நாம் சாதிக்க வேண்டியது...
நாம் சாதிப்பது என்பது அன்பாக இருப்பதுதான்.
நாம் இலக்கை அடைவது என்பதும் அன்பாக இருப்பதுதான். நமக்கானப் பாராட்டுதல்கள், புகழ்ச்சிகள்
எல்லாம் நாம் அன்பாக இருப்பதற்காகத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது
என்னவோ மிகப்பெரிய யாரும் செய்ய முடியாத செயல்களைச் செய்வதற்காக அல்ல என்பதை நாம்
எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும்.
செயல்களில் அளவு முக்கியம். அது அளவு கடந்து
போகும் போது ஓர் இறுக்கமான மனநிலையே ஏற்படும். அந்த இறுக்கமான மனநிலை ஒரு மிருகத்தனமான
தன்மையோடு இயங்கும். ஆகவே அளவுக்கு மிஞ்சும் போது அமுதம் நஞ்சாகும் விதியைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
யாரும் குறை கூறி விடுவார்களோ என்று நினைக்கக்
கூடாது. குறைகள் கூறட்டும். அவர்களே நிறைகளும் கூறுவர். இது மாறி மாறி நடப்பதுதான்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எதையும் தவிர்க்க நினைப்பதுதான் பிரச்சனை.
அதாவது இங்கு குறைகளைத் தவிர்க்க நினைப்பதுதான் பிரச்சனை. அதுவும் ஓர் அங்கம் என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் இருக்கும் வாழ்வில் அதுவும் இருக்கும்.
ஒருவருடைய பொறுமை அனைத்துக் குறைகளையும்
தவிடு பொடியாக்கி விடும். குறைகளுக்கான ஒரே பதில் அமைதியும், பொறுமையும்தான்.
*****
No comments:
Post a Comment