21 Oct 2017

மெர்சல் - படிக்க வேண்டிய பாடங்கள்

மெர்சல் - படிக்க வேண்டிய பாடங்கள்
            விஜய், அஜித் படங்கள் தரும் மனக்கிளர்ச்சி அபாரமானவை. ஒவ்வொருமுறை படம் பார்க்கும் போது சமுதாயத்தைப் புரட்டிப் போட்டு விடும் அளவுக்கு கிளர்ச்சி பிறக்கிறது. அவர்களின் கட் அவுட்டுக்கு பாலும், பீரும் பீய்ச்சி அடிப்பதோடு எல்லாம் முடிந்து விடுகிறது.
            சமூகக் கோபம், சமூக அக்கறை, சமூகப் பார்வை, சமூகச் சீர்கேடுகள் இவைகளைக் காசாக்கும் வணிக அரசியலைத்தான் அவர்களின் படங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் விரும்பிப் பார்ப்பதற்கு எதை விற்க வேண்டும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
            இப்போதைய டிரெண்ட் சமூகப் பார்வை என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்கள் அடிக்கிறார்கள்.
            ரஜினியின் பாபா,
            கமலின் இந்தியன்,
            விஜயகாந்தின் ரமணா,
            அஜித்தின் சிட்டிசன், ...
            என்று இவைகள் தரும் சமூகப் பார்வைகள் அவதானிப்பிற்கு உரியவை. இவைகளில் வென்றவையும் இருக்கின்றன. வென்று விடும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டு தோற்றவைகளும் இருக்கின்றன.
            விஜய்யின் மெர்சலை எடுத்துக் கொள்வதற்கு முன் அவருடைய முந்தைய தமிழன் என்ற படத்தை எடுத்துக் கொண்டால், அனைவருக்கும் சட்ட அறிவு இருந்தால் மாற்றம் ஏற்பட்டு விடும் என்றார். என்ன மாற்றம் ஏற்பட்டு விட்டது? அவரின் அந்தப் படத்தைப் பார்த்து சட்ட அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எத்தனை பேர்? குறைந்த பட்சம் அவருடைய ரசிகர்களில் எத்தனை பேர் அப்படி சட்ட விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டவர்கள் இருப்பார்கள்? அதைத் தொடர்ந்து அதற்காக அவர் எந்தெந்த வகையிலான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்தார்? கடைசியாக எல்லாம் ஒரு மனக்கிளர்ச்சியோடு முடிந்து விடுகிறது. மெர்சலாகி விடுவதோடு எல்லாம் சரி.
            வேலாயுதம், கத்தி, பைரவா என்று தொடர்ச்சியாக சமூக மாற்றம் தொடர்பான கருத்துகளைச் சொல்வதைத் தாண்டி முன்னெடுப்பதில் சுத்த பூஜ்யத்தைத்தான் திரைநாயகர்கள் முன் வைக்கிறார்கள்.
            ஓர் அரசாங்க ஆஸ்பத்திரி எப்படி இருக்கிறது என்று கூட தெரியாதவர்களாகவே  அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது இயக்குநர்கள்தான் அதைப் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
            நிலைமை இப்படியிருக்க, அரசியல்வாதிகள் எனப்படுவோர்கள் அவர்களுக்கு எதிராகப் போடும் கூச்சல்கள் வேடிக்கையாக இருக்கின்றன. அவர்களை ரசித்து இதற்காக திரையில் பார்ப்பார்களே தவிர, அதற்காக மக்கள் அவர்களை அவசரப்பட்டு ஒரு முதலமைச்சராக ஆக்கி விட மாட்டார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதிருக்கிறது.
            மெர்சல் திரைப்படத்தைப் பொருத்த வரையில் திரைத்துறைக்கு எதிரான வரியையே அவர்கள் பகடி செய்கிறார்கள். நேரடியாக அதை அவர்கள் செய்ய முடியாது என்பதால் அரசின் அதிகபட்ச வரிக்கும் இலவச மருத்துவத்துக்கும் ஒரு முடிச்சைப் போடுகிறார்கள். ஒருவேளை திரைத்துறைக்கு எந்த வரிகளும் விதிக்கப்படாமல் இருக்குமானால் அவர்கள் இந்த விசயத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள். நமக்கு ஏன் வம்பு என்று இருந்திருப்பார்கள்.
            மக்களின் உண்மையான வலிகளை, வேதனைகளைத் திரைப்படங்கள் பேச வேண்டும். அவைகளை ஹீரோயிசத்தால் அடித்து நொறுக்கி விட முடியும் என்ற தவறான பிம்பக் கட்டுமானத்தை தயவுசெய்து இனிமேலும் உருவாக்குவதைக் கைவிடுங்கள் மெர்சல் மக்களே.
            மக்களுக்கு நிறைய பிரச்சனைகள், சிக்கல்கள் வர வேண்டும், அப்போதுதான் அதை வைத்து படமெடுக்க முடியும் என்பது போல இருக்கின்றன சமீப காலமாக திரைத்துறை கைகொள்ளும் திரை கருக்கள்.
            மெர்சல்களின் வழியே எந்த மாற்றத்தை விளைவிக்க முடியாது என்பதற்கு முதல்வன் படமே சான்றாகிறது. இன்று ஒருநாள் எவரும் முதல்வர் ஆகலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. மாற்றம் நிலவுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
            உண்மையான பிரச்சனைகளுக்கானப் போராட்டங்களின் வெற்றி தனிமனித ஹீரோயிசத்தால் நிகழ்வதாகக் காட்டும் கருத்துருவாக்கத்தை இந்தத் திரைபடங்கள் இனியாவது மறுகட்டுமானம் செய்ய வேண்டும்.
            மக்களோடு மக்களாக களமாடி, எளிமையாக அவர்களின் பிரச்சனைகளை அணுகுவதன் மூலமே மாற்றங்கள் நிகழ்கின்றன. அதற்கு பத்து ஆள்களை பறக்க விடும் தனிநபர் ஹீரோயிசம் எந்த விதத்திலும் உதவாது. அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் கொண்ட அரவணைப்போடு கூடிய தலைமைப் பண்புதான் அதற்கானத் தேவை. அதை இரண்டரை மணி நேரம் மக்களை இருட்டறையில் கட்டிப் போடும் ஜாலத் திறமையால் மட்டுமே ஒரு ஹீரோவால் பெற்று விட முடியாது.

*****

1 comment:

  1. இலவச மருத்துவம் வேண்டாம்..ஐந்து ரூபாய்க்கும் வைத்தியம் வேண்டாம். திரையரங்குகளில் கட்டணக்கொள்ளையை விஜய் கண்டுகொள்ளத் தயாரா?

    ReplyDelete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...