21 Sept 2017

கருத்துகள் செய்யும் கொலை!

கருத்துகள் செய்யும் கொலை!
            குடும்பம், பொறுப்புகள், அதிகாரங்கள் எதிலும் நாம் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை. பரபரப்பாக இருக்கிறோம். மனவிரைவே சுறுசுறுப்பு என்பதாகக் கற்பித்துக் கொள்கிறோம். சிடுமூஞ்சித் தனமாக கோபத்தை அடையாளமாக்கிக் கொள்கிறோம்.
            மெல்ல மெல்ல மனதில் கற்பிதங்கள் தானாகத் தோன்றுகின்றன.
            எல்லாவற்றையும் நாம்தான் கட்டுபாடாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் சரியாக கவனிக்க மாட்டார்கள், நாம் இருப்பதால்தான் ஓர் ஒழுங்கு நிலைத்திருக்கிறது, நாம்தான் இவைகளையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற ஆணவ வயப்பட்ட கருத்துகளைக் கொள்ளத் தொடங்குகிறோம்.
            எங்கோ வானத்தில் அதிகாரச் சிறகுகளைக் கொண்டு பறப்பதாக நினைக்கிறோம். பூமியில் ஆட்டம் காணச் செய்யும் நம் பாதங்கள் இருப்பதை மறந்து விடுகிறோம். பரபரக்கிறோம். பதற்றம் கொள்கிறோம்.
            கோபத்தில், வேகத்தில் மற்றவர்களைத் திட்டுவதை, அடிப்பதை தார்மீக உரிமை என்பது போல பேசவும், அவ்வாறு நடந்து கொள்ளவும் செய்கிறோம்.
            அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவைகளுக்குக் காரணம் கூறவும் கூடாது. அமைதியான முறைகளில் நம்பிக்கை இழக்கும் போதுதான் நாம் அவைகளை நாடுகிறோம்.
            ஏன் அமைதியான முறைகளில் நாம் நம்பிக்கை இழக்க வேண்டும்? திட்டுவதன் மூலமோ, அடிப்பதன் மூலமோ வன்முறையான ஒரு வெற்றியை வளர்ப்பதை விட, அமைதியான முறையில் தோல்விகளைத் தாங்கிக் கொள்வது மேலானது.
            எந்த நிலையிலும் பொறுமை இழக்காமல் இருப்பது பலம். பொறுமையை இழப்பது பலவீனம். பல நேரங்களில் பொறுமையை இழக்கச் செய்யும் பலவீனத்தையே விரும்பச் செய்கிறோம். அதற்குக் காரணம் நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே எப்போதும் இருப்பதுதான்.
            சில நேரங்களில் திட்டுவதோ, அடிப்பதோ மரணத்தையும் சம்பவிக்கச் செய்யக் கூடியது. ஓர் உயிரை இழக்கச் செய்வது என்பது கொடூரமானது. அதை எதனால் சமன் செய்ய முடியும்? அதற்காக நாம் கூறும் காரணங்கள் அல்பத்தனமானவை. ஒன்றை நடத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக ஓர் உயிரை எடுத்துக் காட்டுவது நல்லதன்று.
            புகழ் மீதான வெறி, பொறாமை, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மிகை உணர்ச்சி, கட்டுபடுத்திக் கொள்ள இயலா கோபம் - இவைகள் கூட சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறித்து விடக் காரணமாகி விடுகிறது. அதனால்தான் நாம் வெ்றறி என்று சொல்லக் கூடியவைகள் பல நேரங்களில் வெற்றியாக இருப்பதில்லை.
            நம் கருத்துகள் கொலை செய்வதை நம்ப முடியாது. ஆனால் அப்படியும் நடக்கும் என்பதை நடந்த பின்பு நம்புவதை விட நம் கருத்துகளை நமக்கு நாமே சீராய்வு செய்து கொள்வது எவ்வளவோ நல்லது!

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...