நீங்கள் ஏன் அடிக்கிறீர்கள்?
இலக்குகளைக் காட்டி மிரள வைப்பதும், அதன்
அடிப்படையில் இறுக்கங்களை அதிகரிப்பதும் இன்றைய நவீன வாழ்வின் புதிய மிரட்டல் வடிவமாக
உருபெற்று வருகிறது.
ஒவ்வொரு மனிதனும் கடினமாக நடந்து கொள்வதன்
பின்னணியில் இலக்குகளும், இறுக்கங்களும் இருக்கின்றன.
இத்தனை ஆண்டுகளாக எஸ்.கே. யாரையும் அடித்ததில்லை.
கடந்த சில நாள்களாக குடும்பத்தில் உள்ளவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டான். அதுவும்
சில நாட்களில் வெகு தீவிரம் அடையும்.
அடிப்பதன் மூலம் ஓர் பயம் ஏற்பட்டு அதன்
மூலம் ஓர் ஒழுக்கம் உண்டாகும் என்று அவன் காரணம் கற்பிக்கிறான். அவன் அடிப்பதன் பின்னால்
இருப்பது அவனுக்கு வழங்கப்பட்ட இலக்கும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட இறுக்கமும்தான்.
அடித்துப் பயத்தின் மூலம் வளரும் மகிழ்ச்சி
இல்லாத ஒழுக்கம் என்ன பயனைத் தந்து விடப் போகிறது? அது குடும்பத்தில் இருப்பவர்களிடம்
மேலும் ஓர் இறுக்கத்தைத்தான் வளர்க்கும்.
யாரையும் அடிப்பது என்பது எஸ்.கே.வின்
மனதுக்கு ஒவ்வாத ஒன்றாகவே நெடுங்காலமாக அவன் மனதில் இருந்தது. எப்படி அவன் அடிக்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தான் என்பதே ஓர் ஆச்சர்யம்தான்.
மென்மையான மனம் படைத்த எஸ்.கே.வும் அப்படி
மாறுகிறான் என்றால் இலக்குகளும், இறுக்கங்களும் மனதை அப்படி திரிபடையச் செய்து மனிதனைக்
காட்டுமிராண்டித் தனமாக மாற்றுகின்றன.
இலக்குகளில் தெளிவாக இருப்பவர்களே இறுக்கங்களிலிருந்து
தப்பிக்கிறார்கள்.
மிகையான இலக்குகளை எதிர்கொள்வது தன்னம்பிக்கையன்று.
அதிலிருந்து தப்பித்து வருவதே புத்திசாலிதனம்.
நாம் மிகையான இலக்குகளை எதிர்கொள்வது
தன்னம்பிக்கை என்று தவறாகப் புரிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இது எஸ்.கே.வுக்குப் புரிந்தால் பரவாயில்லை.
யார் அந்த எஸ்.கே. என்று கேட்கிறீர்களா? அது நீங்களாகவும் இருக்கலாம்!
*****
No comments:
Post a Comment