போராட்டம் என்பது எதிர் வடிவம் மட்டும்
அல்ல!
நிறைய கசப்பை விழுங்கி விட்டோம். அதனால்
கசப்பு கசப்பாகத் தெரியவில்லை நமக்கு.
இனிப்பு நமக்கு வழங்கப்படவில்லை. அதனால்
இனிப்பின் சுவையை மறந்து விட்டோம்.
கசப்பே நன்றாக இருக்கும் போது இனிப்பு
எதற்கு என்று கேட்டால் என்ன செய்வது? மிச்சம் இருக்கும் ஐந்து சுவைகளையும் தடை செய்து
விடத்தான் வேண்டும் போலும்.
அரசுத் துறைப் பணியாளர்கள் உரிமைகளை இழக்கும்
போது அது மற்ற துறைகளுக்கு மிக விரைவாகப் பரவும்.
அரசுத் துறைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம்
கிடையாது என்றால் தனியார் துறைகள் கொஞ்சம் நஞ்சம் பெயருக்காக வழங்கிக் கொண்டிருக்கும்
ஓய்வூதியத்தை முதல் வேலையாக நிறுத்தும்.
அரசுத் துறைப் பணியாளர்களுக்கும், தனியார்
துறைப் பணியாளர்களுக்கும் ஊதிய வேறுபாடுகள் உண்டென்றாலும் அவர்கள் முன் வைத்துப் போராடுவதற்கான
சான்றாதாரமாக அரசுப் பணியாளர்களின் உரிமைகளும், சலுகைகளே வழிகாட்டியாக அமைகின்றன.
அரசே அப்படிச் சலுகைகளும், உரிமைகளும்
எதுவும் வழங்கவில்லை என்றால், அரசே வழங்காத போது நாங்கள் எதற்கு வழங்க வேண்டும் என்று
கைவிரிப்பதற்கு தனியார் துறைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
அரசுத் துறைப் பணியாளர்களின் போராட்டம்
பொது மக்களுக்கு எதிரானது என்பது போல ஒரு கருத்தாக்கம் பரப்பப்பட்டு வருகிறது. அது
எந்த அளவுக்கு உண்மை?
பொது மக்களால் எளிதில் பெற முடியாத அளவுக்கு
நுழைவுத் தேர்வுகளும், தகுதித் தேர்வுகளும் வைக்கப்பட்டு, காசு இருந்து அதற்கானப் பயிற்சி
பெற்றவர்கள் மட்டுமே அரசுப் பணிகளில் சேர முடியும் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும்
பிம்பத்தினால் ஏற்பட்டிருக்கும் நிலைமை அப்படி ஒரு தோற்றத்தைத் தருகிறது.
உடைக்கப் பட வேண்டிய ஒரு பிம்பக் கட்டுமானத்தை
உடைக்காமல், பூட்டிடப்பட்ட சமூக நீதிக்கான வாசலை திறக்காமல் அரசுத் துறைப் பணியாளர்களின்
உரிமைப் போராட்டங்களை பொதுமக்களுக்கான எதிர் போராட்டமாக திசை திருப்புவது காலங்காலமாக
செய்யப்பட்டு கொண்டிருக்கும் தந்திரமான ஒரு சாமர்த்தியவாதம்தானே!
பொது மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க
வைப்பதில் ஓர் அரசு வேலையில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட முடியாதா என்ற ஏக்கம்
இருப்பதை எத்தனை அப்பாவிகளின் முகத்தில் பார்க்க முடிகிறது.
தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப்
படிக்க வைத்தாலும் பெரும்பாலானப் பெற்றோர்கள் அரசுப் பணிக்காகவும் தங்கள் பிள்ளைகளை
தயார் செய்கிறார்கள்.
அவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகும் போது
எதற்காக அவர்கள் தங்கள் பிள்ளைகளை எதற்காக அரசுப் பணிக்காகப் படிக்க வைத்தார்களோ,
அதற்கான பணிப் பாதுகாப்பும், பணிக்கான உரிமைகளும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
இந்த வகையில் பார்த்தால் போராட்டம் என்பது
வெறும் ஓர் எதிர் வடிவம் மட்டும் அல்ல. தங்கள் உரிமைக்காகவும், உணர்வுக்காகவும் குரல்
கொடுக்கும் மனித குலத்தின் தார்மீக வடிவமும் கூட.
*****
No comments:
Post a Comment