13 Oct 2017

மாற்றங்களுக்கான துவக்கப் புள்ளி

மாற்றங்களுக்கான துவக்கப் புள்ளி
            இந்த உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
            கலந்து கொள்ளாதவர்களுக்கான அன்பும், பரிவும் வழங்கப்பட வேண்டும். பங்கேற்காதவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. ஏதோ அவர்களுக்கு அப்படித் தோன்றியது, கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார்கள். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களைப் புறக்கணிப்பதால் அவர்களுக்கு எந்தப் பாடத்தையும் கற்று தந்து விட முடியாது. அவர்களை அரவணைப்பதன் மூலம் மகத்தான மனிதநேயம் எனும் பாடத்தை உலகத்துக்குத் தர முடியும்.
            இந்த உலகில் அச்சங்களும், ஐயங்களும் நிறைய பிரிவினைகளை உருவாக்கி விட்டான. அச்சப்படுவதற்கு இந்த உலகில் எதுவும் இல்லை. துணிந்து முன்னேறிச் செல்வதற்கான பாதைகள் நிறைய இருக்கின்றன. அச்சம் கண்களை மூடுவதால் அந்தப் பாதை புலப்படாமல் போகலாம். அச்சம் என்பது அவரவர் மனதைத் தவிர இந்த உலகில் வேறு எங்கும் இல்லை. மனம் வளர்த்த அச்சம் குறுக்குச் சுவராய் நின்று வழி மறிக்கிறது. வேறு வழியே இல்லை என்று அச்சுறுத்துகிறது. அச்சத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் மனித குலம் இன்னும் பல மகத்தான கட்டங்களை அடைய முடியும்.
            அச்சத்தின் கைக் குழந்தைகளாய் அடாவடித்தனங்கள் செய்வன ஐயங்கள். அச்சப்படுதவால் ஏற்படும் ஐயங்கள் அநேகம். அச்சம் ஐயத்தைக் கொண்டு வருகிறது. ஐயம் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. ஐயம் தெளிந்த மனதில் பயம் இருப்பதில்லை. பயமற்ற மனதில் ஐயமும் இருப்பதில்லை.
            யாருடைய மனம் எப்படி பலகீனமாக இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. நமது பேச்சு அவருடைய பலகீனத்தை அதிகப்படுத்துவது போல அமையலாம். பேசும் போது மிக கவனமாகப் பேச வேண்டும். நமது பேச்சு பலகீனத்தை நீக்கி பலத்தை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும். பேச்சு மாற்றத்திற்கான கருவி. பேச்சின் மூலம் உருவாக்கும் மாற்றம் நேர்மறையாக அமைய வேண்டுமானால் பேசும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பின் பேச வேண்டும்.
            இப்படி இந்த உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட நமக்குள் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவைகளை ஒவ்வொன்றாக வரும் நாட்களில் பார்ப்போம்.
            குறிப்பாக, நீங்கள் பொறுமையாக இருந்தால், உங்களால் ஒரு தவறானத் தூண்டல் இந்த உலகுக்கு இல்லாமல் போகும். ஆம் அன்பர்களே! அவசரம் பல தவறானத் தூண்டல்களை இந்த உலகிற்கு வழங்கியபடி இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...