தீ தின்ற மிச்ச ஒளியில் விடியும் பகல்கள்
சங்கப் பணியாள நண்பர்கள் அநேகர்க்கு அநேகர்கள்
இருக்கிறார்கள். உண்மையானப் போராட்ட உணர்வுள்ள அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில்
இருக்கிறார்கள்.
அவர்களை நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க
அதிகாரிகளிடம் மோதச் சொல்கிறார்கள். அவர்களும் மோதுகிறார்கள். நமது நடுத்தர வர்க்க
அதிகாரிகளும் நம் அன்பையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நமது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
இப்படி நாம் பெற்று வரும் அலுவலக ரீதியானப் பலன்கள் அதிகம். அதுவே நம் உரிமை என்றாலும்
அதைப் பெற்றுத் தருவதை ஒரு சாதனை என்பது போல நம் கீழ்மட்ட சங்கப் பணியாள நண்பர்கள்
நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி அவர்கள் எந்த மேல்மட்ட முடிவையும்
எடுத்து விடக் கூடாது என்பதில் மேல்மட்ட சங்கநிலைப் பணியாளர்கள் கருத்தா இருக்கிறார்கள்.
மேற்கட்டுமான நிலையில் இருக்கும் சங்கத்தவர்கள்
இப்படித்தான் கீழ்கட்டுமான நிலையில் இருக்கும் சங்கத்தவர்களைப் பயன்படுத்துகின்றன நெடிதென
வளர்த்து விடும் ஒரு கருவேப்பிலை மரத்தைப் போல. அவர்களும் அந்த அளவோடு நின்று விடுகிறார்கள்.
கீழ்க் கட்டுமான நிலையில் இருக்கும் நமது
சங்கத்தவர்களோ, அதில் திருப்தி அடைந்து, அதுவே அபூர்வம் என்று உண்மையான சங்கவாதியாக
திருப்தி கொண்டு விடுகின்றனர்.
உண்மையாகப் பெற வேண்டிய உரிமைகளை, நமக்கே
உரிய சலுகைகளைப் பெற வேண்டிய நிலையில் அதற்கான போராட்ட உரிமையை மேற்கட்டுமான நிலையில்
இருக்கும் சங்கவாதிகள் பெற்றுக் கொண்டு கீழ்க் கட்டுமான நிலையில் இருக்கும் சங்கவாதிகள்
மேல் ஓர் ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறார்கள்.
போவது உனது உயிராக இருந்தாலும் எங்களிடமிருந்து
கட்டளை வரும் வரை நீ உயிர் காப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என்ற மேட்டிமை
அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.
கீழ் மட்டப் போராட்ட வரலாறு இங்கு இன்னும்
அடிமைப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. அது மேல் மட்டம் கட்டளையிட்டால் போய் நிற்கும்
ஆட்டு மந்தைகளின் வரலாறு என்று சொன்னாலும் பிழையில்லாததாகவே உள்ளது.
போராடுவதற்கான தனி உரிமையை சங்கத்தின்
மேல் இருக்கும் விசுவாசம் என்ற பெயரில் அடகு வைத்து விடும் கீழ் மட்ட நிலையிலான சங்கப்
பணியாளர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டே சற்றே மிகப் பெரிய சங்கங்கள் உருவாகின்றன.
சற்றே மிகப் பெரிய சங்கங்கள் செய்து கொள்ளும்
சமரசத்தால் அதில் இருக்கும் உண்மையானப் போராளிகள் கறை படும் அவலம் தவிர்க்கவே முடியாதோ
என்ன!
மேல் மட்ட வரலாறு கீழ் நோக்கி திருப்பப்
படுவதை மறுத்து, கீழ் மட்ட வரலாற்றை மேல் நோக்கி திருப்பினால் தவிர்க்கவே முடியாதது
என்று ஒன்று உள்ளதோ என்ன?
பெட்டிகளில் ஒலிக்கும் கரன்சிகளின் சத்தங்களில்
உரிமை முழக்கங்கள் இரைச்சலாகக் கருதப்படும் போதும்,
விசுவாசம் என்ற பெயரில் நியாயமான கோரிக்கைகளை
எழுப்பாமல் மெளனியாக இருப்பது நல்லபிள்ளைத் தனம் என வற்புறுத்தப்படும் போதும்
தீ தின்ற மிச்சத்தின் ஒளியில் விடிகிறது
நமது பகல்கள் என்பதை அவர்கள் மறந்து விடாமல் இருப்பார்களாக!
*****
No comments:
Post a Comment