், பகுத்தறிவு என்பதை என்ன
என்று பெரியாரிடமும், சமூக சமத்துவம் என்பதை என்ன என்று அம்பேத்காரிடமும் பாடம் படிக்கத்தான்
வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய சில கூறுகளும் இருக்கத்தான்
செய்கின்றன. இந்தத் திரைப்படத்திற்குப் பிறகாவது மெர்சல் திரைப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்
உடல்நலக் குறைவு ஏற்படும் போது அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றால் நல்லது.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளியில் படிக்க வைத்தால்
மிக நல்லது. அத்துடன் அரசாங்கப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும் மிக மிக
நல்லது.
இதையே ஒரு சாக்காக வைத்து அரசாங்கத்துக்கு
எதிராக கருத்துச் சொல்வதாக கருதப்படும் இத்திரைப்படம் அரசாங்கம் நிர்ணயிக்கும் டிக்கெட்
கட்டணத்தில்தான் திரையரங்கங்களில் ஓட வேண்டும் என்று இனியொரு விதியை இத்திரைப்படத்துக்கு
எதிராக எதிர்கேள்வி எழுப்பும் அதிகார மையங்களில் இருப்பவர்கள் செய்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும்?
மேற்கூறிய இரண்டு கூறையுமே இரு தரப்புமே
செய்யாது. ஏனென்றால் மக்கள் நலம் என்றால் சாமர்த்தியமாக பின்வாங்கத் தெரியாதவர்களா
என்ன அவர்கள்?!
*****
No comments:
Post a Comment