மெய்யானக் குழந்தை மையக் கற்றல் என்பது...
குழந்தைகளின் கற்றல் அதிகரிக்கப்பட வேண்டும்
என்பதற்காகச் செய்யப்படும் பம்மாத்து வேலைகள் அவர்களின் உற்சாகமான உலகைச் சிதைப்பது
போல அமைந்து விடக் கூடாது. நம் முயற்சிகள் அப்படித்தான் மாறிக் கொண்டு இருக்கின்றன.
பலவிதமான கற்றல்களை சொல்லிக் கொடுக்க
வேண்டும் என்ற நம்முடைய முயற்சிகள் நம்மை பிரஸ்தாபிப்பதற்கான முயற்சிகளாக மாறிக் கொண்டு
இருக்கின்றன. இவைகள் மூலம் நம்மை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று நாம் எதிர்நோக்குகிறோம்.
அந்தப் பாராட்டுதல்களுக்காக நாம் எதையும் செய்யத் துணியலாம். அவ்வாறு செய்ய முயல்வது
குழந்தைகளின் மன உலகைச் சிதைப்பதாக அமைந்து விடக் கூடும்.
குழந்தைகளின் அடிப்படையான மனநிலைகளான உற்சாகம்,
அன்பு, துறுதுறுவென்ற தன்மை ஆகியவற்றை நாம் சிதைத்து விடக் கூடாது.
இன்னும் அதிகமாக, இன்னும் அதிகமாக என்று
நாம் போய்க் கொண்டு இருப்பது ஓர் ஆபத்தான அறிகுறி. அதற்கு இன்னும் அதிகம், இன்னும்
அதிகம் என்ற வெறிதான் தெரியுமே தவிர, மனிதத்தன்மையான உணர்வுகள் புரியாது.
ஒரு கட்டத்தில் இலக்குகள் என்பவை நம்மிடம்
வெறியைத் தூண்டுகின்றன. அதை அடைந்து தீர்வதே கெளரவத்திற்கான வழி என்பது போல தோற்றம்
தரவும் செய்கின்றன. அந்த உணர்வுகள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பயங்கரமானவை. மிருகத்தனமாக
உணர்வுகளை மனதில் தோற்றுவிக்கவும் செய்கின்றன.
உண்மையில் ஒரு குழந்தை குறைவாக கற்றால்தான்
என்ன? குழந்தைகள் அதிகமாக கற்பதை விடவும், அதிகமாகக் கற்க வேண்டும் என்ற நெருக்கடியான
அணுகுமுறையால் கல்வியிலிருந்து பின்வாங்கி விடாமலோ அல்லது விலகி விடாமலோ இருப்பது
முக்கியம்.
நான்கு செய்திகள் தெரிந்தால் கூட போதும்.
அது உயர்வான கற்றலே. நானூறு செய்திகள் தெரிந்த கற்றலில் குழந்தைகளின் உயிர்த்தன்மை
சிதைக்கப்பட்டு இருந்தால் அதை விட மோசமான கற்றல் வெறென்ன இருக்க முடியும்?
பொதுவாக நாம் பாராட்டுகள், புகழ்ச்சிகள்
போன்றவைகளை மிக அதிகமாக எதிர்பார்க்கிறோம். அதற்காக எதையும் பலி கொடுக்கத் துணிகிறோம்.
அப்படிப் பலியானவைகள்தான் நம்மிடம் இருந்த குழந்தைத் தன்மை கலந்த மனித நேயமும், மனித
நேயம் கலந்த மானுடப் பார்வையும். நம்முடைய எளிமையான அன்பை நாம் இப்படித்தான் பல நேரங்களில்
பலி கொடுப்பது கூட அறியாமல் பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
குழந்தைகளின் கற்றலுக்காக கழைக் கூத்தாடி
வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்மிடம் இருக்கும் குழந்தைகள் நிச்சயம்
நம் மூலமாகவே கற்பார்கள். அவர்களை அன்பான சூழலுக்குள் நாம் கொண்டு வரவில்லை என்றால்
நமக்கான தேவை அங்கில்லை என்பதை நியாயமாக உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி, மாயாஜால
வேலைகளைக் காட்டி நம்மை நோக்கிக் கொண்டு வரக் கூடாது. அப்படி அவர்களைக் கொண்டு வருவது
விளக்கை நோக்கி ஈர்க்கும் விட்டில் பூச்சிகளின் கதையாகத்தான் முடியும்.
*****
No comments:
Post a Comment