மரண வாய்க்கால்கள்
ஒரு அணையைக் கட்டி வைத்து
நமக்கு தண்ணீர் இல்லையென ஏமாற்றலாம்
இந்திய தேசம் என்ற பெயரில்
நம் நெய்வேலி நிலக்கரியிலெடுத்த மின்சாரத்தையும்
கூடங்குளத்து மின்சாரத்தையும்
அணு அளவு கூச்ச நாச்சமின்றிப் பெற்றுக்
கொள்ளலாம்
நமது ரேசன் அரிசியைக் கடத்திக் கொண்டு
நமக்கான தண்ணீரைத் தேக்குவதில்
அணை உடைந்து விடலாம் என
கூக்குரல் போடலாம்
நமக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்
நிறுத்தி வைக்கப்படலாம்
அங்கே ஒரு முள்ளி வாய்க்கால் இருந்ததென்றால்
இங்கே நீரற்று பாளம் பாளமாக வெடித்த
வயல் வாய்க்கால்கள் இருக்கின்றன
பண்பாடு மிக்க நாம் என்ன செய்யலாம்?
நமக்கான மரண வாய்க்கால்களைத்
தயாரித்துத் தந்தவர்களுக்கு
நன்றி சொல்லலாம்!
*****
No comments:
Post a Comment