நுழைவுத் தேர்வு கலாச்சாரம்
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு கலாச்சாரம்
அழிக்கப்படுகிறது. பின் இடைநிலைக் கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்காக ஆசிரியர் தகுதித்
தேர்வு எனும் டெட் தேர்வின் வடிவில் மாறுவேடம் பூண்டு வருகிறது.
நல்ல வேளையாக டெட் தேர்வு தமிழக அரசால்
நடத்தப்படும் தேர்வாக அமைந்தது. கொஞ்சம் அசட்டையாக இருந்திருந்தால் அதுவும் மத்திய
அரசின் தேசிய அளவிலானத் தேர்வாக மாறி இருந்திருக்கும்.
போகிற போக்கில் டி.என்.பி.எஸ்.ஸி. தேர்வுகளும்
தேசிய நுழைவுத் தேர்வின் கட்டுபாட்டில் வரும் அபாயம் இருக்கக் கூடும். கண்ணுக்குத்
தெரியாமல் இருப்பதால் நிகழப் போகுபவைகள் நிகழாமல் இருந்து விடுமா என்ன?
மத்திய அரசால் அறிவிக்கப்படும் பெரும்பாலான
நுழைவுத்தேர்வு மற்றும் கல்வி வடிவங்கள் மாநில அரசிற்கு விருப்பம் இருந்தால் பின்பற்றிக்
கொள்ளலாம், அல்லது தங்களுக்கு விருப்பமான வடிவிலே தொடரலாம் என்றுதான் இருக்கிறது.
அந்த உரிமை மாநிலங்களுக்குத் தரப்பட்டு
இருக்கிறதா என்ற வினாவே நீட் தேர்வு விளைவின் தொடர்ச்சியாக எழுகிறது.
தனது சுயமரியாதை அணுகுமுறையால் இந்தியாவின்
தனித்த மாநிலம் என்ற சிறப்பு எப்போதும் தமிழகத்திற்கு உண்டு. இப்போதும் உண்டா? என்பது
போகப் போகத்தான் தெரிய வரும்.
போதிய எண்ணிக்கையில் கல்விச் சாலைகளை
நிறுவ முடியாத சாக்குப் போக்குத் தனத்திற்குத்தான் நுழைவுத் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.
இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள்
உண்டா? அந்த எண்ணிக்கைக்குப் படித்து மருத்துவர்கள் உருவாக மருத்துவக் கல்லூரிகள் உண்டா?
ஆக இதிலும் ஒரு பற்றாக்குறையை உருவாக்குவதன் மூலம் அதை ஒரு மதிப்புமிக்க கடைச்சரக்காக்கப்
பார்க்கிறார்கள்.
கடைச்சரக்காக்கிய கல்வியை அப்படியல்ல,
உனக்குத் தகுதியில்லை அதனால் உனக்கு இதைப் படிப்பதற்குத் தகுதியில்லை என்பதைக் காட்டுவதற்காகவே
நுழைவுத் தேர்வை ஒரு கலாச்சாரம் போல் நுழைக்கப் பார்க்கிறார்கள்.
"கட் ஆப் மதிப்பெண்ணைக் கடந்து வந்தால்
படித்துக் கொள் அல்லது காசிருந்தால் படித்துக் கொள். இந்த இரண்டின் வரையறைக்குள்
நீ வரவில்லையா? நீ வாங்கிய மதிப்பெண்ணுக்குப் படிக்க வாய்ப்பிருந்தால் படி. இல்லாவிட்டால்
எக்கேடு கெட்டாலும் போ!"
மேற்படிச் சொல்லி விட்டு இதற்கு எதிராகப்
போராடினால் நீயும் ஒரு தீவிரவாதியே என்றால்
என்ன சொல்வது?
*****
No comments:
Post a Comment