கையெழுத்தும் தலையெழுத்தும் தலைவிதியும்
அவ்வளவு எளிதாக ஒரு கையெழுத்தை இடுபவன்
அல்லன் எஸ்.கே. ஏதோ ஞாபகத்தில் நீதிமன்ற அழைப்பாணை ஒன்றிற்குக் கையொப்பம் இட்டு விட்டான்.
எஸ்.கே.வுக்கு நீதிமன்ற அழைப்பாணை அஞ்சலில்
வந்திருக்கிறது. இப்படி நேரில் வந்ததில்லை. முதன் முதலாக நீதிமன்றப் பணியாளர் மூலம்
நேரில் வந்ததில் அவருக்கு மதிப்புக் கொடுப்பதாக நினைத்து கையொப்பம் இட்டு விட்டான்.
கையெழுத்து வாங்கிக் கொண்டவர் அதற்கான
நகலையோ, வழக்கு விபரத்தையோ கொடுக்காமல் சென்று விட்டார். அவர் கையெழுத்து வாங்கியது
எதற்கு என்றால், அவர் வந்து சென்றதற்கு அத்தாட்சியாம்.
எஸ்.கே. கையொப்பம் இட்டதற்கு எதையாவது
அவர் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். எஸ்.கே.யும் கேனையனைப் போல் கையெழுத்துப்
போட்டு விட்டு எதுவும் கேட்காமல் விட்டு விட்டான்.
ஆரம்பித்ததே வில்லங்கம்.
எஸ்.கே. உடனடியாக இந்த செய்தியை வழக்கறிஞருக்கு
அலைபேசி செய்து அவர் காதில் போட்டான். வழக்கறிஞர் அவனை புரட்டிப் போட்டு கடுமையாக
தனக்குத் தெரிந்த வார்த்கைளால் எல்லாம் வறுத்து எடுத்தார். அவனுடைய ஒரு கையெழுத்தால்
வழக்கின் திசையே மாறி விடும் எட்டு திசைக்குமாக எகிறிக் குதித்தார்.
எஸ்.கே. செய்திருந்த ஒரு நல்ல காரியம்
அந்த நீதிமன்றப் பணியாளரிடம் அவரது அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான். உடனே அந்தப் பணியாளருக்கு
அழைத்து, உடனடியாக திரும்ப வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவரோ வருவதாகச் சொல்லி
விட்டு வராமல் சென்று விட்டார்.
எஸ்.கே.வின் ஐயமும், குழப்பமும் அதிகமானது.
உளறிக் கொட்டும் நிலைக்கு ஆளானான். உளறிக் கொட்டினால்தான் மன நிம்மதியாக இருக்க முடியும்
என்ற நிலையில் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பித் தள்ளினான்.
ட்ரூ காலரில் போட்டு பார்த்து அந்தப்
பணியாளரின் எண்ணைச் சோதனைக்கு உள்ளாக்கினான். அவர் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர்தான்
என்பது உறுதியாயிற்று.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த பணியாளரிடமிருந்தே
எஸ்.கே.வுக்கு அழைப்பு வந்தது. அன்று இரவுக்குள் நீதிமன்ற வழக்கின் மனு அவன் கைக்கு
வந்து சேரும் என அவர் உறுதி தந்தார்.
அந்தோ பரிதாபம் பாருங்கள்! அன்று இரவு
அது வந்து சேரவில்லை. மறுநாள் காலை பத்து மணி வாக்கில்தான் வந்து சேர்ந்தது.
எஸ்.கே. அந்த அழைப்பாணை மனுவை எழுத்துக்கு
எழுத்து, சொல்லுக்குச் சொல், வாக்கியத்திற்கு வாக்கியம், பாராவிற்குப் பாரா படித்துப்
பார்த்தான்.
அவன் வழக்கறிஞர் சொன்ன அளவிற்கு அதில்
பதற்றம் அடைய எதுவும் இல்லை. என்றாலும் ஒரு கையெழுத்து எத்தகைய சிக்கல்களை உருவாக்கும்
என்பதை எஸ்.கே. நேரடியாக அனுபவித்த அனுபவம் அது.
இப்போதெல்லாம் எஸ்.கே. ஒரு சாதாரண முன்னெழுத்து
ஒப்பம் இடுவது என்றாலும் நான்கு முறை யோசிக்கிறான்.
நன்கு யோசித்து அவன் எடுக்கும் முடிவு
அநேகமாக கையெழுத்துப் போடாமல் இருப்பதாகத்தான் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment